பாடல் எண் :2009
எருக்கங் கண்ணிகொண் டிண்டை புனைந்திலர்
பெருக்கக் கோவணம் பீறி யுடுத்திலர்
தருக்கி னாற்சென்று தாழ்சடை யண்ணலை
நெருக்கிக் காணலுற் றாரங் கிருவரே.

5
பொ-ரை: திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் எருக்க மாலை கொண்டு இண்டை புனைந்து வழிபடாதவராய் அழகு பெருக்குதற்பொருட்டுக் கோவணம் கிழித்து உடுத்தாதவராய் ஆணவத்தினாற்சென்று சடைதாழ்கின்ற அண்ணலாராகிய பெருமானைத் தத்தமில் நெருக்கிச்சென்று காண முயன்று காண்கிலர் ஆயினார்.
கு-ரை: எருக்குக் கொண்டு - வெள்ளெருக்குப் பூவைக் கொண்டு. கண்ணியாகிய இண்டை - தலைமாலையாகிய இண்டை. புனைந்திலர் - கட்டிச் சூட்டினாரில்லை. பெருக்கக் கோவணம் - பெரிதாய்க் கோவணத்தை. பீறி - கிழித்து. உடுத்திலர் - சூட்டினாரில்லை. தருக்கு - செருக்கு. தாழ் - தொங்குகின்ற. நெருக்கி - நெருங்கி.