என்னில் ஆரும் எனக்கு இனியார் இல்லை; என்னிலும்(ம்) இனியான் ஒருவன்(ன்)உளன்; என் உளே உயிர்ப்பு ஆய்ப் புறம் போந்து புக்கு என் உளே நிற்கும், இன்னம்பர் ஈசனே.
மட்டு உண்பார்கள், மடந்தையர் வாள் கணால் கட்டுண்பார்கள், கருதுவது என்கொலோ? தட்டி முட்டித் தள்ளாடித் தழுக்குழி எட்டுமூர்த்தியர், இன்னம்பர் ஈசனே,
ழுகனலும் கண்ணியும், தண்மதியோடு, உடன் புனலும், கொன்றையும், சூடும் புரிசடை; அனலும், சூலமும், மான்மறி, கையினர்ழு எனலும், என் மனத்து, இன்னம்பர் ஈசனே.
மழைக்கண் மா மயில் ஆலும் மகிழ்ச்சியான் அழைக்கும், தன் அடியார்கள் தம் அன்பினை; குழைக்கும் தன்னைக் குறிக்கொள வேண்டியே இழைக்கும், என் மனத்து-இன்னம்பர் ஈசனே.
தென்னவன்(ன்); எனை ஆளும் சிவன் அவன்; மன்னவன்; மதி அம் மறை ஓதியான்; முன்னம் அன்னவன் சேரலன், பூழியான், இன்னம் இன்பு உற்ற இன்னம்பர் ஈசனே.
விளக்கும், வேறுபடப் பிறர் உள்ளத்தில்; அளக்கும், தன் அடியார் மனத்து அன்பினை; குளக்கும் என்னைக் குறிக்கொள வேண்டியே இளக்கும், என் மனத்து-இன்னம்பர் ஈசனே.
சடைக்கணாள், புனலாள்; அனல் கையது; ஓர் கடைக்கணால் மங்கை நோக்க, இமவான்மகள் படைக்கணால் பருகப்படுவான் நமக்கு இடைக்கண் ஆய் நின்ற இன்னம்பர் ஈசனே.
தொழுது தூ மலர் தூவித் துதித்து நின்று அழுது காமுற்று அரற்றுகின்றாரையும், பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும், எழுதும், கீழ்க்கணக்கு-இன்னம்பர் ஈசனே.
விரியும் தண் இளவேனில் வெண்பிறை புரியும் காமனை வேவ, புருவமும் திரியும் எல்லையில் மும்மதில் தீ எழுந்து எரிய, நோக்கிய இன்னம்பர் ஈசனே.!
சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும் முனிவனாய் முடிபத்து உடையான் தனைக் கனிய ஊன்றிய காரணம் என்கொலோ, இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே?