6.30 திருஆரூர்
திருத்தாண்டகம்
300எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்;
           ஏழ்கடலும் ஏழ் உலகும் ஆயினான்காண்;
வம்பு உந்து கொன்றை அம்தார்-மாலையான்காண்;
   வளர்மதி சேர் கண்ணியன்காண்; வானோர் வேண்ட,
அம்பு ஒன்றால் மூ எயிலும் எரிசெய்தான்காண்;
       அனல் ஆடி, ஆன் அஞ்சும் ஆடினான்காண்-
செம்பொன் செய் மணி மாடத் திரு ஆரூரில்-திரு
               மூலட்டானத்து எம் செல்வன் தானே.
உரை
   
301அக்கு உலாம் அரையினன்காண்; அடியார்க்கு என்றும்
         ஆர் அமுது ஆய் அண்ணிக்கும் ஐயாற்றான்காண்;
கொக்கு, உலாம் பீலியொடு, கொன்றை மாலை,
               குளிர்மதியும், கூர் அரவும், நீரும், சென்னித்
தொக்கு உலாம் சடையினன்காண்; தொண்டர் செல்லும்
             தூநெறிகாண்-வானவர்கள் துதி செய்து ஏத்தும்,
திக்கு எலாம் நிறைந்த புகழ்த் திரு ஆரூரில்-திரு
                     மூலட்டானத்து எம் செல்வன் தானே.
உரை
   
302நீர் ஏறு சடைமுடி எம் நிமலன்தான்காண்;
     நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித்தான்காண்;
வார் ஏறு வனமுலையாள் பாகத்தான்காண்;
   வளர்மதி சேர் சடையான்காண்; மாதேவன்காண்;
கார் ஏறு முகில் அனைய கண்டத்தான்காண்;
      கல்லாலின்கீழ் அறங்கள் சொல்லினான்காண்-
சீர் ஏறு மணி மாடத் திரு ஆரூரில்-திரு
             மூலட்டானத்து எம் செல்வன்தானே.
உரை
   
303கான் ஏறு களிற்று உரிவைப் போர்வையான்காண்;
    கற்பகம்காண்; காலனை அன்று உதைசெய்தான்காண்;
ஊன் ஏறும் உடைதலையில் பலி கொள்வான்காண்;
             உத்தமன்காண்; ஒற்றியூர் மேவினான்காண்;
ஆன் ஏறு ஒன்று அது ஏறும் அண்ணல்
     தான்காண்; ஆதித்தன் பல் இறுத்த ஆதிதான்காண்-
தேன் ஏறு மலர்ச்சோலைத் திரு ஆரூரில்-திரு
                  மூலட்டானத்து எம் செல்வன்தானே.
உரை
   
304பிறப்போடு இறப்பு என்றும் இல்லாதான்காண்;
    பெண் உருவோடு ஆண் உருவம் ஆயினான்காண்;
மறப்படும் என் சிந்தை மருள் நீக்கினான்காண்;
          வானவரும் அறியாத நெறி தந்தான் காண்-
நறப் படு பூ மலர், தூபம், தீபம், நல்ல
      நறுஞ்சாந்தம், கொண்டு ஏத்தி நாளும் வானோர்
சிறப்போடு பூசிக்கும் திரு ஆரூரில்-திரு
                மூலட்டானத்து எம் செல்வன்தானே.
உரை
   
305சங்கரன்காண்; சக்கரம் மாற்கு அருள் செய்தான்காண்;
           தருணேந்து சேகரன்காண்; தலைவன் தான்காண்;
அம் கமலத்து அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை
    அறுத்தவன்காண்; அணி பொழில் சூழ் ஐயாற்றான்காண்;
எங்கள் பெருமான்காண்; என் இடர்கள் போக அருள்
             செய்யும் இறைவன்காண்- இமையோர் ஏத்தும்
செங்கமல வயல் புடை சூழ் திரு ஆரூரில்-திரு
                    மூலட்டானத்து எம் செல்வன் தானே.
உரை
   
306நன்று அருளி, தீது அகற்றும் நம்பிரான்காண்;
   நால் மறையோடு ஆறு அங்கம் ஆயினான்காண்;
மின் திகழும் சோதியான்காண்; ஆதிதான்காண்;
      வெள் ஏறு நின்று உலவு கொடியினான் காண்;
துன்று பொழில் கச்சி ஏகம்பன் தான்காண்;
          சோற்றுத்துறையான்காண்-சோலை சூழ்ந்த
தென்றலால் மணம் கமழும் திரு ஆரூரில்-திரு
             மூலட்டானத்து எம் செல்வன் தானே.
உரை
   
307பொன் நலத்த நறுங்கொன்றைச் சடையினான்காண்;
            புகலூரும் பூவணமும் பொருந்தினான்காண்;
மின் நலத்த நுண் இடையாள் பாகத்தான்காண்;
        வேதியன்காண்; வெண்புரிநூல் மார்பினான்காண்;
கொல்-நலத்த மூ இலை வேல் ஏந்தினான்காண்;
              கோலமா நீறு அணிந்த மேனியான்காண்-
செந் நலத்த வயல் புடை சூழ் திரு ஆரூரில்-திரு
                 மூலட்டானத்து எம் செல்வன் தானே.
உரை
   
308விண்டவர் தம் புரம் மூன்றும் எரி செய்தான்காண்;
     வேலை விடம் உண்டு இருண்ட கண்டத்தான்காண்;
மண்டலத்தில் ஒளி வளர விளங்கினான்காண்;
          வாய் மூரும் மறைக்காடும், மருவினான் காண்;
புண்டரிகக் கண்ணானும், பூவின்மேலைப்
        புத்தேளும், காண்பு அரிய புராணன் தான்காண்-
தெண் திரை நீர் வயல் புடை சூழ் திரு ஆரூரில்-திரு
                 மூலட்டானத்து எம் செல்வன் தானே.
உரை
   
309செரு வளரும் செங்கண் மால் ஏற்றினான்காண்;
             தென் ஆனைக்காவன்காண்; தீயில் வீழ,
மருவலர் தம் புரம் மூன்றும் எரி செய்தான் காண்;
       வஞ்சகர் பால் அணுகாத மைந்தன் தான்காண்;
அரு வரையை எடுத்தவன் தன் சிரங்கள் பத்தும்,
        ஐந் நான்கு தோளும், நெரிந்து அலற அன்று
திருவிரலால் அடர்த்தவன்காண்-திரு
  ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே.
உரை