பண்டு செய்த பழவினையின் பயன் கண்டும் கண்டும், களித்திகாண், நெஞ்சமே! வண்டு உலாம் மலர்ச் செஞ்சடை ஏகம்பன் தொண்டனாய்த் திரியாய், துயர் தீரவே!
நச்சி நாளும் நயந்து அடியார் தொழ, இச்சையால் உமை நங்கை வழிபட,- கொச்சையார் குறுகார்-செறி தீம்பொழில் கச்சி ஏகம்பமே கைதொழுமினே!
ஊன் நிலாவி இயங்கி, உலகு எலாம் தான் உலாவிய தன்மையர் ஆகிலும், வான் உலாவிய பாணி பிறங்க, வெங்- கானில் ஆடுவர்-கச்சி ஏகம்பரே.
இமையா முக்கணர், என் நெஞ்சத்து உள்ளவர், தமை யாரும்(ம்) அறிவு ஒண்ணாத் தகைமையர், இமையோர் ஏத்த இருந்தவன் ஏகம்பன்; நமை ஆளும்(ம்) அவனைத் தொழுமின்களே!
மருந்தினோடு நல் சுற்றமும் மக்களும் பொருந்தி நின்று, எனக்கு ஆய எம் புண்ணியன்; கருந்தடங் கண்ணினாள் உமை கைதொழ இருந்தவன் கச்சி ஏகம்பத்து எந்தையே.
பொருளினோடு நல் சுற்றமும் பற்று இலர்க்கு அருளும் நன்மை தந்து, ஆய அரும்பொருள்; சுருள் கொள் செஞ்சடையான்; கச்சி ஏகம்பம் இருள் கெடச் சென்று கைதொழுது ஏத்துமே!
மூக்கு வாய் செவி கண் உடல் ஆகி வந்து ஆக்கும் ஐவர்தம் ஆப்பை அவிழ்த்து, அருள் நோக்குவான்; நமை நோய்வினை வாராமே காக்கும் நாயகன் கச்சி ஏகம்பனே.
பண்ணில் ஓசை, பழத்தினில் இன்சுவை, பெண்ணொடு ஆண் என்று பேசற்கு அரியவன், வண்ணம் இ(ல்)லி, வடிவு வேறு ஆயவன், கண்ணில் உள் மணி-கச்சி ஏகம்பனே.
திருவின் நாயகன் செம் மலர்மேல் அயன் வெருவ, நீண்ட விளங்கு ஒளிச்சோதியான்; ஒருவனாய், உணர்வு ஆய், உணர்வு அல்லது ஓர் கருவுள் நாயகன் கச்சி ஏகம்பனே.
இடுகுநுண் இடை, ஏந்து இளமென்முலை, வடிவின், மாதர் திறம் மனம் வையன்மின்! பொடி கொள் மேனியன், பூம்பொழில் கச்சியுள் அடிகள், எம்மை அருந்துயர் தீர்ப்பரே.
இலங்கை வேந்தன் இராவணன் சென்று தன் விலங்கலை எடுக்க(வ்), விரல் ஊன்றலும், கலங்கி, ழுகச்சி ஏகம்பவோ!ழு என்றலும், நலம் கொள் செல்வு அளித்தான், எங்கள் நாதனே.
பூமேலானும் பூமகள் கேள்வனும் ழுநாமே தேவர்!ழு எனாமை, நடுக்கு உற தீ மேவும்(ம்) உருவா! திரு ஏகம்பா! ஆமோ, அல்லல்பட, அடியோங்களே?
அருந் திறல்(ல்) அமரர் அயன் மாலொடு திருந்த நின்று வழிபடத் தேவியோடு இருந்தவன்(ன்) எழில் ஆர், கச்சி ஏகம்பம் பொருந்தச் சென்று புடைபட்டு எழுதுமே.
கறை கொள் கண்டத்து எண்தோள் இறை முக்கணன், மறை கொள் நாவினன், வானவர்க்கு ஆதியான், உறையும் பூம்பொழில் சூழ் கச்சி ஏகம்பம் முறைமையால் சென்று முந்தித் தொழுதுமே.
பொறிப் புலன்களைப் போக்கு அறுத்து, உள்ளத்தை நெறிப்படுத்து, நினைந்தவர் சிந்தையுள் அறிப்பு உறும்(ம்) அமுது ஆயவன் ஏகம்பம் குறிப்பினால், சென்று, கூடி, தொழுதுமே.
சிந்தையுள் சிவம் ஆய் நின்ற செம்மையோடு அந்திஆய், அனல் ஆய், புனல், வானம் ஆய், புந்திஆய், புகுந்து உள்ளம் நிறைந்த எம் எந்தை ஏகம்பம் ஏத்தித் தொழுமினே!
சாக்கியத்தொடு மற்றும் சமண்படும் பாக்கியம்(ம்) இலார் பாடு செலாது, உறப் பூக் கொள் சேவடியான் கச்சி ஏகம்பம் நாக்கொடு ஏத்தி, நயந்து, தொழுதுமே.
மூப்பினோடு முனிவு உறுத்து எம்தமை ஆர்ப்பதன் முன், அணி அமரர்க்கு இறை காப்பது ஆய கடிபொழில் ஏகம்பம் சேர்ப்பு அது ஆக, நாம் சென்று அடைந்து உய்துமே.
ஆலும் மா மயில் சாயல் நல்லாரொடும் சால நீ உறு மால் தவிர், நெஞ்சமே! நீலமாமிடற்று அண்ணல் ஏகம்பனார் கோல மா மலர்ப்பாதமே கும்பிடே!
பொய் அனைத்தையும் விட்டவர் புந்தியுள் மெய்யனை, சுடர் வெண்மழு ஏந்திய கையனை, கச்சி ஏகம்பம் மேவிய ஐயனை, தொழுவார்க்கு இல்லை, அல்லலே.
அரக்கன் தன் வலி உன்னி, கயிலையை நெருக்கிச் சென்று, எடுத்தான் முடிதோள் நெரித்து இரக்க இன் இசை கேட்டவன் ஏகம்பம், தருக்கு அது ஆக நாம் சார்ந்து, தொழுதுமே.