பாடல் எண் :2016
பொன்னுள் ளத்திரள் புன்சடை யின்புறம்
மின்னுள்ளத்திரள் வெண்பிறை யாயிறை
நின்னுள் ளத்தருள் கொண்டிருள் நீங்குதல்
என்னுள் ளத்துள தெந்தை பிரானிரே.

1
பொ-ரை: எந்தை பெருமானே! பொன்னும் நினையுமாறு அழகு திகழ்கின்ற புன்சடையின் புறத்தே ஒளியுள்ளதாகிய திரண்ட வெண்பிறை சூடியவனே! நின் உள்ளத்துச் சிறிது அருள் கொண்டு என்னுள்ளத்துள் உளதாகிய இருள் நீங்கிடத் திருவுளம் பற்றியருள்க.
கு-ரை: பொன்னுள்ளத்திரள் - பொன்நிறமுள்ளதாய்த் திரண்ட. புன்சடையின் - மெல்லிய சடையின். புறம் - மேலே. மின்னுள்ளத்திரள் - மின்னலின் ஒளி உள்ளதாய்த் திரண்ட. வெண்பிறையாய் - வெள்ளிய பிறைச்சந்திரனை அணிந்தவனே. இறை - சிறிது காலம். நின்னுள்ளத்து - உனது திருவுள்ளத்தில். அருள் கொண்டு - கருணைகொள்ளொதலால். இருள் நீங்குதல் - அஞ்ஞானம் அகலுதல். இதனால் இப்பதிகம் மனத்தொகை எனப்பட்டது. என் மனத்தே நிகழ்வதாயுள்ள உள்ளக் கிடக்கை. எந்தை பிரானிரே - என் தந்தையாகிய பெருமானே. இர் - முன்னிலை விகுதி. ஏ - அசை. பெருமானே! வெண்பிறையாய்! இறைப் பொழுது நின்னுள்ளத்து அருள்கொள்ளுதலால் அறியாமையாகிய இருள் நீங்குதல் என் மனத்தே நிகழ்ந்துள்ளது என முடிவு செய்க.