ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவன், பூதநாயகன், பொன்கயிலைக்கு இறை, மாது ஓர்பாகன், வலஞ்சுழி ஈசனை, பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.
கயிலை நாதன், கறுத்தவர் முப்புரம் எயில்கள் தீ எழ ஏ வல வித்தகன், மயில்கள் ஆலும் வலஞ்சுழி ஈசனைப் பயில்கிலார்சிலர் - பாவித்தொழும்பரே.
இளைய காலம் எம்மானை அடைகிலாத் துளை இலாச் செவித் தொண்டர்காள்! நும் உடல் வளையும் காலம், வலஞ்சுழி ஈசனைக் களைக்கண் ஆகக் கருதி, நீர் உய்ம்மினே!
நறை கொள் பூம் புனல் கொண்டு எழு மாணிக்கு ஆய்க் குறைவு இலாக் கொடுங் கூற்று உதைத்திட்டவன், மறை கொள் நாவன், வலஞ்சுழி மேவிய இறைவனை, இனி என்றுகொல் காண்பதே?
விண்டவர் புரம் மூன்றும் எரி கொளத் திண் திறல் சிலையால் எரி செய்தவன், வண்டு பண் முரலும் தண் வலஞ்சுழி அண்டனுக்கு, அடிமைத் திறத்து ஆவனே.
படம் கொள் பாம்பொடு பால்மதியம் சடை அடங்க ஆள வல்லான், உம்பர் தம்பிரான், மடந்தை பாகன், வலஞ்சுழியான், அடி அடைந்தவர்க்கு அடிமைத்திறத்து ஆவனே.
நாக்கொண்டு(ப்) பரவும்(ம்) அடியார் வினை போக்க வல்ல புரிசடைப் புண்ணியன், மாக் கொள் சோலை வலஞ்சுழி ஈசன் தன் ஏக் கொளப் புரம் மூன்று எரி ஆனவே.
தேடுவார், பிரமன் திருமால் அவர்; ஆடு பாதம் அவரும் அறிகிலார்; மாட வீதி வலஞ்சுழி ஈசனைத் தேடுவான் உறுகின்றது, என் சிந்தையே.
கண் பனிக்கும்; கை கூப்பும்; ழுகண் மூன்று உடை நண்பனுக்கு எனை நான் கொடுப்பேன்ழு எனும்; வண் பொன்(ன்)னித் தென் வலஞ்சுழி மேவிய பண்பன் இப் பொனைச் செய்த பரிசு இதே!
இலங்கை வேந்தன் இருபது தோள் இற நலம் கொள் பாதத்து ஒருவிரல் ஊன்றினான், மலங்கு பாய் வயல் சூழ்ந்த, வலஞ்சுழி வலம் கொள்வார் அடி என் தலைமேலவே.