காசனை, கனலை, கதிர் மா மணித்- தேசனை, புகழார்-சிலர் தெண்ணர்கள்; மாசினைக் கழித்து ஆட்கொள வல்ல எம் ஈசனை இனி நான் மறக்கிற்பனே?
புந்திக்கு(வ்) விளக்குஆய புராணனை, சந்திக்கண் நடம் ஆடும் சதுரனை, அந்திவண்ணனை, ஆர் அழல் மூர்த்தியை, வந்து என் உள்ளம் கொண்டானை, மறப்பனே?
ழுஈசன், ஈசன்ழு என்று என்றும் அரற்றுவன்; ஈசன் தான் என் மனத்தில் பிரிவு இலன்; ஈசன் தன்னையும் என் மனத்துக் கொண்டு(வ்), ஈசன் தன்னையும் யான் மறக்கிற்பனே?
ஈசன் என்னை அறிந்தது அறிந்தனன்,- ஈசன் சேவடி ஏற்றப் பெறுதலால்,- ஈசன் சேவடி ஏத்தப் பெற்றேன்; இனி ஈசன் தன்னையும் யான் மறக்கிற்பனே?
தேனை, பாலினை, திங்களை, ஞாயிற்றை, வான வெண்மதி சூடிய மைந்தனை, வேனிலானை மெலிவு செய் தீ-அழல்- ஞானமூர்த்தியை, நான் மறக்கிற்பனே?
கன்னலை, கரும்பு ஊறிய தேறலை, மின்னனை, மின் அனைய உருவனை, பொன்னனை, மணிக்குன்று பிறங்கிய என்னனை, இனி யான் மறக்கிற்பனே?
கரும்பினை, கட்டியை, கந்தமாமலர்ச் சுரும்பினை, சுடர்ச் சோதியுள் சோதியை, அரும்பினில் பெரும்போது கொண்டு, ஆய் மலர் விரும்பும் ஈசனை, நான் மறக்கிற்பனே?
துஞ்சும் போதும் சுடர்விடு சோதியை, நெஞ்சுள் நின்று நினைப்பிக்கும் நீதியை, நஞ்சு கண்டத்து அடக்கிய நம்பனை, வஞ்சனேன் இனி யான் மறக்கிற்பனே?
புதிய பூவினை, புண்ணிய நாதனை, நிதியை, நீதியை, நித்திலக்குன்றினை, கதியை, கண்டம் கறுத்த கடவுளை, மதியை, மைந்தனை, நான் மறக்கிற்பனே?
கருகு கார்முகில் போல்வது ஓர் கண்டனை, உருவம் நோக்கியை, ஊழி முதல்வனை, பருகு பாலனை, பால்மதி சூடியை, மருவும் மைந்தனை, நான் மறக்கிற்பனே?