வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டிப் போய் ஆழம் பற்றி வீழ்வார், பல ஆதர்கள்; கோழம்பத்து உறை கூத்தன் குரைகழல்- தாழும் பத்தர்கள் சாலச் சதுரரே.
கயிலை நல்மலை ஆளும் கபாலியை, மயில் இயல் மலைமாதின் மணாளனை, குயில் பயில் பொழில் கோழம்பம் மேய என் உயிரினை, நினைந்து உள்ளம் உருகுமே.
வாழும் பான்மையர் ஆகிய வான் செல்வம்- தாழும் பான்மையர் ஆகித் தம் வாயினால்- ழுதாழம் பூமணம் நாறிய தாழ் பொழில் கோழம்பா!ழு என, கூடிய செல்வமே.
பாடல் ஆக்கிடும், பண்ணொடு, பெண் இவள்; கூடல் ஆக்கிடும், குன்றின் மணல்கொடு; கோடல் பூத்து அலர் கோழம்பத்துள் மகிழ்ந்து ஆடும் கூத்தனுக்கு அன்புபட்டாள் அன்றே!
தளிர் கொள் மேனியள் தான் மிக அஞ்ச, ஓர் பிளிறு வாரணத்து ஈர் உரி போர்த்தவன் குளிர் கொள் நீள் வயல் கோழம்பம் மேவினான்; நளிர் கொள் நீர், சடைமேலும் நயந்ததே.
நாதர் ஆவர், நமக்கும் பிறர்க்கும், தாம்- வேத நாவர், விடைக் கொடியார், வெற்பில் கோதைமாதொடும் கோழம்பம் கோயில்கொண்ட ஆதி, பாதம் அடைய வல்லார்களே.
முன்னை நான் செய்த பாவம் முதல் அற, பின்னை நான் பெரிதும்(ம்) அருள் பெற்றது- அன்னம் ஆர் வயல் கோழம்பத்துள்(ள்) அமர் பின்னல் வார் சடையானைப் பிதற்றியே.
ஏழைமாரிடம் நின்று, இருகைக்கொடு, உண் கோழைமாரொடும் கூடிய குற்றம் ஆம்- கூழை பாய் வயல் கோழம்பத்தான் அடி ஏழையேன் முன் மறந்து அங்கு இருந்ததே.
அரவு அணைப் பயில் மால், அயன், வந்து அடி பரவனை; பரம் ஆம் பரஞ்சோதியை; குரவனை; குரவு ஆர் பொழில் கோழம்பத்து உரவனை; ஒருவர்க்கு உணர்வு ஒண்ணுமே?
சமர சூரபன்மாவைத் தடிந்த வேல் குமரன் தாதை, நன் கோழம்பம் மேவிய, அமரர் கோவினுக்கு அன்பு உடைத் தொண்டர்கள் அமரலோகம் அது ஆள் உடையார்களே.
துட்டன் ஆகி, மலை எடுத்து, அஃதின் கீழ்ப் பட்டு, வீழ்ந்து, படர்ந்து, உய்யப்போயினான் ழுகொட்டம் நாறிய கோழம்பத்து ஈசன்ழு என்று இட்ட கீதம் இசைத்த அரக்கனே.