6.14 திருநல்லூர்
திருத்தாண்டகம்
137நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார்;
          நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்;
சினம் திருகு களிற்று உரிவைப் போர்வை வைத்தார்;
   செழு மதியின்தளிர் வைத்தார்; சிறந்து வானோர்-
இனம் துருவி, மணி மகுடத்து ஏற, துற்ற இன
     மலர்கள் போது அவிழ்ந்து மது வாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடி என் தலைமேல்
   வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
உரை
   
138பொன் நலத்த நறுங்கொன்றை சடைமேல்
   வைத்தார்; புலி உரியின் அதள் வைத்தார்; புனலும் வைத்தார்;
மன் நலத்த திரள் தோள்மேல் மழுவாள் வைத்தார்;
     வார் காதில் குழை வைத்தார்; மதியும் வைத்தார்;
மின் நலத்த நுண் இடையாள் பாகம் வைத்தார்;
    வேழத்தின் உரி வைத்தார்; வெண்நூல் வைத்தார்;
நல்-நலத்த திருவடி என் தலைமேல்
     வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
உரை
   
139தோடு ஏறும் மலர்க்கொன்றை சடைமேல் 
   வைத்தார்; துன் எருக்கின்வடம் வைத்தார்; துவலை சிந்த,
பாடு ஏறு படு திரைகள் எறிய வைத்தார்;
      பனிமத்தமலர் வைத்தார்; பாம்பும் வைத்தார்;
சேடு ஏறு திருநுதல் மேல் நாட்டம் வைத்தார்; சிலை
        வைத்தார்; மலை பெற்ற மகளை வைத்தார்;
நாடு ஏறு திருவடி என் தலைமேல்
   வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
உரை
   
140வில் அருளி வரு புருவத்து ஒருத்தி பாகம்
   பொருத்து ஆகி, விரிசடைமேல் அருவி வைத்தார்;
கல் அருளி வரிசிலையா வைத்தார்; ஊராக்
         கயிலாயமலை வைத்தார்; கடவூர் வைத்தார்;
சொல் அருளி அறம் நால்வர்க்கு அறிய வைத்தார்;
      சுடுசுடலைப் பொடி வைத்தார்; துறவி வைத்தார்;
நல் அருளால்-திருவடி என் தலைமேல்
     வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
உரை
   
141விண் இரியும் திரிபுரங்கள் எரிய வைத்தார்; வினை,
    தொழுவார்க்கு, அற வைத்தார்; துறவி வைத்தார்;
கண் எரியால் காமனையும் பொடியா வைத்தார்;
    கடிக்கமலம் மலர் வைத்தார்; கயிலை வைத்தார்;
திண் எரியும் தண் புனலும் உடனே வைத்தார்;
    திசை தொழுது மிசை அமரர் திகழ்ந்து வாழ்த்தி
நண்ண(அ)அரிய திருவடி என் தலைமேல்
   வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
உரை
   
142உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார்;
   உயிர் வைத்தார்; உயிர் செல்லும் கதிகள் வைத்தார்;
மற்று அமரர்கணம் வைத்தார்; அமரர் காணாமறை
           வைத்தார்; குறைமதியம் வளர வைத்தார்;
செற்றம் மலி ஆர்வமொடு காமலோபம் சிறவாத
                 நெறி வைத்தார்; துறவி வைத்தார்;
நல்-தவர் சேர் திருவடி என் தலைமேல்
    வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
உரை
   
143மாறு மலைந்தார் அரணம் எரிய வைத்தார்; மணி
     முடிமேல் அர வைத்தார்; அணி கொள் மேனி
நீறு மலிந்து எரி ஆடல் நிலவ வைத்தார்;
   நெற்றிமேல் கண் வைத்தார்; நிலையம் வைத்தார்;
ஆறு மலைந்து அறு திரைகள் எறிய வைத்தார்;
        ஆர்வத்தால் அடி அமரர் பரவ வைத்தார்;
நாறு மலர்த்திருவடி என் தலைமேல்
   வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
உரை
   
144குலங்கள் மிகு மலை, கடல்கள், ஞாலம், வைத்தார்;
   குரு மணி சேர் அர வைத்தார்; கோலம் வைத்தார்;
உலம் கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார்; உண்டு
      அருளி விடம் வைத்தார்; எண்தோள் வைத்தார்;
நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார்;
   நிமிர் விசும்பின் மிசை வைத்தார்; நினைந்தார் இந் நாள்
நலம் கிளரும் திருவடி என் தலைமேல்
    வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
உரை
   
145சென்று உருளும் கதிர் இரண்டும் விசும்பில் வைத்தார்;
       திசைபத்தும் இரு நிலத்தில் திருந்த வைத்தார்;
நின்று அருளி அடி அமரர் வணங்க வைத்தார்; நிறை
         தவமும் மறை பொருளும் நிலவ வைத்தார்;
கொன்று அருளி, கொடுங் கூற்றம் நடுங்கி ஓட,
    குரைகழல்சேவடி வைத்தார்; விடையும் வைத்தார்;
நன்று அருளும் திருவடி என் தலைமேல் வைத்தார்-
             நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
உரை
   
146பாம்பு உரிஞ்சி, மதி கிடந்து, திரைகள் ஏங்க, பனிக்
     கொன்றை சடை வைத்தார்; பணி செய் வானோர்
ஆம் பரிசு தமக்கு எல்லாம் அருளும் வைத்தார்;
   அடு சுடலைப் பொடி வைத்தார்; அழகும் வைத்தார்;
ஓம்ப(அ)அரிய வல்வினை நோய் தீர வைத்தார்;
      உமையை ஒருபால் வைத்தார்; உகந்து வானோர்,
நாம், பரவும் திருவடி என் தலைமேல் வைத்தார்-
              நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
உரை
   
147குலம் கிளரும் வரு திரைகள் ஏழும் வைத்தார்; குரு
      மணி சேர் மலை வைத்தார்; மலையைக் கையால்
உலம் கிளர எடுத்தவன் தோள் முடியும் நோவ
        ஒருவிரலால் உற வைத்தார்; “இறைவா!” என்று
புலம்புதலும், அருளொடு போர் வாளும் வைத்தார்;
   புகழ் வைத்தார்; புரிந்து ஆளாக் கொள்ள வைத்தார்;
நலம் கிளரும் திருவடி என் தலைமேல் வைத்தார்-
               நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
உரை