|
பாடல் எண் :2027 | அண்ட மாரிரு ளூடு கடந்தும்பர் உண்டு போலுமோ ரொண்சுட ரச்சுடர் கண்டிங் காரறி வாரறி வாரெலாம் வெண்டிங் கட்கண்ணி வேதிய னென்பரே. |
| 2 | பொ-ரை: அண்டங்களையெல்லாம் உள்ளடக்கிய செறிந்த இருள் நடுவே கடந்து அப்பால் ஓர் ஒள்ளிய சுடர் உண்டுபோலும்; அச்சுடரைக் கண்டு இங்கு ஆர் அறியவல்லவர்கள்? அறிபவரெல்லாம் அதனை வெள்ளிய பிறையினை முடிக்கண்ணியாகக்கொண்ட வேதியன் என்பர். கு-ரை: அண்டமார் இருள் - எல்லா உலகங்களிலும் பொருந்திய இருள் அனைத்தையும். ஊடுகடந்து - இடையே நீங்கிச் சென்று. உம்பர் - வானோர் உலகிற்கும் உயர்ந்த உலகின்கண். போலும், ஒப்பில்போலி. ஒள்சுடர் - ஒளியையுடைய விளக்கு. அச்சுடர் இங்குக் கண்டறிவார் யார் - அவ்விளக்கை இவ்வுலகத்து அறிபவர் யார்? திங்கட் கண்ணி - பிறையாகிய தலைமாலை. |
|