பாவமும் பழி பற்று அற வேண்டுவீர்! ஆவில் அஞ்சு உகந்து ஆடுமவன் கழல் மேவராய், மிகவும் மகிழ்ந்து உள்குமின்! காவலாளன் கலந்து அருள்செய்யுமே.
கங்கை ஆடில் என்? காவிரி ஆடில் என்? கொங்கு தண் குமரித்துறை ஆடில் என்? ஒங்கு மாகடல் ஓதம் நீராடில் என்? ழுஎங்கும் ஈசன்ழு எனாதவர்க்கு இல்லையே.
பட்டர் ஆகில் என்? சாத்திரம் கேட்கில் என்? இட்டும் அட்டியும் ஈதொழில் பூணின் என்? எட்டும் ஒன்றும் இரண்டும் அறியில் என்? ழுஇட்டம் ஈசன்ழு எனாதவர்க்கு இல்லையே.
வேதம் ஓதில் என்? வேள்விகள் செய்கில் என்? நீதி நூல்பல நித்தல் பயிற்றில் என்? ஓதி அங்கம் ஓர் ஆறும் உணரில் என்? ஈசனை உள்குவார்க்கு அன்றி இல்லையே.
காலை சென்று கலந்து நீர் மூழ்கில் என்? வேலை தோறும் விதிவழி நிற்கில் என்? ஆலை வேள்வி அடைந்து அது வேட்கில் என்? ஏல ழுஈசன்ழு என்பார்க்கு அன்றி இல்லையே.
கானம், நாடு, கலந்து திரியில் என்? ஈனம் இன்றி இருந் தவம் செய்யில் என்? ஊனை உண்டல் ஒழிந்து வான் நோக்கில் என்? ழுஞானன்ழு என்பவர்க்கு அன்றி நன்கு இல்லையே.
கூட வேடத்தர் ஆகிக் குழுவில் என்? வாடி ஊனை வருத்தித் திரியில் என்? ஆடல் வேடத்தன் அம்பலக்கூத்தனைப் பாடலாளர்க்கு அல்லால், பயன் இல்லையே.
நன்று நோற்கில் என்? பட்டினி ஆகில் என்? குன்றம் ஏறி இருந் தவம் செய்யில் என்? சென்று நீரில் குளித்துத் திரியில் என்? என்றும், ழுஈசன்ழு என்பார்க்கு அன்றி இல்லையே.
கோடி தீர்த்தம் கலந்து குளித்து அவை- ஆடினாலும், அரனுக்கு அன்பு இல்லையேல், ஓடும் நீரினை ஓட்டைக் குடத்து அட்டி மூடி வைத்திட்ட மூர்க்கனொடு ஒக்குமே.
மற்று நல்-தவம் செய்து வருந்தில் என்? பொற்றை உற்று எடுத்தான் உடல் புக்கு இறக் குற்ற, நல் குரை ஆர் கழல், சேவடி பற்று இலாதவர்க்குப் பயன் இல்லையே.