5.52 திருநாகேச்சுரம்
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1590

நல்லர்; நல்லது ஓர் நாகம் கொண்டு ஆட்டுவர்;
வல்லர், வல்வினை தீர்க்கும் மருந்துகள்;
பல் இல் ஓடு கை ஏந்திப் பலி திரி
செல்வர் போல்-திரு நாகேச்சுரவரே.

1
உரை
பாடல் எண் :1591

நாவல் அம்பெருந்தீவினில் வாழ்பவர்
மேவி வந்து வணங்கி, வினையொடு
பாவம் ஆயின பற்று அறுவித்திடும்
தேவர்போல்-திரு நாகேச்சுரவரே.

2
உரை
பாடல் எண் :1592

ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவர்;
ஆதியார், அயனோடு அமரர்க்கு எலாம்;
மாது ஓர் கூறர்; மழு வலன் ஏந்திய
நாதர்போல்-திரு நாகேச்சுரவரே.

3
உரை
பாடல் எண் :1593

சந்திர(ன்)னொடு சூரியர்தாம் உடன்
வந்து சீர் வழிபாடுகள் செய்தபின்,
ஐந்தலை அரவின் பணி கொண்டு, அருள்
மைந்தர்போல்-மணி நாகேச்சுரவரே.

4
உரை
பாடல் எண் :1594

பண்டு ஓர் நாள் இகழ் வான் பழித் தக்கனார்
கொண்ட வேள்விக் குமண்டை அது கெட,
தண்டமா, விதாதாவின் தலை கொண்ட
செண்டர்போல்-திரு நாகேச்சுரவரே.

5
உரை
பாடல் எண் :1595

வம்பு பூங் குழல் மாது மறுக ஓர்
கம்ப யானை உரித்த கரத்தினர்;
செம்பொன் ஆர் இதழி(ம்) மலர்ச் செஞ்சடை
நம்பர்போல்-திரு நாகேச்சுரவரே.

6
உரை
பாடல் எண் :1596

மானை ஏந்திய கையினர்; மை அறு
ஞானச் சோதியர்; ஆதியர்; நாமம்தான்
ஆன அஞ்சு எழுத்து ஓத, வந்து அண்ணிக்கும்
தேனர்போல்-திரு நாகேச்சுரவரே.

7
உரை
பாடல் எண் :1597

கழல் கொள் காலினர்; காலனைக் காய்ந்தவர்;
தழல் கொள் மேனியர்; சாந்த வெண் நீறு அணி
அழகர்; ஆல் நிழல் கீழ் அறம் ஓதிய
குழகர்போல்-குளிர் நாகேச்சுரவரே.

8
உரை
பாடல் எண் :1598

வட்ட மா மதில் மூன்று உடன் வல் அரண்
சுட்ட செய்கையர் ஆகிலும், சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்து, குளிர்விக்கும்
சிட்டர்போல்-திரு நாகேச்சுரவரே.

9
உரை
பாடல் எண் :1599

தூர்த்தன் தோள்முடிதாளும் தொலையவே
சேர்த்தினார், திருப்பாதத்து ஒருவிரல்;
ஆர்த்து வந்து, உலகத்தவர் ஆடிடும்
தீர்த்தர்போல்-திரு நாகேச்சுரவரே.

10
உரை