6.29 திருஆரூர்
திருத்தாண்டகம்
290திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை,
     தீம்கரும்பின், இன்சுவையை, தெளிந்த தேறல்,
குருமணியை, குழல் மொந்தை தாளம் வீணை
          கொக்கரையின் சச்சரியின் பாணியானை,
பரு மணியை, பவளத்தை, பசும்பொன், முத்தை,
    பருப்பதத்தில் அருங்கலத்தை, பாவம் தீர்க்கும்
அருமணியை, ஆரூரில் அம்மான்தன்னை,-
         அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.
உரை
   
291பொன்னே போல்-திருமேனி உடையான்தன்னை,
        பொங்கு வெண்நூலானை, புனிதன்தன்னை,
மின்னானை, மின் இடையாள் பாகன்தன்னை,
    வேழத்தின் உரி விரும்பிப் போர்த்தான்தன்னை,
தன்னானை, தன் ஒப்பார் இல்லாதானை,
      தத்துவனை, உத்தமனை, தழல் போல் மேனி
அன்னானை, ஆரூரில் அம்மான்தன்னை-
         அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.
உரை
   
292ஏற்றானை, ஏழ் உலகும் ஆனான்தன்னை,
         ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆனான்தன்னை,
கூற்றானை, கூற்றம் உதைத்தான்தன்னை,
   கொடுமழுவாள் கொண்டது ஓர் கையான்தன்னை,
காற்றானை, தீயானை, நீரும் ஆகி, கடி கமழும்
                  புன்சடைமேல் கங்கைவெள்ள-
ஆற்றானை, ஆரூரில் அம்மான்தன்னை,-
          அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.
உரை
   
293முந்திய வல்வினைகள் தீர்ப்பான்தன்னை,
               மூவாத மேனி முக்கண்ணினானை,
சந்திரனும் வெங்கதிரும் ஆயினானை,
            சங்கரனை, சங்கக் குழையான்தன்னை,
மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்தன்னை,
          மறுமையும் இம்மையும் ஆனான்தன்னை,
அம் திரனை, ஆரூரில் அம்மான்தன்னை,
         -அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.
உரை
   
294பிற நெறி ஆய், பீடு ஆகி, பிஞ்ஞகனும் ஆய்,
               பித்தனாய், பத்தர் மனத்தினுள்ளே
உற நெறி ஆய், ஓமம் ஆய், ஈமக்காட்டில்,
               ஓரிபல விட, நட்டம் ஆடினானை;
துறநெறி ஆய், தூபம் ஆய், தோற்றம் ஆகி,
      நாற்றம் ஆய், நல் மலர்மேல் உறையா நின்ற
அறநெறியை; ஆரூரில் அம்மான்தன்னை;-
          அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.
உரை
   
295பழகிய வல்வினைகள் பாற்றுவானை, பசுபதியை,
                     பாவகனை, பாவம் தீர்க்கும்
குழகனை, கோள் அரவு ஒன்று ஆட்டுவானை,
    கொடுகொட்டி கொண்டது ஓர் கையான்தன்னை,
விழவனை, வீரட்டம் மேவினானை,
             விண்ணவர்கள் ஏத்தி விரும்புவானை,
அழகனை, ஆரூரில் அம்மான்தன்னை,-அறியாது
                   அடிநாயேன் அயர்த்த ஆறே!.
உரை
   
296சூளாமணி சேர் முடியான்தன்னை,
          சுண்ணவெண்நீறு அணிந்த சோதியானை,
கோள் வாய் அரவம் அசைத்தான்தன்னை,
    கொல் புலித் தோல் ஆடைக் குழகன் தன்னை,
நாள் வாயும் பத்தர் மனத்து உளானை,
               நம்பனை, நக்கனை, முக்கணானை,
ஆள்வானை, ஆரூரில் அம்மான்தன்னை,-
          அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.
உரை
   
297முத்தினை, மணிதன்னை, மாணிக்கத்தை, மூவாத
                 கற்பகத்தின் கொழுந்து தன்னை,
கொத்தினை, வயிரத்தை, கொல் ஏறு ஊர்ந்து
     கோள் அரவு ஒன்று ஆட்டும் குழகன்தன்னை,
பத்தனை, பத்தர் மனத்து உளானை, பரிதி
             போல்-திருமேனி உடையான்தன்னை,
அத்தனை, ஆரூரில் அம்மான்தன்னை,-அறியாது
                  அடிநாயேன் அயர்த்த ஆறே!.
உரை
   
298பை ஆடு அரவம் கை ஏந்தினானை, பரிதி
               போல்-திருமேனிப் பால்நீற்றானை,
நெய் ஆடு திருமேனி நிமலன்தன்னை,
      நெற்றிமேல் மற்றொரு கண் நிறைவித்தானை,
செய்யானை, செழும் பவளத்திரள் ஒப்பானை,
    செஞ்சடைமேல் வெண்திங்கள் சேர்த்தினானை,
ஐயாறு மேயானை, ஆரூரானை,-அறியாது
                  அடிநாயேன் அயர்த்த ஆறே!.
உரை
   
299சீர் ஆர் முடிபத்து உடையான்தன்னைத் தேசு
             அழியத் திருவிரலால் சிதைய நூக்கிப்
பேர் ஆர் பெருமை கொடுத்தான்தன்னை, பெண்
        இரண்டும் ஆணும் ஆய் நின்றான் தன்னை,
போர் ஆர் புரங்கள் புரள நூறும் புண்ணியனை,
                   வெண்நீறு அணிந்தான்தன்னை,
ஆரானை, ஆரூரில் அம்மான்தன்னை,-அறியாது
                   அடிநாயேன் அயர்த்த ஆறே!.
உரை