பாடல் எண் :2006
அலரு நீருங்கொண் டாட்டித் தெளிந்திலர்
திலக மண்டலந் தீட்டித் திரிந்திலர்
உலக மூர்த்தி யொளிநிற வண்ணனைச்
செலவு காணலுற் றாரங் கிருவரே.

2
பொ-ரை: திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் உலக மூர்த்தியாகிய ஒளிநிற வண்ணம் உடைய இறைவனைப் பூவும் நீரும்கொண்டு அபிடேகித்துத் தெளிவடைந்திலராய்த் திருச்சாந்து தீட்டித் திரிந்திலராய்ச் சென்று காண முயன்று காண்கிலர் ஆயினார்.
கு-ரை: அலர் - பூ. ஆட்டி - அபிடேகித்து. தெளிந்திலர் - அறிவு தெளியப்பெற்றாரில்லை. திலகமண்டலம் - பொட்டு. தீட்டி - எழுதி. ஒப்பனை செய்து. திரிந்திலர் - வலமாகச் சுற்றவும் செய்யாதவர்கள் ஒளிநிறம் - ஒளிவடிவான் நிறம். செலவு காணலுற்றார் - மேலும் கீழுமாகிய வான் நிலம் சென்று காணத் தொடங்கினர். இருவர் - திருமால், பிரமன்.