5.51 திருப்பாலைத்துறை
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1579

நீல மா மணிகண்டத்தர்; நீள் சடைக்
கோல மா மதி கங்கையும் கூட்டினார்;
சூலம் மான் மழு ஏந்தி, சுடர் முடிப்
பால் நெய் ஆடுவர்-பாலைத்துறையரே.

1
உரை
பாடல் எண் :1580

கவள மா களிற்றின்(ன்)உரி போர்த்தவர்;
தவள-வெண்நகை மங்கை ஓர் பங்கினர்;
திவள வானவர் போற்றித் திசைதொழும்
பவளமேனியர்- பாலைத்துறையரே.

2
உரை
பாடல் எண் :1581

மின்னின் நுண் இடைக் கன்னியர் மிக்கு, எங்கும்
பொன்னிநீர் மூழ்கிப் போற்றி அடி தொழ,
மன்னி நால்மறையோடு பல்கீதமும்
பன்னினார் அவர்-பாலைத்துறையரே.

3
உரை
பாடல் எண் :1582

நீடு காடு இடம் ஆய், நின்ற பேய்க்கணம்
கூடு பூதம் குழுமி நின்று ஆர்க்கவே,
ஆடினார் அழகு ஆகிய நால்மறை
பாடினார் அவர்-பாலைத்துறையரே.

4
உரை
பாடல் எண் :1583

ழுசித்தர், கன்னியர், தேவர்கள், தானவர்,
பித்தர், நால்மறை வேதியர், பேணிய
அத்தனே! நமை ஆள் உடையாய்!ழு எனும்
பத்தர்கட்கு அன்பர்-பாலைத்துறையரே.

5
உரை
பாடல் எண் :1584

விண்ணினார் பணிந்து ஏத்த, வியப்பு உறும்
மண்ணினார் மறவாது, ழுசிவாயழு என்று
எண்ணினார்க்கு இடமா எழில் வானகம்
பண்ணினார் அவர்-பாலைத்துறையரே.

6
உரை
பாடல் எண் :1585

குரவனார்; கொடுகொட்டியும், கொக்கரை
விரவினார், பண் கெழுமிய வீணையும்;-
மருவு நாள்மலர் மல்லிகை, செண்பகம்,
பரவு நீர்ப் பொன்னிப் பாலைத்துறையரே.

7
உரை
பாடல் எண் :1586

தொடரும் தொண்டரைத் துக்கம் தொடர்ந்து வந்து
அடரும்போது, அரனாய் அருள்செய்பவர்;
கடலின் நஞ்சு அணி கண்டர்-கடிபுனல்
படரும் செஞ்சடைப் பாலைத்துறையரே.

8
உரை
பாடல் எண் :1587

மேகம் தோய் பிறை சூடுவர்; மேகலை
நாகம் தோய்ந்த அரையினர்; நல் இயல்
போகம் தோய்ந்த புணர்முலை மங்கை ஓர்-
பாகம் தோய்ந்தவர்-பாலைத்துறையரே.

9
உரை
பாடல் எண் :1588

வெங் கண் வாள் அரவு ஆட்டி வெருட்டுவர்;
அம் கணார்; அடியார்க்கு அருள் நல்குவர்;
செங்கண் மால் அயன் தேடற்கு அரியவர்;
பைங்கண் ஏற்றினர்-பாலைத்துறையரே.

10
உரை
பாடல் எண் :1589

உரத்தினால் அரக்கன்(ன்) உயர்மாமலை
நெருக்கினானை நெரித்து, அவன் பாடலும்
இரக்கமா அருள்செய்த பாலைத்துறை
கரத்தினால்-தொழுவார் வினை ஓயுமே.

11
உரை