5.65 திருப்பூவனூர்
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1722

பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான்
நாவில் நூறு-நூறாயிரம் நண்ணினார்,
பாவம் ஆயின பாறிப் பறையவே,
தேவர்கோவினும் செல்வர்கள் ஆவரே.

1
உரை
பாடல் எண் :1723

என்னன், என் மனை, எந்தை, என் ஆர் உயிர்,
தன்னன், தன் அடியேன் தனம் ஆகிய
பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன்;
இன்னன் என்று அறிவு ஒண்ணான், இயற்கையே!

2
உரை
பாடல் எண் :1724

குற்றம் கூடிக் குணம்பல கூடாதீர்!
மற்றும் தீவினை செய்தன மாய்க்கல் ஆம்;
புற்று அராவினன் பூவனூர் ஈசன் பேர்
கற்று வாழ்த்தும், கழிவதன் முன்னமே!

3
உரை
பாடல் எண் :1725

ஆவில் மேவிய ஐந்து அமர்ந்து ஆடுவான்,
தூ வெண்நீறு துதைந்த செம்மேனியான்,
மேவ நூல்விரி-வெண்ணியின் தென்கரை-
பூவனூர் புகுவார் வினை போகுமே.

4
உரை
பாடல் எண் :1726

ழுபுல்லம் ஊர்தி ஊர்-பூவனூர், பூம் புனல்
நல்லம், மூர்த்தி நல்லூர், நனிபள்ளி ஊர்,
தில்லை ஊர், திரு ஆரூர், தீக்காலிநல்-
வல்லம் ஊர்ழு என, வல்வினை மாயுமே.

5
உரை
பாடல் எண் :1727

அனுசயப்பட்டு அது இது என்னாதே,
கனி மனத்தொடு கண்களும் நீர் மல்கி,
புனிதனை-பூவனூரனை- போற்றுவார்
மனிதரில்- தலைஆன மனிதரே.

6
உரை
பாடல் எண் :1728

ஆதிநாதன்; அமரர்கள் அர்ச்சிதன்;
வேதநாவன்; வெற்பின் மடப்பாவை ஓர்
பாதி ஆனான்; பரந்த பெரும் படைப்
பூதநாதன் - தென்பூவனூர் நாதனே.

7
உரை
பாடல் எண் :1729

பூவனூர், தண் புறம்பயம், பூம்பொழில்
நாவலூர், நள்ளாறொடு, நன்னிலம்,
கோவலூர், குடவாயில், கொடுமுடி,
மூவலூரும்- முக்கண்ணன் ஊர்; காண்மினே!

8
உரை
பாடல் எண் :1730

ஏவம் ஏதும் இலா அமண் ஏதலர்-
பாவகாரிகள்-சொல்வலைப்பட்டு, நான்,
தேவதேவன் திருநெறி ஆகிய
பூவனூர் புகுதப்பெற்ற நாள் இன்றே!

9
உரை
பாடல் எண் :1731

நாரண(ன்)னொடு, நான்முகன், இந்திரன்,
வாரணன், குமரன், வணங்கும் கழல்
பூரணன்திருப் பூவனூர் மேவிய
காரணன்(ன்); எனை ஆள் உடைக் காளையே.

10
உரை
பாடல் எண் :1732

மைக் கடுத்த நிறத்து அரக்கன் வரை
புக்கு எடுத்தலும், பூவனூரன்(ன்) அடி
மிக்கு அடுத்த விரல் சிறிது ஊன்றலும்,
பக்கு, அடுத்த பின் பாடி உய்ந்தான் அன்றே!

11
உரை