6.28 திருஆரூர்
திருத்தாண்டகம்
279நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்;
                நீங்காமே வெள் எலும்பு பூண்டார்போலும்;
காற்றினையும் கடிது ஆக நடந்தார்போலும்;
             கண்ணின்மேல் கண் ஒன்று உடையார்போலும்;
கூற்றினையும் குரை கழலால் உதைத்தார்போலும்;
              கொல் புலித் தோல் ஆடைக் குழகர்போலும்;
ஆற்றினையும் செஞ்சடைமேல்
     வைத்தார்போலும்-அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
உரை
   
280பரியது ஓர் பாம்பு அரைமேல் ஆர்த்தார்போலும்;
           பாசுபதம் பார்த்தற்கு அளித்தார்போலும்;
கரியது ஓர் களிற்று உரிவை போர்த்தார்போலும்;
           காபாலம் கட்டங்கக் கொடியார்போலும்;
பெரியது ஓர் மலை வில்லா எய்தார்போலும்;
             பேர் நந்தி என்னும் பெயரார்போலும்;
அரியது ஓர் அரணங்கள் அட்டார்போலும்-
             அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
உரை
   
281துணி உடையர், தோல் உடையர், என்பார்போலும்;
                 தூய திருமேனிச் செல்வர்போலும்;
பிணி உடைய அடியாரைத் தீர்ப்பார்போலும்;
            பேசுவார்க்கு எல்லாம் பெரியார்போலும்;
மணி உடைய மா நாகம் ஆர்ப்பார்போலும்;
             வாசுகி மா நாணாக வைத்தார் போலும்;
அணி உடைய நெடுவீதி நடப்பார்போலும்-
              அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
உரை
   
282ஓட்டு அகத்தே ஊண் ஆக உகந்தார்போலும்;
      ஓர் உரு ஆய்த் தோன்றி உயர்ந்தார்போலும்;
நாட்டு அகத்தே நடைபலவும் நவின்றார்போலும்;
          ஞானப்பெருங்கடற்கு ஓர் நாதர்போலும்;
காட்டு அகத்தே ஆடல் உடையார்போலும்;
              காமரங்கள் பாடித் திரிவார்போலும்;
ஆட்டு அகத்தில் ஆன் ஐந்து உகந்தார்போலும்
            அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
உரை
   
283ஏனத்து இள மருப்புப் பூண்டார்போலும்;
          இமையவர்கள் ஏத்த இருந்தார்போலும்;
கானக் கல்லால்கீழ் நிழலார்போலும்; கடல்
        நஞ்சம் உண்டு இருண்ட கண்டர்போலும்;
வானத்து இளமதி சேர் சடையார்போலும்;
       வான் கயிலைவெற்பில் மகிழ்ந்தார்போலும்;
ஆனத்து முன் எழுத்து ஆய் நின்றார்போலும்-
           அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
உரை
   
284காமனையும் கரி ஆகக் காய்ந்தார்போலும்;
      கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர்போலும்;
சோமனையும் செஞ்சடைமேல் வைத்தார்போலும்;
   சொல் ஆகிச் சொல்பொருள் ஆய் நின்றார்போலும்;
நா மனையும் வேதத்தார் தாமேபோலும்;
             நங்கை ஓர்பால் மகிழ்ந்த நம்பர்போலும்;
ஆ(ம்)மனையும் திருமுடியார் தாமேபோலும்-
               அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
உரை
   
285முடி ஆர் மதி, அரவம், வைத்தார்போலும்;
               மூ உலகும் தாமே ஆய் நின்றார்போலும்;
செடி ஆர் தலைப் பலி கொண்டுஉழல்வார்போலும்;
                 செல் கதிதான் கண்ட சிவனார்போலும்;
கடி ஆர் நஞ்சு உண்டு இருண்ட கண்டர்போலும்;
                       கங்காளவேடக் கருத்தர்போலும்;
அடியார் அடிமை உகப்பார்போலும்-அணி
                        ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
உரை
   
286இந்திரத்தை இனிது ஆக ஈந்தார்போலும்;
    இமையவர்கள் வந்து இறைஞ்சும் இறைவர்போலும்;
சுந்தரத்த பொடிதன்னைத் துதைந்தார்போலும்;
             தூத் தூய திருமேனித் தோன்றல்போலும்;
மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார்போலும்;
           மா நாகம் நாண் ஆக, வளைத்தார்போலும்;
அம் திரத்தே அணியா நஞ்சு உண்டார்போலும்-
               அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
உரை
   
287பிண்டத்தைக் காக்கும் பிரானார்போலும்;
                 பிறவி, இறவி, இலாதார்போலும்;
முண்டத்து முக்கண் உடையார்போலும்;
                முழுநீறு பூசும் முதல்வர்போலும்;
கண்டத்து இறையே கறுத்தார்போலும்;
            காளத்தி, காரோணம், மேயார்போலும்;
அண்டத்துக்கு அப்புறம் ஆய் நின்றார்போலும்-
            அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
உரை
   
288ஒரு காலத்து ஒன்று ஆகி நின்றார்போலும்;
                   ஊழிபல கண்டு இருந்தார்போலும்;
பெருகாமே வெள்ளம் தவிர்த்தார்போலும்;
    பிறப்பு, இடும்பை, சாக்காடு, ஒன்று இல்லார்போலும்;
உருகாதார் உள்ளத்து நில்லார்போலும்;
         உகப்பார்தம் மனத்து என்றும் நீங்கார்போலும்;
அருகு ஆக வந்து என்னை, “அஞ்சல்!”
        என்பார்-அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
உரை
   
289நன்றாக நடைபலவும் நவின்றார்போலும்;
               ஞானப்பெருங்கடற்கு ஓர் நாதர்போலும்;
கொன்றாகிக் கொன்றது ஒன்று உண்டார்போலும்;
    கோள் அரக்கர்கோன் தலைகள் குறைத்தார்போலும்;
சென்று ஆர் திரிபுரங்கள் எய்தார்போலும்; திசை
       அனைத்தும் ஆய், அனைத்தும் ஆனார்போலும்;
அன்று ஆகில், ஆயிரம் பேரார்போலும்-
                அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
உரை