கொடி கொள் செல்வ விழாக் குணலை அறாக் கடி கொள் பூம்பொழில் கச்சி ஏகம்பனார், பொடிகள் பூசிய பூந்துருத்தி(ந்) நகர் அடிகள், சேவடிக்கீழ் நாம் இருப்பதே!
ஆர்த்த தோல் உடை கட்டி ஓர் வேடனாய்ப் பார்த்தனோடு படை தொடும் ஆகிலும், பூத்த நீள் பொழில் பூந்துருத்தி(ந்) நகர்த் தீர்த்தன் சேவடிக்கீழ் நாம் இருப்பதே!
மாதினை மதித்தான், ஒருபாகமா; காதலால் கரந்தான், சடைக் கங்கையை; பூதநாயகன் பூந்துருத்தி(ந்) நகர்க்கு ஆதி; சேவடிக்கீழ் நாம் இருப்பதே!
மூவனாய், முதல் ஆய், இவ்வுலகு எலாம் காவனாய், கடுங் காலனைக் காய்ந்தவன்; பூவின் நாயகன் பூந்துருத்தி(ந்) நகர்த் தேவன்; சேவடிக்கீழ் நாம் இருப்பதே!
செம்பொனே ஒக்கும் மேனியன்; தேசத்தில் உம்பரார் அவரோடு அங்கு இருக்கிலும், பொன் பொன்னார் செல்வப் பூந்துருத்தி(ந்) நகர் நம்பன்; சேவடிக்கீழ் நாம் இருப்பதே!
வல்லம் பேசி வலிசெய் மூன்று ஊரினைக் கொல்லம் பேசிக் கொடுஞ்சரம் நூறினான் புல்லம் பேசியும்-பூந்துருத்தி(ந்) நகர்ச் செல்வன்; சேவடிக்கீழ் நாம் இருப்பதே!
ஒருத்தனாய் உலகு ஏழும் தொழ நின்று பருத்த பாம்பொடு பால்மதி கங்கையும் பொருத்தன் ஆகிலும், பூந்துருத்தி(ந்) நகர்த் திருத்தன் சேவடிக் கீழ் நாம் இருப்பதே!
அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர் கருத நின்றவர் காண்பு அரிது ஆயினான், பொருத நீர் வரு பூந்துருத்தி(ந்) நகர்ச் சதுரன், சேவடிக்கீழ் நாம் இருப்பதே!
செதுகு அறா மனத்தார் புறம் கூறினும், கொதுகு அறாக் கண்ணின் நோன்பிகள் கூறினும், பொதுவின் நாயகன் பூந்துருத்தி(ந்) நகர்க்கு அதிபன் சேவடிக்கீழ் நாம் இருப்பதே!
துடித்த தோள் வலி வாள் அரக்கன்தனைப் பிடித்த கைஞ் ஞெரிந்து உற்றன, கண் எலாம் பொடிக்க ஊன்றிய, பூந்துருத்தி(ந்) நகர்ப் படிக் கொள், சேவடிக்கீழ் நாம் இருப்பதே!