கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப் பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல், கொண்ட பாணி கொடுகொட்டி தாளம் கைக்- கொண்ட தொண்டரைத் துன்னிலும் சூழலே!
ழுநடுக்கத்துள்ளும், நகையுளும், நம்பற்குக் கடுக்கக் கல்லவடம் இடுவார்கட்குக் கொடுக்கக் கொள்கழு என உரைப்பார்களை இடுக்கண் செய்யப் பெறீர், இங்கு நீங்குமே!
கார் கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான் சீர் கொள் நாமம் சிவன் என்று அரற்றுவார் ஆர்கள் ஆகினும் ஆக; அவர்களை நீர்கள் சாரப்பெறீர், இங்கு நீங்குமே!
சாற்றினேன்: சடை நீள் முடிச் சங்கரன், சீற்றம் காமன்கண் வைத்தவன், சேவடி ஆற்றவும் களிப்பட்ட மனத்தராய், ழுபோற்றி!ழு என்று உரைப்பார் புடை போகலே!
இறை என் சொல் மறவேல், நமன்தூதுவீர்! பிறையும் பாம்பும் உடைப் பெருமான் தமர், நறவம் நாறிய நன்நறுஞ் சாந்திலும் நிறைய நீறு அணிவார், எதிர் செல்லலே!
வாமதேவன் வள நகர் வைகலும், காமம் ஒன்று இலராய், கை விளக்கொடு தாமம், தூபமும், தண் நறுஞ் சாந்தமும், ஏமமும், புனைவார் எதிர் செல்லலே!
படையும் பாசமும் பற்றிய கையினீர்! அடையன்மின், நமது ஈசன் அடியரை! விடை கொள் ஊர்தியினான் அடியார் குழாம் புடை புகாது, நீர், போற்றியே போமினே!
விச்சை ஆவதும், வேட்கைமை ஆவதும், நிச்சல் நீறு அணிவாரை நினைப்பதே; அச்சம் எய்தி அருகு அணையாது, நீர், பிச்சை புக்கவன் அன்பரைப் பேணுமே!
இன்னம் கேண்மின்: இளம்பிறை சூடிய மன்னன் பாதம் மனத்து உடன் ஏத்துவார், மன்னும் அஞ்சு எழுத்து ஆகிய மந்திரம்- தன்னில் ஒன்று வல்லாரையும், சாரலே!
மற்றும் கேண்மின்: மனப் பரிப்பு ஒன்று இன்றிச் சுற்றும் பூசிய நீற்றொடு, கோவணம், ஒற்றை ஏறு, உடையான் அடியே அலால் பற்று ஒன்று இ(ல்)லிகள் மேல் படைபோகலே!
அரக்கன் ஈர்-ஐந்தலையும் ஓர் தாளினால் நெருக்கி ஊன்றியிட்டான் தமர் நிற்கிலும், சுருக்கெனது, அங்குப் பேர்மின்கள்! மற்று நீர் சுருக்கெனில், சுடரான் கழல் சூடுமே.