6.38 திருஐயாறு
திருத்தாண்டகம்
380ஓசை ஒலி எலாம் ஆனாய், நீயே; உலகுக்கு
                        ஒருவனாய் நின்றாய், நீயே;
வாசமலர் எலாம் ஆனாய், நீயே; மலையான்
                        மருகனாய் நின்றாய், நீயே;
பேசப் பெரிதும் இனியாய், நீயே; பிரானாய் அடி
                       என்மேல் வைத்தாய், நீயே;
தேச விளக்கு எலாம் ஆனாய், நீயே திரு ஐயாறு
                       அகலாத செம்பொன்சோதீ!.
உரை
   
381நோக்க(அ)ரிய திருமேனி உடையாய், நீயே; நோவாமே
                   நோக்கு அருள வல்லாய், நீயே;
காப்ப(அ)ரிய ஐம்புலனும் காத்தாய், நீயே; காமனையும்
                  கண் அழலால் காய்ந்தாய், நீயே;
ஆர்ப்ப(அ)ரிய மா நாகம் ஆர்த்தாய், நீயே; அடியான்
            என்று அடி என்மேல் வைத்தாய், நீயே;
தீர்ப்ப (அ)ரிய வல்வினை நோய் தீர்ப்பாய், நீயே
           திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ!.
உரை
   
382கனத்து அகத்துக் கடுஞ் சுடர் ஆய் நின்றாய், நீயே;
      கடல், வரை, வான், ஆகாயம், ஆனாய், நீயே;
தனத்து அகத்துத் தலை கலனாக் கொண்டாய், நீயே;
       சார்ந்தாரைத் தகைந்து ஆள வல்லாய், நீயே;
மனத்து இருந்த கருத்து அறிந்து முடிப்பாய், நீயே;
         மலர்ச் சேவடி என்மேல் வைத்தாய், நீயே;
சினத்து இருந்த திரு நீலகண்டன், நீயே திரு ஐயாறு
                      அகலாத செம்பொன்சோதீ!.
உரை
   
383வான் உற்ற மா மலைகள் ஆனாய், நீயே; வடகயிலை
                          மன்னி இருந்தாய், நீயே;
ஊன் உற்ற ஒளி மழுவாள் படையாய், நீயே; ஒளி
           மதியோடு, அரவு, புனல், வைத்தாய், நீயே;
ஆன் உற்ற ஐந்தும் அமர்ந்தாய், நீயே; “அடியான்”
             என்று அடி என்மேல் வைத்தாய், நீயே;
தேன் உற்ற சொல் மடவாள் பங்கன், நீயே திரு
                 ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.
உரை
   
384பெண் ஆண் பிறப்பு இலியாய் நின்றாய், நீயே;
           பெரியார்கட்கு எல்லாம் பெரியாய், நீயே;
உண்ணா அருநஞ்சம் உண்டாய், நீயே; ஊழி
                     முதல்வனாய் நின்றாய், நீயே;
கண் ஆய் உலகு எலாம் காத்தாய், நீயே;
           கழல்சேவடி என்மேல் வைத்தாய், நீயே;
திண் ஆர் மழுவாள் படையாய், நீயே திரு ஐயாறு
                      அகலாத செம்பொன்சோதீ!.
உரை
   
385உற்றிருந்த உணர்வு எலாம் ஆனாய், நீயே;
      உற்றவர்க்கு ஓர் சுற்றம் ஆய் நின்றாய், நீயே;
கற்றிருந்த கலைஞானம் ஆனாய், நீயே; கற்றவர்க்கு
               ஓர் கற்பகம் ஆய் நின்றாய், நீயே;
பெற்றிருந்த தாய் அவளின் நல்லாய், நீயே;
        பிரானாய் அடி என்மேல் வைத்தாய், நீயே;
செற்றிருந்த திரு நீலகண்டன், நீயே திரு ஐயாறு
                     அகலாத செம்பொன்சோதீ!.
உரை
   
386எல்லா உலகமும் ஆனாய், நீயே; ஏகம்பம் மேவி
                               இருந்தாய், நீயே;
நல்லாரை நன்மை அறிவாய், நீயே; ஞானச்சுடர்
                   விளக்கு ஆய் நின்றாய், நீயே;
பொல்லா வினைகள் அறுப்பாய், நீயே; புகழ்ச்
               சேவடி என்மேல் வைத்தாய், நீயே;
செல்வாய செல்வம் தருவாய், நீயே திரு ஐயாறு
                      அகலாத செம்பொன்சோதீ!.
உரை
   
387ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய், நீயே; அளவு இல்
                       பெருமை உடையாய், நீயே;
பூவினில் நாற்றம் ஆய் நின்றாய், நீயே; போர்க்
           கோலம் கொண்டு எயில் எய்தாய், நீயே;
நாவில் நடு உரை ஆய் நின்றாய், நீயே; நண்ணி அடி
                      என்மேல் வைத்தாய், நீயே;
தேவர் அறியாத தேவன், நீயே திரு ஐயாறு
                      அகலாத செம்பொன்சோதீ!.
உரை
   
388எண் திசைக்கும் ஒண்சுடர் ஆய் நின்றாய், நீயே;
                  ஏகம்பம் மேய இறைவன், நீயே;
வண்டு இசைக்கும் நறுங்கொன்றைத் தாராய், நீயே;
              வாரா உலகு அருள வல்லாய், நீயே;
தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய், நீயே;
       தூ மலர்ச்சேவடி என்மேல் வைத்தாய், நீயே;
திண் சிலைக்கு ஓர் சரம் கூட்ட வல்லாய், நீயே
           திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.
உரை
   
389விண்டார் புரம் மூன்றும் எய்தாய், நீயே;
       விண்ணவர்க்கும் மேல் ஆகி நின்றாய், நீயே;
கண்டாரைக் கொல்லும் நஞ்சு உண்டாய், நீயே;
             காலங்கள் ஊழி ஆய் நின்றாய், நீயே;
தொண்டு ஆய் அடியேனை ஆண்டாய், நீயே; தூ
          மலர்ச்சேவடி என்மேல் வைத்தாய், நீயே;
திண் தோள் விட்டு எரி ஆடல் உகந்தாய், நீயே
            திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.
உரை
   
390ஆரும் அறியா இடத்தாய், நீயே; ஆகாயம் தேர்
                            ஊர வல்லாய், நீயே;
பேரும் பெரிய இலங்கை வேந்தன் பெரிய முடிபத்து
                              இறுத்தாய், நீயே;
ஊரும் புரம் மூன்றும் அட்டாய், நீயே; ஒண்
                    தாமரையானும் மாலும் கூடித்
தேரும் அடி என்மேல் வைத்தாய், நீயே திரு
               ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.
உரை