பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள் வாசம் நாள்மலர் கொண்டு அடி வைகலும், ஈசன் எம்பெருமான் இடைமருதினில் பூசம், நாம் புகுதும், புனல் ஆடவே.
மறையின் நாள்மலர் கொண்டு அடி வானவர்- முறையினால் முனிகள் வழிபாடு செய் இறைவன், எம்பெருமான், இடைமருதினில் உறையும் ஈசனை, உள்கும், என் உள்ளமே.
கொன்றைமாலையும் கூவிளம் மத்தமும் சென்று சேரத் திகழ்சடை வைத்தவன், என்றும் எந்தைபிரான், இடைமருதினை நன்று கைதொழுவார் வினை நாசமே.
இம்மை வானவர் செல்வம் விளைத்திடும், அம்மையே பிறவித்துயர் நீத்திடும், எம்மை ஆளும், இடைமருதன் கழல் செம்மையே தொழுவார் வினை சிந்துமே.
ழுவண்டு அணைந்தன வன்னியும் கொன்றையும் கொண்டு அணிந்த சடைமுடிக் கூத்தனார், எண் திசைக்கும் இடைமருதா!ழு என, விண்டுபோய் அறும், மேலைவினைகளே.
ஏறு அது ஏறும் இடைமருது ஈசனார், கூறுவார் வினை தீர்க்கும் குழகனார், ஆறு செஞ்சடை வைத்த அழகனார்க்கு ஊறி ஊறி உருகும், என் உள்ளமே.
விண் உளாரும் விரும்பப்படுபவர்; மண் உளாரும் மதிக்கப்படுபவர்; எண்ணினார், பொழில் சூழ் இடை மருதினை நண்ணினாரை நண்ணா, வினை; நாசமே.
வெந்த வெண் பொடிப் பூசும் விகிர்தனார், கந்தமாலைகள் சூடும் கருத்தனார், எந்தை, என் இடை மருதினில் ஈசனைச் சிந்தையால் நினைவார் வினை தேயுமே.
வேதம் ஓதும் விரிசடை அண்ணலார், பூதம் பாட நின்று ஆடும் புனிதனார் ழுஏதம் தீர்க்கும் இடைமருதா!ழு என்று- பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.
கனியினும், கட்டி பட்ட கரும்பினும், பனிமலர்க்குழல் பாவை நல்லாரினும், தனி முடீ கவித்து ஆளும் அரசினும், இனியன் தன் அடைந்தார்க்கு, இடைமருதனே.
முற்றிலா மதி சூடும் முதல்வனார்; ஒற்றினார், மலையால் அரக்கன் முடி; எற்றின் ஆர் கொடியார்; இடைமருதினைப் பற்றினாரைப் பற்றா, வினைப் பாவமே.
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும் மறையின் ஓசையும் வைகும், அயல் எலாம், இறைவன், எங்கள் பிரான் இடைமருதினில் உறையும் ஈசனை உள்கும், என் உள்ளமே.
மனத்துள் மாயனை, மாசு அறு சோதியை, புனிற்றுப் பிள்ளை வெள்ளை(ம்) மதி சூடியை, எனக்குத் தாயை, எம்மான் இடைமருதனை, நினைத்திட்டு ஊறி நிறைந்தது-என் உள்ளமே.
வண்டு அணைந்தன வன்னியும் மத்தமும் கொண்டு அணிந்த சடைமுடிக் கூத்தனை ழுஎண்திசைக்கும் இடைமருதா!ழு என, விண்டுபோய் அறும், மேலைவினைகளே.
ழுதுணை இலாமையில்-தூங்கு இருள் பேய்களோடு அணையல் ஆவது எமக்கு அரிதே!ழு எனா, இணை இலா இடைமா மருதில்(ல்) எழு பணையில் ஆகமம் சொல்லும், தன் பாங்கிக்கே.
மண்ணை உண்ட மால் காணான், மலர் அடி; விண்ணை விண்டு அயன் காணான், வியன்முடி; ழுமொண்ணை மா மருதா!ழு என்று என் மொய்குழல் பண்ணை ஆயமும் தானும் பயிலுமே.
மங்கை காணக் கொடார், மணமாலையை; கங்கை காணக் கொடார், முடிக் கண்ணியை; நங்கைமீர்! இடைமருதர் இந் நங்கைக்கே எங்கு வாங்கிக் கொடுத்தார், இதழியே?