உடையர் கோவணம், ஒன்றும் குறைவு இலர்- படை கொள் பாரிடம் சூழ்ந்த பைஞ்ஞீலியார்; சடையின் கங்கை தரித்த சதுரரை அடைய வல்லவர்க்கு இல்லை, அவலமே.
மத்தம்மாமலர் சூடிய மைந்தனார் சித்தராய்த் திரிவார் வினை தீர்ப்பரால்; பத்தர்தாம் தொழுது ஏத்து பைஞ்ஞீலி எம் அத்தனைத் தொழ வல்லவர் நல்லரே.
விழுது சூலத்தன்; வெண் மழுவாட்படை, கழுது துஞ்சு இருள் காட்டு அகத்து ஆடலான்; பழுது ஒன்று இன்றிப் பைஞ்ஞீலிப் பரமனைத் தொழுது செல்பவர்தம் வினை தூளியே.
ஒன்றி மாலும் பிரமனும் தம்மிலே நின்ற சூழல் அறிவு அரியான் இடம் சென்று பார்!-இடம் ஏத்து பைஞ்ஞீலியுள் என்றும் மேவி இருந்த அடிகளே.
வேழத்தின்(ன்) உரி போர்த்த விகிர்தனார், தாழச் செஞ்சடைமேல் பிறை வைத்தவர் தாழைத்தண்பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியார்; யாழின் பாட்டை உகந்த அடிகளே.
குண்டுபட்டு, குறி அறியாச் சமண்- மிண்டரோடு படுத்து, உய்யப் போந்து, நான், கண்டம் கார், வயல் சூழ்ந்த பைஞ்ஞீலி, எம் அண்டவாணன், அடி அடைந்து உய்ந்தெனே.
வரிப் பை ஆடு அரவு ஆட்டி மதகரி- உரிப்பை மூடிய உத்தமனார் உறை திருப் பைஞ்ஞீலி திசை தொழுவார்கள் போய் இருப்பர், வானவரோடு இனிது ஆகவே.
கோடல் கோங்கம் புறவு அணி முல்லைமேல் பாடல் வண்டு இசை கேட்கும் பைஞ்ஞீலியார், பேடும் ஆணும் பிறர் அறியாதது ஓர்- ஆடும் நாகம் அசைத்த-அடிகளே.
கார் உலாம் மலர்க்கொன்றை அம்தாரினான், வார் உலாம் முலைமங்கை ஓர் பங்கினன், தேர் உலாம் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலி எம் ஆர்கிலா அமுதை, அடைந்து உய்ம்மினே!
ழுதருக்கிச் சென்று தடவரை பற்றலும் நெருக்கி ஊன்ற நினைந்து, சிவனையே அரக்கன் பாட, அருளும் எம்மான் இடம், இருக்கை ஞீலிழு என்பார்க்கு இடர் இல்லையே.