6.9 திருஆமாத்தூர்
திருத்தாண்டகம்
87வண்ணங்கள் தாம் பாடி, வந்து நின்று, வலி செய்து,
              வளை கவர்ந்தார்-வகையால் நம்மைக்
கண் அம்பால் நின்று எய்து, கனலப் பேசி, கடியது
                    ஓர் விடை ஏறி-காபாலி(ய்)யார்;
சுண்ணங்கள் தாம் கொண்டு துதையப் பூசித்தோல்
             உடுத்து நூல் பூண்டு தோன்றத்தோன்ற
அண்ணலார் போகின்றார்;வந்து காணீர்-அழகியரே,
                          ஆமாத்தூர் ஐயனாரே!.
உரை
   
88வெந்தார் வெண்பொடிப் பூசி, வெள்ளை மாலை
           விரிசடைமேல்-தாம் சூடி, வீணை ஏந்தி,
கந்தாரம் தாம் முரலா, போகா நிற்க, :கறை
         சேர் மணிமிடற்றீர்! ஊர் ஏது?” என்றேன்;
நொந்தார் போல் வந்து எனது இல்லே புக்கு,
   “நுடங்கு ஏர் இடை மடவாய்! நம் ஊர் கேட்கில்,
அம் தாமரை மலர் மேல் அளி-வண்டு யாழ்
    செய் ஆமாத்தூர்” என்று, அடிகள் போயினாரே.
உரை
   
89கட்டங்கம் தாம் ஒன்று கையில் ஏந்தி, கடிய
                     விடை ஏறி-காபாலி(ய்)யார்-
இட்டங்கள் தாம் பேசி, இல்லே புக்கு, இடும்
    பலியும் இடக் கொள்ளார்;போவார் அல்லர்;
பட்டிமையும் படிறுமே பேசுகின்றார்;பார்ப்பாரைப்
            பரிசு அழிப்பார் போல்கின்றார், தாம்;
அட்டிய சில்பலியும் கொள்ளார்;விள்ளார் - 
              அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.
உரை
   
90பசைந்த பல பூதத்தர், பாடல் ஆடல்;பட
         நாகக்கச்சையர்;பிச்சைக்கு என்று அங்கு
இசைந்தது ஓர் இயல்பினர்;எரியின் மேனி
          இமையா முக்கண்ணினர்;நால்வேதத்தர்;
பிசைந்த திருநீற்றினர்;பெண் ஓர்பாகம் பிரிவு
       அறியாப் பிஞ்ஞகனார்;தெண் நீர்க் கங்கை
அசைந்த திருமுடியர்;அங்கைத் தீயர் - 
              அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.
உரை
   
91உருள் உடைய தேர், புரவியோடும், யானை,
      ஒன்றாலும் குறைவு இல்லை;ஊர்திவெள் ஏறு;
இருள் உடைய கண்டத்தர்;செந்தீவண்ணர்;
  இமையவர்கள் தொழுது ஏத்தும் இறைவனார், தாம்;
பொருள் உடையர் அல்லர்;இலரும் அல்லர்;
             புலித்தோல் உடை ஆகப் பூதம் சூழ,
அருள் உடைய அம் கோதை, மாலை 
      மார்பர் - அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.
உரை
   
92வீறு உடைய ஏறு ஏறி, நீறு பூசி, வெண்தோடு
                 பெய்து, இடங்கை வீணை ஏந்தி,
கூறு உடைய மடவாள் ஓர்பாகம் கொண்டு,
       குழை ஆட, கொடுகொட்டி கொட்டா, வந்து,
பாறு உடைய படுதலை ஓர் கையில் ஏந்தி,
            பலி கொள்வார் அல்லர், படிறே பேசி;
ஆறு உடைய சடைமுடி எம் அடிகள்
       போலும்-அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.
உரை
   
93கை ஓர் கபாலத்தர்;மானின் தோலர்;கருத்து
       உடையர்;நிருத்தராய்க் காண்பார் முன்னே;
செய்ய திரு மேனி வெண் நீறு ஆடி, திகழ்
               புன்சடை முடிமேல்-திங்கள் சூடி,
மெய் ஒருபாகத்து உமையை வைத்து, மேவார்
                திரிபுரங்கள் வேவச் செய்து(வ்),
ஐயனார் போகின்றார்;வந்து காணீர்-அழகியரே,
                       ஆமாத்தூர் ஐயனாரே!.
உரை
   
94“ஒன்றாலும் குறைவு இல்லை;ஊர்தி வெள் ஏறு;
            ஒற்றியூர் உம் ஊரே? உணரக் கூறீர்!
நின்று தான் என் செய்வீர், போவீர் ஆகில்?
     நெற்றிமேல் கண் காட்டி நிறையும் கொண்டீர்;
என்றும் தான் இவ் வகையே இடர் செய்கின்றீர்;
  இருக்கும் ஊர் இனி அறிந்தோம், ஏகம்ப(ம்)மோ?
அன்றித்தான் போகின்றீர், அடிகள்! எம்மோடு; 
            ”-அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.
உரை
   
95கல்லலகு தாம் கொண்டு, காளத்தி(ய்)யார், கடிய
                       விடை ஏறி, காணக்காண
இல்லமே தாம் புகுதா, “இடுமின், பிச்சை!”
  என்றாருக்கு எதிர் எழுந்தேன்;எங்கும் காணேன்;
“சொல்லாதே போகின்றீர்;உம் ஊர் ஏது?
        துருத்தி? பழனமோ? நெய்த்தான(ம்)மோ?”
அல்லலே செய்து அடிகள் போகின்றார்,
          தாம்-அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.
உரை
   
96மழுங்கலா நீறு ஆடும் மார்பர் போலும்;மணி
                மிழலை மேய மணாளர் போலும்;
கொழுங்குவளைக் கோதைக்கு இறைவர் போலும்;
        கொடுகொட்டி, தாளம், உடையார் போலும்;
செழுங் கயிலாயத்து எம் செல்வர் போலும்;
       தென் அதிகைவீரட்டம் சேர்ந்தார் போலும்;
அழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் போலும் -
               அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.
உரை