|
பாடல் எண் :1993 | கருகு கார்முகில் போல்வதொர் கண்டனை உருவ நோக்கியை யூழி முதல்வனைப் பருகு பாலனைப் பால்மதி சூடியை மருவு மைந்தனை நான்மறக் கிற்பனே. |
| 10 | பொ-ரை: கருமை உடைய கார்முகில் போல்வதாகிய ஒப்பற்ற திருநீலகண்டனும், அழகுடைய நோக்கு இயைந்த ஊழிக் காலத்தும் உள்ள முதல்வனும், பருகுதற்குரிய பால் போன்ற வெண்மதியைச் சூடியவனும், அன்பால் நினைவாரை மருவுகின்ற மைந்தனுமாகிய பெருமானை நான் மறக்கும் வல்லமை உடையேனோ? கு-ரை: கருகு - கருகிய. கார்முகில் - கார்காலத்து மேகம். உருவ நோக்கியை - உலகம் உருப்பெற்று உண்டாம்படி நோக்கியவனை. ஊழிமுதல்வனை - ஊழிக்காலத்தும் அழியாத முதற்கடவுளை. பருகு - பருகுகின்ற. பாலனை - பாலாயிருப்பவனை. அல்லது பாலனைய என்று விரிக்க. மருவும் - நம்முள்ளத்தே வந்து பொருந்தும். |
|