6.33 திருஆரூர் அரநெறி
திருத்தாண்டகம்
330பொரும் கை மதகரி உரிவைப் போர்வையானை,
        பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தினானை,
கரும்பு தரு கட்டியை, இன் அமிர்தை, தேனை,
     காண்பு அரிய செழுஞ்சுடரை, கனகக் குன்றை,
இருங் கனகமதில் ஆரூர் மூலட்டானத்து
     எழுந்தருளி இருந்தானை, இமையோர் ஏத்தும்
அருந்தவனை, அரநெறியில் அப்பன் தன்னை,
   அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.
உரை
   
331கற்பகமும் இரு சுடரும் ஆயினானை, காளத்தி
                            கயிலாய மலை உளானை,
வில் பயிலும் மதன் அழிய விழித்தான் தன்னை,
             விசயனுக்கு வேடுவனாய் நின்றான் தன்னை,
பொற்பு அமரும் பொழில் ஆரூர் மூலட்டானம்
         பொருந்திய எம்பெருமானை, பொருந்தார் சிந்தை
அற்புதனை, அரநெறியில் அப்பன் தன்னை,
   அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.
உரை
   
332பாதி ஒரு பெண், முடிமேல் கங்கை யானை,
             பாசூரும் பரங்குன்றும் மேயான் தன்னை,
வேதியனை, தன் அடியார்க்கு எளியான் தன்னை,
         மெய்ஞ் ஞான விளக்கானை, விரையே நாறும்
போது இயலும் பொழில் ஆரூர் மூலட்டானம்
    புற்று இடம் கொண்டு இருந்தானை, போற்றுவார்கள்
ஆதியனை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து
       அடையேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.
உரை
   
333நந்தி பணி கொண்டு அருளும் நம்பன் தன்னை,
                   நாகேச்சுரம் இடமா நண்ணினானை,
சந்தி மலர் இட்டு அணிந்து வானோர் ஏத்தும்
          தத்துவனை, சக்கரம் மாற்கு ஈந்தான் தன்னை,
இந்து நுழை பொழில் ஆரூர் மூலட்டானம் இடம்
           கொண்ட பெருமானை, இமையோர் போற்றும்
அந்தணனை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து
           அடியேன் அருவினை நோய் அறுத்த வாறே!.
உரை
   
334சுடர்ப் பவளத் திருமேனி வெண் நீற்றானை,
                  சோதிலிங்கத் தூங்கானை மாடத்தானை,
விடக்கு இடுகாடு இடம் ஆக உடையான்தன்னை,
            மிக்க(அ)அரணம் எரியூட்ட வல்லான் தன்னை,
மடல் குலவு பொழில் ஆரூர் மூலட்டானம்
               மன்னிய எம்பெருமானை, மதியார் வேள்வி
அடர்த்தவனை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து
             அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.
உரை
   
335தாய் அவனை, எவ் உயிர்க்கும்; தன் ஒப்பு இல்லாத்
      தகு தில்லை நடம் பயிலும் தலைவன் தன்னை;
மாயவனும், மலரவனும், வானோர், ஏத்த மறி கடல்
            நஞ்சு உண்டு உகந்த மைந்தன் தன்னை;
மேயவனை, பொழில் ஆரூர் மூலட்டானம்,
       விரும்பிய எம்பெருமானை; எல்லாம் முன்னே
ஆயவனை; அரநெறியில் அப்பன் தன்னை; அடைந்து
        அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.
உரை
   
336பொருள் இயல் நல் சொல் பதங்கள் ஆயினானை,
               புகலூரும் புறம்பயமும் மேயான் தன்னை,
மருள் இயலும் சிந்தையர்க்கு மருந்து தன்னை,
               மறைக்காடும் சாய்க்காடும் மன்னினானை,
இருள் இயன்ற பொழில் ஆரூர் மூலட்டானத்து
          இனிது அமரும் பெருமானை, இமையோர் ஏத்த
அருளியனை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து
            அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.
உரை
   
337காலனைக் காலால் காய்ந்த கடவுள் தன்னை,
             காரோணம் கழிப்பாலை மேயான் தன்னை,
பாலனுக்குப் பாற்கடல் அன்று ஈந்தான் தன்னை,
         பணி உகந்த அடியார்கட்கு இனியான் தன்னை,
சேல் உகளும் வயல் ஆரூர் மூலட்டானம் சேர்ந்து
                   இருந்த பெருமானை, பவளம் ஈன்ற
ஆலவனை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து
          அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.
உரை
   
338ஒப்பு ஒருவர் இல்லாத ஒருவன் தன்னை, ஓத்தூரும்
                              உறையூரும் மேவினானை,
வைப்பு அவனை, மாணிக்கச் சோதியானை,
                 மாருதமும் தீ வெளி நீர் மண் ஆனானை,
மெய்ப் பொருள் ஆய் அடியேனது உள்ளே நின்ற
                  வினை இலியை, திரு மூலட்டானம் மேய
அப் பொன்னை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து
              அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.
உரை
   
339பகலவன் தன் பல் உகுத்த படிறன் தன்னை,
            பராய்த்துறை பைஞ்ஞீலி இடம் பாவித்தானை,
இகலவனை, இராவணனை இடர் செய்தானை,
          ஏத்தாதார் மனத்து அகத்துள் இருள் ஆனானை,
புகழ் நிலவு பொழில் ஆரூர் மூலட்டானம்
            பொருந்திய எம்பெருமானை, போற்றார் சிந்தை
அகலவனை, அரநெறியில் அப்பன் தன்னை,
    அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.
உரை