5.89 பொது தனித்திருக்குறுந்தொகை
பாடல் எண் :1944

ஒன்று வெண்பிறைக்கண்ணி; ஓர் கோவணம்;
ஒன்று கீள் உமையோடும் உடுத்தது-
ஒன்று வெண்தலை ஏந்தி, எம் உள்ளத்தே
ஒன்றி நின்று, அங்கு உறையும் ஒருவனே.

1
உரை
பாடல் எண் :1945

இரண்டும் ஆம், அவர்க்கு உள்ளன செய்தொழில்;
இரண்டும் ஆம், அவர்க்கு உள்ளன கோலங்கள்;
இரண்டும் இல் இளமான்; எமை ஆள் உகந்து,
இரண்டு போதும் என் சிந்தையுள் வைகுமே.

2
உரை
பாடல் எண் :1946

மூன்று மூர்த்தியுள் நின்று, இயலும் தொழில்
மூன்றும் ஆயின; மூ இலைச் சூலத்தன்;
மூன்று கண்ணினன்; தீத்தொழில் மூன்றினன்;
மூன்று போதும் என் சிந்தையுள் மூழ்குமே.

3
உரை
பாடல் எண் :1947

நாலின்மேல் முகம் செற்றதும்; மன் நிழல்
நாலு நன்கு உணர்ந்திட்டதும்; இன்பம் ஆம்
நாலுவேதம்,-சரித்ததும்,-நன்நெறி
நாலுபோல்-எம் அகத்து உறை நாதனே.

4
உரை
பாடல் எண் :1948

அஞ்சும் அஞ்சும் ஓர் ஆடி, அரைமிசை
அஞ்சுபோல் அரவு ஆர்த்தது, இன் தத்துவம்
அஞ்சும், அஞ்சும், ஓர் ஓர் அஞ்சும், ஆயவன்;
அஞ்சும் ஆம்-எம் அகத்து உறை ஆதியே.

5
உரை
பாடல் எண் :1949

ஆறுகால் வண்டு மூசிய கொன்றையான்;
ஆறு சூடிய அண்ட முதல்வனார்;
ஆறு கூர்மையர்க்கு அச் சமயப் பொருள்
ஆறுபோல்-எம் அகத்து உறை ஆதியே.

6
உரை
பாடல் எண் :1950

ஏழு மா மலை, ஏழ்பொழில், சூழ் கடல்-
ஏழு, போற்றும் இராவணன் கைந்நரம்பு-
ஏழு கேட்டு அருள்செய்தவன் பொன்கழல்,
ஏழும் சூழ் அடியேன் மனத்து உள்ளவே.

7
உரை
பாடல் எண் :1951

எட்டுமூர்த்தியாய் நின்று இயலும் தொழில்,
எட்டு வான் குணத்து, ஈசன் எம்மான்தனை
எட்டு மூர்த்தியும் எம் இறை எம் உளே;
எட்டு மூர்த்தியும் எம் உள் ஒடுங்குமே.

8
உரை
பாடல் எண் :1952

ஒன்பது ஒன்பது-யானை, ஒளி களிறு;
ஒன்பது ஒன்பது பல்கணம் சூழவே,
ஒன்பது ஆம் அவை தீத் தொழிலின்(ன்) உரை;
ஒன்பது ஒத்து நின்று என் உள் ஒடுங்குமே.

9
உரை
பாடல் எண் :1953

பத்து-நூறவன், வெங் கண் வெள் ஏற்று அண்ணல்;
பத்து-நூறு, அவன் பல்சடை தோள்மிசை;
பத்து யாம் இலம் ஆதலின் ஞானத்தால்
பத்தியான் இடம் கொண்டது பள்ளியே.

10
உரை
5.90 பொது - தனித் திருக்குறுந்தொகை
பாடல் எண் :1954

மாசு இல் வீணையும், மாலை மதியமும்,
வீசு தென்றலும், வீங்கு இளவேனிலும்,
மூசு வண்டு அறை பொய்கையும், போன்றதே-
ஈசன், எந்தை, இணைஅடி நீழலே.

1
உரை
பாடல் எண் :1955

நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்;
நமச்சிவாயவே நான் அறி விச்சையும்;
நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே;
நமச்சிவாயவே நன்நெறி காட்டுமே.

2
உரை
பாடல் எண் :1956

ஆள் ஆகார்; ஆள் ஆனாரை அடைந்து உய்யார்;
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்;
தோளாத(ச்) சுரையோ, தொழும்பர் செவி?
வாளா மாய்ந்து மண் ஆகிக் கழிவரே!

3
உரை
பாடல் எண் :1957

நடலை வாழ்வுகொண்டு என் செய்திர்? நாண் இலீர்?
சுடலை சேர்வது சொல் பிரமாணமே;
கடலின் நஞ்சு அமுது உண்டவர் கைவிட்டால்,
உடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே!

4
உரை
பாடல் எண் :1958

பூக் கைக் கொண்டு அரன் பொன் அடி போற்றிலார்;
நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்;
ஆக்கைக்கே இரை தேடி, அலமந்து,
காக்கைக்கே இரை ஆகி, கழிவரே!

5
உரை
பாடல் எண் :1959

குறிகளும்(ம்), அடையாளமும், கோயிலும்,
நெறிகளும்(ம்), அவர் நின்றது ஓர் நேர்மையும்,
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்,
பொறி இலீர்! மனம் என்கொல், புகாததே?

6
உரை
பாடல் எண் :1960

வாழ்த்த வாயும், நினைக்க மட நெஞ்சும்,
தாழ்த்தச் சென்னியும், தந்த தலைவனைச்
சூழ்த்த மா மலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா, வினையேன் நெடுங் காலமே!

7
உரை
பாடல் எண் :1961

எழுது பாவை நல்லார் திறம் விட்டு, நான்,
தொழுது போற்றி, நின்றேனையும் சூழ்ந்து கொண்டு,
உழுத சால்வழியே உழுவான் பொருட்டு
இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே!

8
உரை
பாடல் எண் :1962

நெக்குநெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன் ஆர் சடைப் புண்ணியன்,
பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு
நக்கு நிற்பவர், அவர்தம்மை நாணியே.

9
உரை
பாடல் எண் :1963

விறகில்-தீயினன், பாலில் படு நெய் போல்
மறைய நின்றுளன்மா மணிச்சோதியான்;
உறவுகோல் நட்டு, உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய, முன் நிற்குமே.

10
உரை
5.91 பொது தனித்
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1964

ஏ இலானை, என் இச்சை அகம்படிக்-
கோயிலானை, குணப் பெருங்குன்றினை,
வாயிலானை, மனோன்மணியைப் பெற்ற
தாய் இலானை, தழுவும், என் ஆவியே.

1
உரை
பாடல் எண் :1965

முன்னை ஞான முதல்-தனி வித்தினை;
பின்னை ஞானப் பிறங்கு சடையனை;
என்னை ஞானத்து, இருள் அறுத்து, ஆண்டவன்
தன்னை; ஞானத்தளை இட்டு வைப்பனே.

2
உரை
பாடல் எண் :1966

ஞானத்தால்-தொழுவார், சிலஞானிகள்;
ஞானத்தால்-தொழுவேன், உனை நான், அலேன்;
ஞானத்தால்-தொழுவார்கள் தொழ, கண்டு,
ஞானத்தால் உனை, நானும் தொழுவனே.

3
உரை
பாடல் எண் :1967

புழுவுக்கும் குணம் நான்கு; எனக்கும்(ம்) அதே;
புழுவுக்கு இங்கு எனக்கு உள்ள பொல்லாங்கு இல்லை;
புழுவினும் கடையேன் புனிதன் தமர்-
குழுவுக்கு எவ்விடத்தேன், சென்று கூடவே?

4
உரை
பாடல் எண் :1968

மலையே வந்து விழினும், மனிதர்காள்!
நிலையில் நின்று கலங்கப் பெறுதிரே?
தலைவன் ஆகிய ஈசன் தமர்களை,
கொலை செய் யானைதான், கொன்றிடுகிற்குமே?

5
உரை
பாடல் எண் :1969

கற்றுக் கொள்வன வாய் உள, நா உள;
இட்டுக் கொள்வன பூ உள; நீர் உள;
கற்றைச் செஞ்சடையான் உளன்; நாம் உளோம்;
எற்றுக்கோ, நமனால் முனிவுண்பதே?

6
உரை
பாடல் எண் :1970

மனிதர்காள்! இங்கே வம்! ஒன்று சொல்லுகேன்;
கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே?
புனிதன், பொன்கழல் ஈசன், எனும் கனி
இனிது சாலவும், ஏசற்றவர்கட்கே.

7
உரை
பாடல் எண் :1971

என்னை ஏதும் அறிந்திலன், எம்பிரான்;
தன்னை, நானும் முன், ஏதும் அறிந்திலேன்;
என்னைத் தன் அடியான் என்று அறிதலும்,
தன்னை நானும் பிரான் என்று அறிந்தெனே.

8
உரை
பாடல் எண் :1972

தெள்ளத் தேறித் தெளிந்து தித்திப்பது ஓர்
உள்ளத் தேறல்; அமுத ஒளி; வெளி;
கள்ளத்தேன், கடியேன், கவலைக்கடல்-
வெள்ளத்தேனுக்கு எவ்வாறு விளைந்ததே?

9
உரை