வானம் சேர் மதி சூடிய மைந்தனை நீ, நெஞ்சே!-கெடுவாய்-நினைகிற்கிலை; ஆன் அஞ்சு ஆடியை, அன்பில் ஆலந்துறைக் கோன், எம் செல்வனை, கூறிட கிற்றியே!
காரணத்தர், கருத்தர், கபாலியார், வாரணத்து உரி போர்த்த மணாளனார்- ஆரணப்பொருள், அன்பில் ஆலந்துறை, நாரணற்கு அரியான் ஒரு நம்பியே.
அன்பின் ஆன் அஞ்சு அமைந்து, உடன் ஆடிய என்பின் ஆனை உரித்துக் களைந்தவன், அன்பிலானை, அம்மானை, அள் ஊறிய அன்பினால் நினைந்தார் அறிந்தார்களே.
சங்கை, உள்ளதும்; சாவதும் மெய்; உமை- பங்கனார் அடி பாவியேன், நான் உய; அங்கணன், எந்தை, அன்பில் ஆலந்துறைச் செங்கணார், அடிச் சேரவும் வல்லனே?
கொக்கு இற(ஃ)கர், குளிர்மதிச் சென்னியர், மிக்க(அ) அரக்கர் புரம் எரிசெய்தவர், அக்கு அரையினர், அன்பில் ஆலந்துறை நக்க உரு(வ்) வரும், நம்மை அறிவரே.
வெள்ளம் உள்ள விரிசடை நந்தியைக் கள்ளம் உள்ள மனத்தவர் காண்கிலார்; அள்ளல் ஆர் வயல் அன்பில் ஆலந்துறை உள்ள ஆறு அறியார், சிலர் ஊமரே.
பிறவி மாயப்பிணக்கில் அழுந்தினும், உறவுஎலாம் சிந்தித்து, உன்னி உகவாதே, அறவன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை மறவாதே, தொழுது, ஏத்தி வணங்குமே!
நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும் பிணங்கி எங்கும் திரிந்து எய்த்தும் காண்கிலா அணங்கன், எம்பிரான், அன்பில் ஆலந்துறை வணங்கும், நும் வினை மாய்ந்து அறும் வண்ணமே!
பொய் எலாம் உரைக்கும் சமண்சாக்கியக்- கையன்மார் உரை கேளாது எழுமினோ! ஐயன், எம்பிரான், அன்பில் ஆலந்துறை மெய்யன், சேவடி ஏத்துவார் மெய்யரே.
இலங்கை வேந்தன் இருபதுதோள் இற்று மலங்க மாமலைமேல் விரல் வைத்தவன், அலங்கல் எம்பிரான், அன்பில் ஆலந்துறை வலம்கொள்வாரை வானோர் வலம்கொள்வரே.