5.24 திருஒற்றியூர்
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1305

ஒற்றி ஊரும் ஒளி மதி, பாம்பினை;
ஒற்றி ஊரும் அப் பாம்பும் அதனையே
ஒற்றி ஊர ஒரு சடை வைத்தவன்
ஒற்றியூர் தொழ, நம் வினை ஓயுமே.

1
உரை
பாடல் எண் :1306

வாட்டம் ஒன்று உரைக்கும் மலையான் மகள்
ஈட்டவே, இருள் ஆடி, இடு பிணக்-
காட்டில் ஓரி கடிக்க வெடித்தது ஓர்
ஓட்டை வெண் தலைக் கை-ஒற்றியூரரே.

2
உரை
பாடல் எண் :1307

கூற்றுத் தண்டத்தை அஞ்சிக் குறிக்கொண்மின்,
ஆற்றுத் தண்டத்து அடக்கும் அரன் அடி!
நீற்றுத் தண்டத்தராய் நினைவார்க்கு எலாம்
ஊற்றுத்தண்டு ஒப்பர்போல், ஒற்றியூரரே.

3
உரை
பாடல் எண் :1308

சுற்றும் பேய் சுழலச் சுடுகாட்டு எரி
பற்றி ஆடுவர்; பாய் புலித்தோலினர்-
மற்றை ஊர்கள் எல்லாம் பலி தேர்ந்து போய்
ஒற்றியூர் புக்கு உறையும் ஒருவரே.

4
உரை
பாடல் எண் :1309

புற்றில் ஆடு அரவு ஆட்டி, உமையொடு
பெற்றம் ஏறு உகந்து, ஏறும் பெருமையான்
மற்றையாரொடு வானவரும் தொழ
ஒற்றியூர் உறைவான் ஓர் கபாலியே.

5
உரை
பாடல் எண் :1310

போது தாழ்ந்து புதுமலர் கொண்டு-நீர்-
மாது தாழ்சடை வைத்த மணாளனார்;
ஓது வேதியனார், திரு ஒற்றியூர்;-
பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.

6
உரை
பாடல் எண் :1311

பலவும் அன்னங்கள் பல்மலர்மேல்-துஞ்சும்,
கலவமஞ்ஞைகள் கார் என எள்குறும்,
உலவு பைம்பொழில் சூழ் திரு ஒற்றியூர்
நிலவினான் அடியே அடை-நெஞ்சமே!

7
உரை
பாடல் எண் :1312

ஒன்று போலும் உகந்து அவர் ஏறிற்று;
ஒன்று போலும் உதைத்துக் களைந்தது;
ஒன்று போல் ஒளி மா மதி சூடிற்று;
ஒன்று போல் உகந்தார், ஒற்றியூரரே.

8
உரை
பாடல் எண் :1313

படை கொள் பூதத்தார், வேதத்தர், கீதத்தர்,
சடை கொள் வெள்ளத்தர், சாந்தவெண் நீற்றினர்,
உடையும் தோல் உகந்தார், உறை ஒற்றியூர்
அடையும் உள்ளத்தவர் வினை அல்குமே.

9
உரை
பாடல் எண் :1314

வரையின் ஆர் உயர் தோள் உடை மன்னனை
வரையினால் வலி செற்றவர் வாழ்வு இடம்,
திரையின் ஆர் புடை சூழ் திரு ஒற்றியூர்,
உரையினால் பொலிந்தார் உயர்ந்தார்களே.

10
உரை