6.22 திருநாகைக்காரோணம்
திருத்தாண்டகம்
221பாரார் பரவும் பழனத்தானை, பருப்பதத்தானை,
                              பைஞ்ஞீலியானை,
சீரார் செழும் பவளக்குன்று ஒப்பானை, திகழும்
                     திருமுடிமேல்-திங்கள் சூடிப்
பேர் ஆயிரம் உடைய பெம்மான் தன்னை, பிறர்
           தன்னைக் காட்சிக்கு அரியான் தன்னை,-
கார் ஆர் கடல் புடை சூழ் அம் தண்
  நாகைக்-காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.
உரை
   
222விண்ணோர் பெருமானை, வீரட்ட(ன்)னை, வெண்
               நீறு மெய்க்கு அணிந்த மேனியானை,
பெண்ணானை, ஆணானை, பேடியானை,
           பெரும்பற்றாத்தண் புலியூர் பேணினானை,
அண்ணாமலையானை, ஆன் ஐந்துஆடும் அணி
              ஆரூர் வீற்றிருந்த அம்மான் தன்னை,
கண் ஆர் கடல் புடை சூழ் அம் தண்
   நாகைக்-காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.
உரை
   
223சிறை ஆர் வரிவண்டு தேனே பாடும் திரு
           மறைக்காட்டு எந்தை சிவலோக(ன்)னை,
மறை ஆன்ற வாய் மூரும் கீழ் வேளூரும் வலி
                வலமும் தேவூரும் மன்னி அங்கே
உறைவானை, உத்தமனை, ஒற்றியூரில் பற்றி
                     ஆள்கின்ற பரமன் தன்னை,-
கறை ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகைக்
       காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.
உரை
   
224அன்னம் ஆம் பொய்கை சூழ் அம்பரானை,
              ஆச்சிராம(ந்) நகரும் ஆனைக்காவும்,
முன்னமே கோயிலாக் கொண்டான் தன்னை, மூ
              உலகும் தான் ஆய மூர்த்தி தன்னை,
சின்னம் ஆம் பல் மலர்கள் அன்றே சூடிச்
      செஞ்சடைமேல் வெண்மதியம் சேர்த்தினானை,-
கன்னி அம்புன்னை சூழ் அம் தண்
   நாகைக்காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.
உரை
   
225நடை உடைய நல் எருது ஒன்று ஊர்வான்
      தன்னை; ஞானப் பெருங்கடலை; நல்லூர் மேய,
படை உடைய மழுவாள் ஒன்று ஏந்தினானை;
               பன்மையே பேசும் படிறன் தன்னை;
மடை இடையே வாளை உகளும் பொய்கை
         மருகல் வாய்ச் சோதி மணி கண்ட(ன்)னை;-
கடை உடைய நெடுமாடம் ஓங்கு நாகைக்காரோணத்து
                     எஞ்ஞான்றும் காணல் ஆமே.
உரை
   
226புலம் கொள் பூந் தேறல் வாய்ப் புகலிக் கோனை;
             பூம்புகார்க் கற்பகத்தை; புன்கூர் மேய,
அலங்கல் அம் கழனி சூழ் அணி நீர்க் கங்கை
    அவிர் சடைமேல் ஆதரித்த, அம்மான் தன்னை;
இலங்கு தலைமாலை பாம்பு கொண்டே, ஏகாசம்
                  இட்டு இயங்கும் ஈசன் தன்னை;-
கலங்கல் கடல் புடை சூழ் அம் தண்
   நாகைக்காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.
உரை
   
227பொன் மணி அம் பூங்கொன்றை மாலையானை,
              புண்ணியனை, வெண் நீறு பூசினானை,
சில்மணிய மூ இலைய சூலத்தானை, தென்
                   சிராப்பள்ளிச் சிவலோக(ன்)னை,
மன் மணியை, வான் சுடலை ஊராப் பேணி வல்
             எருது ஒன்று ஏறும் மறை வல்லானை,-
கல் மணிகள் வெண் திரை சூழ் அம் தண்
  நாகைக் காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.
உரை
   
228வெண்தலையும் வெண்மழுவும் ஏந்தினானை, விரி
             கோவணம் அசைத்த வெண் நீற்றானை,
புண் தலைய மால்யானை உரி போர்த்தானை,
      புண்ணியனை, வெண் நீறு அணிந்தான் தன்னை
எண் திசையும் எரி ஆட வல்லான் தன்னை,
              ஏகம்பம் மேயானை, எம்மான் தன்னை,-
கண்டல் அம் கழனி சூழ் அம் தண் நாகைக்
          காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.
உரை
   
229சொல் ஆர்ந்த சோற்றுத் துறையான் தன்னை;
      தொல்-நரகம் நன்நெறியால்-தூர்ப்பான் தன்னை;
வில்லானை; மீயச்சூர் மேவினானை, வேதியர்கள்
                    நால்வர்க்கும் வேதம் சொல்லி,
பொல்லாதார் தம் அரணம் மூன்றும் பொன்ற,
     பொறி அரவம் மார்பு ஆரப் பூண்டான் தன்னை;
கல்லாலின் கீழானை;- கழி சூழ் நாகைக்
         காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.
உரை
   
230மனை துறந்த வல் அமணர் தங்கள் பொய்யும், மாண்பு
          உரைக்கும் மனக் குண்டர் தங்கள் பொய்யும்,
சினை பொதிந்த சீவரத்தர் தங்கள் பொய்யும், மெய்
                  என்று கருதாதே, போத, -நெஞ்சே!-
பனைஉரியைத் தன் உடலில் போர்த்த எந்தை-அவன்
                பற்றே பற்று ஆகக் காணின் அல்லால்,
கனைகடலின் தெண்கழி சூழ் அம் தண்
      நாகைக்காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே?.
உரை
   
231நெடியானும் மலரவனும் நேடி ஆங்கே நேர்
                  உருவம் காணாமே சென்று நின்ற
படியானை, பாம்புரமே காதலானை, பாம்பு
              அரையோடு ஆர்த்த படிறன் தன்னை,
செடி நாறும் வெண் தலையில் பிச்சைக்கு என்று
           சென்றானை, நின்றியூர் மேயான் தன்னை,-
கடி நாறு பூஞ்சோலை அம் தண்
   நாகைக்-காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.
உரை