முற்றிலா முலையாள் இவள் ஆகிலும், அற்றம் தீர்க்கும் அறிவு இலள் ஆகிலும், ழுகற்றைச் செஞ்சடையன், கடம்பந்துறைப் பெற்றம் ஊர்திழு என்றாள்-எங்கள் பேதையே.
தனகு இருந்தது ஓர் தன்மையர் ஆகிலும், முனகு தீரத் தொழுது எழுமின்களோ! கனகப்புன் சடையான் கடம்பந்துறை நினைய வல்லார் நீள் விசும்பு ஆள்வரே.
ஆரியம் தமிழோடு இசை ஆனவன், கூரிய(க்) குணத்தார் குறி நின்றவன், காரிகை உடையான், கடம்பந்துறை, சீர் இயல் பத்தர், சென்று அடைமின்களே!
பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை- வண்ண நல் மலரான், பல தேவரும், கண்ணனும்(ம்), அறியான் கடம்பந்துறை நண்ண, நம் வினை ஆயின நாசமே.
மறை கொண்ட(ம்) மனத்தானை மனத்துளே நிறை கொண்ட(ந்) நெஞ்சின் உள் உற வைம்மினோ! கறைகண்டன்(ன்) உறையும் கடம்பந்துறை சிறைகொண்ட(வ்) வினை தீரத் தொழுமினே!
நங்கை பாகம் வைத்த(ந்) நறுஞ்சோதியைப் பங்கம் இன்றிப் பணிந்து எழுமின்களோ! கங்கைச் செஞ்சடையான் கடம்பந்துறை, அங்கம் ஓதி அரன் உறைகின்றதே.
அரிய நால்மறை ஆறு அங்கம் ஆய், ஐந்து புரியன்; தேவர்கள் ஏத்த நஞ்சு உண்டவன்; கரிய கண்டத்தினான்; கடம்பந்துறை உரிய ஆறு நினை, மட நெஞ்சமே!
பூ மென்கோதை உமை ஒருபாகனை ஓமம் செய்தும் உணர்மின்கள், உள்ளத்தால்! காமற் காய்ந்த பிரான் கடம்பந்துறை நாமம் ஏத்த, நம் தீவினை நாசமே.
பார் அணங்கி வணங்கிப் பணி செய நாரணன் பிரமன்(ன்) அறியாதது ஓர் காரணன் கடம்பந்துறை மேவிய ஆர் அணங்கு ஒருபால் உடை மைந்தனே
நூலால் நன்றா நினைமின்கள், நோய் கெட! பால் ஆன் ஐந்து உடன் ஆடும் பரமனார்; காலால் ஊன்று உகந்தான்; கடம்பந்துறை மேலால் நாம் செய்த வல்வினை வீடுமே.