சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர் அந்திவான் நிறத்தான், அணி ஆர் மதி முந்திச் சூடிய முக்கண்ணினான், அடி வந்திப்பார் அவர் வான் உலகு ஆள்வரே.
அண்டம் ஆர் இருள் ஊடு கடந்து உம்பர் உண்டுபோலும், ஓர் ஒண்சுடர்; அச் சுடர் கண்டு இங்கு ஆர் அறிவார்? அறிவார் எலாம், ழுவெண் திங்கள் கண்ணி வேதியன்ழு என்பரே.
ஆதி ஆயவன், ஆரும் இலாதவன், போது சேர் புனை நீள் முடிப் புண்ணியன் பாதி பெண் உருஆகி, பரஞ்சுடர்ச்- சோதியுள் சோதிஆய், நின்ற சோதியே.
இட்டது, இட்டது-ஓர் ஏறு உகந்து ஏறி ஊர் பட்டி துட்டங்கனாய்ப்-பலி தேர்வது ஓர் கட்ட வாழ்க்கையன் ஆகிலும், வானவர், ழுஅட்டமூர்த்தி, அருள்!ழு என்று அடைவரே.
ஈறு இல் கூறையன் ஆகி, எரிந்தவெண்- நீறு பூசி நிலாமதி சூடிலும், வீறு இலாதன செய்யினும், விண்ணவர், ழுஊறலாய், அருளாய்!ழு என்று உரைப்பரே.
உச்சி வெண்மதி சூடிலும், ஊன் அறாப் பச்சை வெண்தலை ஏந்திப் பல இலம் பிச்சையே புகும் ஆகிலும், வானவர், ழுஅச்சம் தீர்த்து அருளாய்!ழு என்று அடைவரே.
ழுஊர் இலாய்!ழு என்று, ஒன்று ஆக உரைப்பது ஓர் பேர் இலாய்! பிறை சூடிய பிஞ்ஞகா! கார் உலாம் கண்டனே! உன் கழல் அடி சேர்வு இலார்கட்குத் தீயவை தீயவே.
ழுஎந்தையே! எம்பிரானே!ழு என உள்கிச் சிந்திப்பார் அவர் தீவினை தீருமால்; வெந்தநீறு மெய் பூசிய வேதியன் அந்தமா அளப்பார், அடைந்தார்களே.
ஏன வெண்மருப்போடு என்பு பூண்டு, எழில் ஆனை ஈர் உரி போர்த்து, அனல் ஆடிலும்; தான் அவ்(வ்)வண்ணத்தன் ஆகிலும்; தன்னையே வான நாடர் வணங்குவர், வைகலே.
ஐயன், அந்தணன், ஆணொடு பெண்ணும் ஆம் மெய்யன், மேதகு வெண்பொடிப் பூசிய மை கொள் கண்டத்தன், மான்மறிக் கையினான் பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனே.
ஒருவன் ஆகி நின்றான், இவ் உலகுஎலாம்; இருவர் ஆகி நின்றார்கட்கு அறிகிலான்; அரு அரா அரை ஆர்த்தவன்; ஆர் கழல் பரவுவார் அவர் பாவம் பறையுமே.
ஓத வண்ணனும் ஒண்மலர்ச் செல்வனும், ழுநாதனே, அருளாய்!ழு என்று நாள்தொறும் காதல் செய்து கருதப்படுமவர் பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.
ஒளவ தன்மை அவர் அவர் ஆக்கையான்; ழுவெவ்வ தன்மையன்ழு என்பது ஒழிமினோ! மௌவல் நீள் மலர்மேல் உறைவானொடு பௌவ வண்ணனும் ஆய்ப் பணிவார்களே.
அக்கும் ஆமையும் பூண்டு, அனல் ஏந்தி, இல் புக்கு, பல்பலி தேரும் புராணனை- நக்கு, நீர்கள், நரகம் புகேன்மினோ!- தொக்க வானவரால்-தொழுவானையே.
கங்கை தங்கிய செஞ்சடைமேல் இளன் திங்கள் சூடிய தீநிற-வண்ணனார்; இங்கணார், எழில் வானம் வணங்கவே; அம் கணாற்கு அதுவால், அவன் தன்மையே!
ஙகர வெல் கொடியானொடு,-நன்நெஞ்சே!- நுகர, நீ உனைக் கொண்டு உய்ப் போக்கு உறில், மகர வெல் கொடி மைந்தனைக் காய்ந்தவன் புகர் இல் சேவடியே புகல் ஆகுமே.
சரணம் ஆம் படியார் பிறர் யாவரோ? கரணம் தீர்த்து உயிர் கையில் இகழ்ந்த பின், மரணம் எய்தியபின், நவை நீக்குவான் அரணம் மூ எயில் எய்தவன் அல்லனே?
ஞமன் என்பான், நரகர்க்கு; நமக்கு எலாம் சிவன் என்பான்; செழு மான்மறிக் கையினான்; கவனம் செய்யும் கன விடைஊர்தியான் தமர் என்றாலும், கெடும், தடுமாற்றமே.
இடபம் ஏறியும் இல் பலி ஏற்பவர்; அடவி காதலித்து ஆடுவர்; ஐந்தலைப் பட அம்பாம்பு அரை ஆர்த்த பரமனை, கடவிராய்ச் சென்று, கைதொழுது உய்ம்மினே!
இணர்ந்து கொன்றை பொன்தாது சொரிந்திடும், புணர்ந்த வாள் அரவம் மதியோடு உடன் அணைந்த, அம் சடையான் அவன் பாதமே உணர்ந்த உள்ளத்தவர் உணர்வார்களே.
தருமம் தான், தவம் தான், தவத்தால் வரும் கருமம் தான் கருமான்மறிக் கையினான்; அருமந்தன்ன அதிர்கழல் சேர்மினோ!- சிரமம் சேர் அழல்-தீவினையாளரே!
ழுநமச்சிவாயழு என்பார் உளரேல், அவர்- தம் அச்சம் நீங்கத் தவநெறி சார்தலால், அமைத்துக் கொண்டது ஓர் வாழ்க்கையன் ஆகிலும், இமைத்து நிற்பது சால அரியதே.
பல்பல் காலம் பயிற்றி, பரமனைச் சொல் பல்-காலம் நின்று, ஏத்துமின்! தொல்வினை வெற்பில்-தோன்றிய வெங்கதிர் கண்ட அப் புல்பனி(க்) கெடும் ஆறு அது போலுமே.
மணி செய் கண்டத்து, மான்மறிக் கையினான்; கணிசெய் வேடத்தர் ஆயவர்; காப்பினால் பணிகள்தாம் செய வல்லவர் யாவர், தம் பிணி செய் ஆக்கையை நீக்குவர்; பேயரே!
இயக்கர், கின்னரர், இந்திரன், தானவர், நயக்க நின்றவன்; நான்முகன் ஆழியான் மயக்கம் எய்த, வல் மால் எரி ஆயினான்; வியக்கும் தன்மையினான் எம் விகிர்தனே.
அரவம் ஆர்த்து அனல் ஆடிய அண்ணலைப் பரவுவார் அவர் பாவம் பறைதற்கு, குரவை கோத்தவனும், குளிர்போதின்மேல் கரவு இல் நான்முகனும், கரி அல்லரே.?
அழல் அங்கையினன்; அந்தரத்து ஓங்கி நின்று உழலும் மூஎயில் ஒள் அழல் ஊட்டினான் தழலும் தாமரையானொடு, தாவினான், கழலும் சென்னியும் காண்டற்கு அரியனே.
இளமை கைவிட்டு அகறலும், மூப்பினார், வளமை போய், பிணியோடு வருதலால், உளமெலாம் ஒளி ஆய் மதி ஆயினான் கிளமையே கிளை ஆக நினைப்பனே.
தன்னில்-தன்னை அறியும் தலைமகன் தன்னில்-தன்னை அறியில்-தலைப்படும்; தன்னில்-தன்னை அறிவு இலன் ஆயிடில், தன்னில்-தன்னையும் சார்தற்கு அரியனே.
இலங்கை மன்னனை ஈர்-ஐந்து-பத்தும்-அன்று அலங்கலோடு உடனே செல ஊன்றிய நலம் கொள் சேவடி நாள்தொறும் நாள்தொறும் வலம்கொண்டு ஏத்துவார் வான் உலகு ஆள்வரே.