தளரும் கோள் அரவத்தொடு தண்மதி வளரும் கோல வளர்சடையார்க்கு இடம்- கிளரும் பேர் இசைக் கின்னரம் பாட்டு அறாக் களரும் கார்க் கடம்பூர்க் கரக்கோயிலே.
வெல வலான், புலன் ஐந்தொடு; வேதமும் சொல வலான்; சுழலும் தடுமாற்றமும் அல வலான்; மனை ஆர்ந்த மென்தோளியைக் கல வலான்; கடம்பூர்க் கரக்கோயிலே.
பொய் தொழாது, புலி உரியோன் பணி செய்து எழா எழுவார் பணி செய்து எழா, வைது எழாது எழுவார் அவர் எள்க, நீர் கைதொழா எழுமின், கரக்கோயிலே!
துண்ணெனா, மனத்தால்-தொழு, நெஞ்சமே! பண்ணினால் முனம் பாடல் அது செய்தே; எண் இலார் எயில் மூன்றும் எரித்த முக்- கண்ணினான் கடம்பூர்க் கரக்கோயிலே!
சுனையுள் நீலமலர் அன கண்டத்தன், புனையும் பொன்நிறக் கொன்றை புரிசடைக் கனையும் பைங்கழலான், கரக்கோயிலை நினையும் உள்ளத்தவர் வினை நீங்குமே.
குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும் வணங்கி வாழ்த்துவர், அன்பு உடையார் எலாம்- வணங்கி வான் மலர் கொண்டு அடி வைகலும் கணங்கள் போற்று இசைக்கும் கரக்கோயிலே.
பண்ணின் ஆர் மறை பல்பலபூசனை மண்ணினார் செய்வது அன்றியும், வைகலும் விண்ணினார்கள் வியக்கப்படுமவன் கண்ணின் ஆர் கடம்பூர்க் கரக்கோயிலே.
அங்கை ஆர் அழல் ஏந்தி நின்று ஆடலன், மங்கை பாட மகிழ்ந்து உடன் வார்சடைக் கங்கையான், உறையும் கரக்கோயிலைத் தம் கையால்-தொழுவார் வினை சாயுமே.
நன் கடம்பனைப் பெற்றவள் பங்கினன், தென் கடம்பைத் திருக்கரக்கோயிலான் தன் கடன்(ன்) அடியேனையும் தாங்குதல்; என் கடன் பணி செய்து கிடப்பதே.
பணம் கொள் பாற்கடல் பாம்பு அணையானொடும், மணம் கமழ் மலர்த்தாமரையான் அவன், பிணங்கும் பேர் அழல் எம்பெருமாற்கு இடம்- கணங்கள் போற்று இசைக்கும் கரக்கோயிலே.
வரைக்கண் நால்-அஞ்சுதோள் உடையான் தலை அரைக்க ஊன்றி அருள் செய்த ஈசனார், திரைக்கும் தண் புனல் சூழ், கரக்கோயிலை உரைக்கும் உள்ளத்தவர் வினை ஓயுமே.
ஒருவராய் இரு மூவரும் ஆயவன், குரு அது ஆய குழகன், உறைவு இடம்- பரு வரால் குதிகொள்ளும் பழனம் சூழ் கரு அது ஆம் கடம்பூர்க் கரக்கோயிலே.
வன்னி, மத்தம், வளர் இளந்திங்கள், ஓர் கன்னியாளை, கதிர் முடி வைத்தவன்; பொன்னின் மல்கு புணர்முலையாளொடும் மன்னினான்; கடம்பூர்க் கரக்கோயிலே.
இல்லக் கோலமும், இந்த இளமையும், அல்லல் கோலம், அறுத்து உய வல்லிரே! ஒல்லைச் சென்று அடையும், கடம்பூர் நகர்ச் செல்வக் கோயில் திருக்கரக்கோயிலே!
வேறு சிந்தை இலாதவர் தீவினை கூறு செய்த குழகன் உறைவு இடம்- ஏறு செல்வத்து இமையவர்தாம் தொழும் ஆறு சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.
திங்கள் தங்கிய செஞ்சடைமேலும் ஓர் மங்கை தங்கும் மணாளன் இருப்பு இடம்- பொங்கு சேர் மணல் புன்னையும், ஞாழலும், தெங்கு, சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.
மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கு எலாம் எல்லை ஆன பிரானார் இருப்பு இடம்- கொல்லை முல்லை, கொழுந் தகை மல்லிகை, நல்ல சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.
தளரும் வாள் அரவத்தொடு தண்மதி வளரும் பொன்சடையார்க்கு இடம் ஆவது- கிளரும் பேர் ஒலிக் கின்னரம் பாட்டு அறாக் களரி ஆர் கடம்பூர்க் கரக்கோயிலே.
உற்றாராய் உறவு ஆகி உயிர்க்கு எலாம் பெற்றார் ஆய பிரானார் உறைவு இடம்- முற்றார் மும்மதில் எய்த முதல்வனார், கற்றார் சேர், கடம்பூர்க் கரக்கோயிலே.
வெள்ளை நீறு அணி மேனியவர்க்கு எலாம் உள்ளம் ஆய பிரானார் உறைவு இடம்- பிள்ளை வெண்பிறை சூடிய சென்னியான், கள்வன், சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.
பரப்புநீர் இலங்கைக்கு இறைவன்(ன்) அவன் உரத்தினால் அடுக்கல்(ல்) எடுக்கல்(ல்) உற, இரக்கம் இன்றி இறை விரலால்-தலை அரக்கினான் கடம்பூர்க் கரக்கோயிலே.