5.67 திருவாஞ்சியம்
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1743

படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள்-
உடையும் தாங்கிய உத்தமனார்க்கு இடம்,
புடை நிலாவிய பூம்பொழில், வாஞ்சியம்
அடைய வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே.

1
உரை
பாடல் எண் :1744

பறப்பையும் பசுவும் படுத்துப் பல-
திறத்தவும்(ம்) உடையோர் திகழும் பதி,
கறைப் பிறைச் சடைக் கண்ணுதல் சேர்தரு
சிறப்பு உடை, திரு வாஞ்சியம் சேர்மினே!

2
உரை
பாடல் எண் :1745

புற்றில் ஆடு அரவோடு புனல் மதி
தெற்று செஞ்சடைத் தேவர்பிரான் பதி,
சுற்று மாடங்கள் சூழ், திரு வாஞ்சியம்
பற்றிப் பாடுவார்க்குப் பாவம் இல்லையே.

3
உரை
பாடல் எண் :1746

அங்கம் ஆறும் அருமறை நான்கு உடன்
தங்கு வேள்வியர் தாம் பயிலும் நகர்,
செங்கண் மால இடம் ஆர், திரு வாஞ்சியம்
தங்குவார் நம் அமரர்க்கு அமரரே.

4
உரை
பாடல் எண் :1747

நீறு பூசி நிமிர்சடைமேல் பிறை
ஆறு சூடும் அடிகள் உறை பதி,
மாறுதான் ஒருங்கும் வயல், வாஞ்சியம்
தேறி வாழ்பவர்க்குச் செல்வம் ஆகுமே.

5
உரை
பாடல் எண் :1748

அற்றுப் பற்று இன்றி ஆரையும் இல்லவர்க்கு
உற்ற நல்-துணை ஆவான் உறை பதி,
தெற்று மாடங்கள் சூழ், திரு வாஞ்சியம்
கற்றுச் சேர்பவர்க்குக் கருத்து ஆவதே.

6
உரை
பாடல் எண் :1749

அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள்
திருத்தும் சேவடியான் திகழும் நகர்
ஒருத்தி பாகம் உகந்தவன், வாஞ்சியம்
அருத்தியால் அடைவார்க்கு இல்லை, அல்லலே.

7
உரை