பாடல் எண் :2021
பைம்மா லும்மர வாபர மாபசு
மைம்மால் கண்ணியோ டேறுமைந் தாவெனும்
அம்மா லல்லது மற்றடி நாயினேற்
கெம்மா லும்மிலே னெந்தை பிரானிரே.

6
பொ-ரை: எந்தை பெருமானே! படத்தொடு ஒலிக்கும் அரவுடையவனே! பரமனே! இடபத்தின்மேல் அஞ்சனம் தீட்டிய கண்ணுடைய உமாதேவியோடு ஏறும் மைந்தனே! என்றும் அம்மயக்கமல்லது மற்று அடி நாயினேனுக்கு வேறு எம் மயக்கமும் இல்லேன். 'நாயினேன்' என்றும் பாடம்.
கு-ரை: பைம்மாலும் அரவா - படத்தோடு கூடிய நஞ்சினால் மயங்குதற்கு ஏதுவான. பசு - பசு இனத்துளதாய எருது. மைம்மால் கண்ணி - பார்வதி. பார்வதி - கரிய உருவத்தையும் மயக்கம் செய்யும் விழியையுமுடையவள். மைந்தா - வலிபனே. அம்மால் அல்லது - அந்த ஆசை அல்லாமல். அடிநாயினேற்கு - அடிமையனாகிய நாயேனுக்கு. எம்மாலும் - வேறு எந்த ஆசையும்.