6.19 திருஆலவாய்
திருத்தாண்டகம்
190முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி;
       முதிரும் சடைமுடி மேல் முகிழ்வெண்திங்கள்
வளைத்தானை; வல் அசுரர் புரங்கள் மூன்றும்,
      வரை சிலையா வாசுகி மா நாணாக் கோத்துத்
துளைத்தானை, சுடு சரத்தால் துவள நீறா; தூ 
        முத்த வெண் முறுவல் உமையோடு ஆடித்
திளைத்தானை;-தென் கூடல்-திரு ஆலவா அய்ச்
       சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
உரை
   
191விண்ணுலகின் மேலார்கள் மேலான் தன்னை,
      மேல் ஆடு புரம் மூன்றும் பொடி செய்தானை,
பண் நிலவு பைம்பொழில் சூழ் பழனத்தானை,
      பசும் பொன்னின் நிறத்தானை, பால் நீற்றானை,
உள்-நிலவு சடைக்கற்றைக் கங்கையாளைக் கரந்து
      உமையோடு உடன் ஆகி இருந்தான் தன்னை,-
தெள்-நிலவு தென்கூடல்-திரு ஆலவா அய்ச்
       சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
உரை
   
192நீர்த்திரளை நீள் சடைமேல் நிறைவித்தானை,
        நிலம் மருவி நீர் ஓடக் கண்டான் தன்னை,
பால்-திரளைப் பயின்று ஆட வல்லான் தன்னை,
  பகைத்து எழுந்த வெங் கூற்றைப் பாய்ந்தான் தன்னை,
கால்-திரள் ஆய் மேகத்தினுள்ளே நின்று கடுங்
       குரல் ஆய் இடிப்பானை, கண் ஓர் நெற்றித்
தீத்திரளை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச்
      சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
உரை
   
193வானம், இது, எல்லாம் உடையான் தன்னை;
          வரி அரவக் கச்சானை; வன்பேய் சூழக்
கானம் அதில் நடம் ஆட வல்லான் தன்னை, கடைக்
     கண்ணால் மங்கையையும் நோக்கா; என்மேல்
ஊனம் அது எல்லாம் ஒழித்தான் தன்னை;
       உணர்வு ஆகி அடியேனது உள்ளே நின்ற
தேன் அமுதை;-தென்கூடல்-திரு ஆலவா அய்ச்
     சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
உரை
   
194ஊரானை, உலகு ஏழ் ஆய் நின்றான் தன்னை,
   ஒற்றை வெண் பிறையானை, உமையோடு என்றும்
பேரானை, பிறர்க்கு என்றும் அரியான் தன்னை,
    பிணக்காட்டில் நடம் ஆடல் பேயோடு என்றும்
ஆரானை, அமரர்களுக்கு அமுது ஈந்தானை,
      அருமறையால் நான்முகனும் மாலும் போற்றும்
சீரானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச்
       சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
உரை
   
195மூவனை, மூர்த்தியை, மூவா மேனி உடையானை,
                     மூ உலகும் தானே எங்கும்
பாவனை, பாவம் அறுப்பான் தன்னை, படி
                 எழுதல் ஆகாத மங்கையோடும்
மேவனை, விண்ணோர் நடுங்கக் கண்டு
         விரிகடலின் நஞ்சு உண்டு அமுதம் ஈந்த
தேவனை,-தென்கூடல்-திரு ஆலவா அய்ச்
     சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
உரை
   
196துறந்தார்க்குத் தூ நெறி ஆய் நின்றான் தன்னை,
        துன்பம் துடைத்து ஆள வல்லான் தன்னை,
இறந்தார்கள் என்பே அணிந்தான் தன்னை,
             எல்லி நடம் ஆட வல்லான் தன்னை;
மறந்தார் மதில் மூன்றும் மாய்த்தான் தன்னை,
      மற்று ஒரு பற்று இல்லா அடியேற்கு என்றும்
சிறந்தானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச்
     சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
உரை
   
197வாயானை, மனத்தானை, மனத்துள் நின்ற
   கருத்தானை, கருத்து அறிந்து முடிப்பான் தன்னை,
தூயானை, தூ வெள்ளை ஏற்றான் தன்னை,
  சுடர்த் திங்கள் சடையானை, தொடர்ந்து நின்ற என்
தாயானை, தவம் ஆய தன்மையானை, தலை
                 ஆய தேவாதி தேவர்க்கு என்றும்
சேயானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச்
        சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
உரை
   
198பகைச் சுடர் ஆய்ப் பாவம் அறுப்பான் தன்னை,
    பழி இலியாய் நஞ்சம் உண்டு அமுது ஈந்தானை,
வகைச் சுடர் ஆய் வல் அசுரர் புரம் அட்டானை,
  வளைவு இலியாய் எல்லார்க்கும் அருள் செய்வானை,
மிகைச் சுடரை, விண்ணவர்கள், மேல் அப்பாலை,
            மேல் ஆய தேவாதிதேவர்க்கு என்றும்
திகைச் சுடரை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச்
       சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
உரை
   
199மலையானை, மா மேரு மன்னினானை, வளர்புன்
                  சடையானை, வானோர் தங்கள்
தலையானை, என் தலையின் உச்சி என்றும்
            தாபித்து இருந்தானை, தானே எங்கும்
துலை ஆக ஒருவரையும் இல்லாதானை,
        தோன்றாதார் மதில் மூன்றும் துவள எய்த
சிலையானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச்
      சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
உரை
   
200தூர்த்தனைத் தோள் முடிபத்து இறுத்தான் தன்னை,
    தொல்-நரம்பின் இன் இசை கேட்டு அருள் செய்தானை,
பார்த்தனைப் பணி கண்டு பரிந்தான் தன்னை, பரிந்து
                   அவற்குப் பாசுபதம் ஈந்தான் தன்னை,
ஆத்தனை, அடியேனுக்கு அன்பன் தன்னை, அளவு
                         இலாப் பல் ஊழி கண்டு நின்ற
தீர்த்தனை,-தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன்
                   அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
உரை