விரும்பி ஊறு விடேல், மட நெஞ்சமே! கரும்பின் ஊறல் கண்டாய், கலந்தார்க்கு அவன்;- இரும்பின் ஊறல் அறாதது ஓர் வெண்தலை எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.
பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன்; பேணு சீர்க் கறங்கு பூதகணம் உடைக் கண்ணுதல்- நறுங்குழல் மடவாளொடு நாள்தொறும் எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.
மருந்து, வானவர் தானவர்க்கு இன்சுவை; புரிந்த புன்சடைப் புண்ணியன், கண்ணுதல்- பொருந்து பூண் முலை மங்கை நல்லாளொடும் எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.
நிறம் கொள் கண்டத்து நின்மலன்; எம் இறை; மறம் கொள் வேல்கண்ணி வாணுதல் பாகமா, அறம் புரிந்து அருள்செய்த எம் அம்கணன் எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.
நறும் பொன்நாள் மலர்க் கொன்றையும் நாகமும் துறும்பு செஞ்சடை, தூ மதி வைத்து, வான் உறும் பொன்மால்வரைப் பேதையோடு ஊர்தொறும் எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.
கறும்பி ஊர்வன ஐந்து உள, காயத்தில்; திறம்பி ஊர்வன மற்றும் பல உள; குறும்பி ஊர்வது ஓர் கூட்டு அகத்து இட்டு, எனை எறும்பியூர் அரன் செய்த இயற்கையே!
மறந்தும், மற்று இது பேர் இடர்; நாள்தொறும் திறம்பி, நீ நினையேல், மட நெஞ்சமே! புறம் செய் கோலக் குரம்பையில் இட்டு, எனை எறும்பியூர் அரன் செய்த இயற்கையே!
இன்பமும், பிறப்பும்(ம்), இறப்பி(ன்)னொடு, துன்பமும்(ம்) உடனே வைத்த சோதியான் ழுஅன்பனே, அரனே!ழு என்று அரற்றுவார்க்கு இன்பன் ஆகும் எறும்பியூர் ஈசனே.
கண் நிறைந்த கன பவளத்திரள்; விண் நிறைந்த விரி சுடர்ச் சோதியான்; உள்-நிறைந்து, உருஆய், உயிர் ஆயவன் எண் நிறைந்த எறும்பியூர் ஈசனே.
நிறம் கொள் மால்வரை ஊன்றி எடுத்தலும், நறுங்குழல் மடவாள் நடுக்கு எய்திட, மறம் கொள் வாள் அரக்கன் வலி வாட்டினான் எறும்பியூர் மலை எம் இறை; காண்மினே!