6.41 திருநெய்த்தானம்
திருத்தாண்டகம்
408வகை எலாம் உடையாயும் நீயே என்றும், வான்
                கயிலை மேவினாய் நீயே என்றும்,
மிகை எலாம் மிக்காயும் நீயே என்றும், வெண்காடு
                       மேவினாய் நீயே என்றும்,
பகை எலாம் தீர்த்து ஆண்டாய் நீயே என்றும்,
               பாசூர் அமர்ந்தாயும் நீயே என்றும்,
திகை எலாம் தொழச் செல்வாய் நீயே என்றும்,
         நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.
உரை
   
409ஆர்த்த எனக்கு அன்பன் நீயே என்றும்,
                  ஆதிக்கயிலாயன் நீயே என்றும்,
கூர்த்த நடம் ஆடி நீயே என்றும், “கோடிகா
                         மேய குழகா!” என்றும்,
பார்த்தற்கு அருள் செய்தாய் நீயே என்றும்,
            “பழையனூர் மேவிய பண்பா!” என்றும்,
தீர்த்தன் சிவலோகன் நீயே என்றும், நின்ற
               நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.
உரை
   
410அல் ஆய்ப் பகல் ஆனாய் நீயே என்றும், ஆதிக்
                        கயிலாயன் நீயே என்றும்,
கல்லால் அமர்ந்தாயும் நீயே என்றும், காளத்திக்
                        கற்பகமும் நீயே என்றும்,
சொல் ஆய்ப் பொருள் ஆனாய் நீயே என்றும்,
           சோற்றுத்துறை உறைவாய் நீயே என்றும்,
செல் வாய்த் திரு ஆனாய் நீயே என்றும், நின்ற
               நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.
உரை
   
411மின் நேர் இடைபங்கன் நீயே என்றும், வெண்
                கயிலை மேவினாய் நீயே என்றும்,
பொன் நேர் சடை முடியாய் நீயே என்றும், பூதகண
                           நாதன் நீயே என்றும்,
என் நா இரதத்தாய் நீயே என்றும், ஏகம்பத்து என்
                           ஈசன் நீயே என்றும்,
தென்னூர்ப்பதி உளாய் நீயே என்றும், நின்ற
              நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.
உரை
   
412முந்தி இருந்தாயும் நீயே என்றும், முன் கயிலை
                       மேவினாய் நீயே என்றும்,
நந்திக்கு அருள்செய்தாய் நீயே என்றும், நடம்
                  ஆடி நள்ளாறன் நீயே என்றும்,
பந்திப்ப(அ)ரியாயும் நீயே என்றும், பைஞ்ஞீலி
                      மேவினாய் நீயே என்றும்,
சித்திப்ப(அ)ரியாயும் நீயே என்றும், நின்ற
              நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.
உரை
   
413தக்கார் அடியார்க்கு நீயே என்றும், தலை ஆர்
                        கயிலாயன் நீயே என்றும்,
அக்கு ஆரம் பூண்டாயும் நீயே என்றும், ஆக்கூரில்-
                     தான் தோன்றி நீயே என்றும்,
புக்கு ஆய ஏழ் உலகும் நீயே என்றும், புள்ளிருக்கு
                        வேளுராய் நீயே என்றும்,
தெக்கு ஆரும் மாகோணத்தானே என்றும், நின்ற
               நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.
உரை
   
414புகழும் பெருமையாய் நீயே என்றும், பூங் கயிலை
                        மேவினாய் நீயே என்றும்,
இகழும் தலை ஏந்தி நீயே என்றும், இராமேச்சுரத்து
                          இன்பன் நீயே என்றும்,
அகழும் மதில் உடையாய் நீயே என்றும், ஆலவாய்
                        மேவினாய் நீயே என்றும்,
திகழும் மதிசூடி நீயே என்றும், நின்ற நெய்த்தானா!
                           என் நெஞ்சு உளாயே.
உரை
   
415வானவர்க்கு மூத்து இளையாய் நீயே என்றும்,
                  வானக் கயிலாயன் நீயே என்றும்,
கானம் நடம் ஆடி நீயே என்றும், கடவூரில்
                         வீரட்டன் நீயே என்றும்,
ஊன் ஆர் முடி அறுத்தாய் நீயே என்றும், ஒற்றியூர்
                          ஆரூராய் நீயே என்றும்,
தேன் ஆய் அமுது ஆனாய் நீயே என்றும், நின்ற
                நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.
உரை
   
416தந்தை தாய் இல்லாதாய் நீயே என்றும், தலை
                   ஆர் கயிலாயன் நீயே என்றும்,
எம் தாய் எம்பிரான் ஆனாய் நீயே என்றும்,
              ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும்,
முந்திய முக்கணாய் நீயே என்றும், மூவலூர்
                       மேவினாய் நீயே என்றும்,
சிந்தையாய், தேனூராய் நீயே என்றும், நின்ற
               நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.
உரை
   
417மறித்தான் வலி செற்றாய் நீயே என்றும்; வான்
                 கயிலை மேவினாய் நீயே என்றும்;
வெறுத்தார் பிறப்பு அறுப்பாய் நீயே என்றும்;
                   வீழிமிழலையாய் நீயே என்றும்;
அறத்தாய், அமுது ஈந்தாய் நீயே என்றும்;
           யாவர்க்கும் தாங்க ஒணா நஞ்சம் உண்டு,
பொறுத்தாய், புலன் ஐந்தும், நீயே என்றும்; நின்ற
                நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.
உரை