6.43 திருப்பூந்துருத்தி
திருத்தாண்டகம்
428நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை; நினையா
                   என் நெஞ்சை நினைவித்தானை;
கல்லாதன எல்லாம் கற்பித்தானை; காணாதன
                         எல்லாம் காட்டினானை;
சொல்லாதன எல்லாம் சொல்லி, என்னைத்
    தொடர்ந்து, இங்கு அடியேனை ஆளாக்கொண்டு,
பொல்லா என் நோய் தீர்த்த புனிதன் தன்னை,
       புண்ணியனே, பூந்துருத்திக் கண்டேன், நானே.
உரை
   
429குற்றாலம் கோகரணம் மேவினானை; கொடுங் கைக்
                 கருங்கூற்றைப் பாய்ந்தான் தன்னை;
உற்று ஆலம்-நஞ்சு உண்டு ஒடுக்கினானை; உணரா
                   என் நெஞ்சை உணர்வித்தானை;
பற்று ஆலின்கீழ் அங்கு இருந்தான் தன்னை; பண்
                ஆர்ந்த வீணை பயின்றான் தன்னை;
புற்று ஆடு அரவு ஆர்த்த புனிதன் தன்னை;
        புண்ணியனை; பூந்துருத்திக் கண்டேன், நானே.
உரை
   
430எனக்கு என்றும் இனியானை, எம்மான் தன்னை,
          எழில் ஆரும் ஏகம்பம் மேயான் தன்னை,
மனக்கு என்றும் வருவானை, வஞ்சர் நெஞ்சில்
            நில்லானை, நின்றியூர் மேயான் தன்னை,
தனக்கு என்றும் அடியேனை ஆளாக்கொண்ட
          சங்கரனை, சங்கவார் குழையான் தன்னை,
புனக் கொன்றைத்தார் அணிந்த புனிதன் தன்னை,
     பொய் இலியை பூந்துருத்திக் கண்டேன், நானே.
உரை
   
431வெறி ஆர் மலர்க்கொன்றை சூடினானை,
   வெள்ளானை வந்து இறைஞ்சும் வெண்காட்டானை,
அறியாது அடியேன் அகப்பட்டேனை, அல்லல்
                       கடல் நின்றும் ஏற வாங்கி
“நெறிதான் இது” என்று காட்டினானை, நிச்சல் நலி
                      பிணிகள் தீர்ப்பான் தன்னை,
பொறி ஆடு அரவு ஆர்த்த புனிதன் தன்னை, பொய்
           இலியை, பூந்துருத்திக் கண்டேன் நானே.
உரை
   
432மிக்கானை, வெண்நீறு சண்ணித்தானை, விண்டார்
                     புரம் மூன்றும் வேவ நோக்கி
நக்கானை, நால் மறைகள் பாடினானை, நல்லார்கள்
                             பேணிப் பரவ நின்ற
தக்கானை, தண் தாமரைமேல் அண்ணல் தலை
         கொண்டு மாத்திரைக்கண் உலகம் எல்லாம்
புக்கானை, புண்ணியனை, புனிதன் தன்னை, பொய்
           இலியை, பூந்துருத்திக் கண்டேன், நானே.
உரை
   
433ஆர்த்தானை, வாசுகியை, அரைக்கு ஓர் கச்சா
    அசைத்தானை; அழகு ஆய பொன் ஆர் மேனிப்
பூத்தானத்தான் முடியைப் பொருந்தா வண்ணம்
      புணர்த்தானை; பூங்கணையான் உடலம் வேவப்
பார்த்தானை; பரிந்தானை; பனி நீர்க்கங்கை படர்
           சடைமேல் பயின்றானை; பதைப்ப யானை
போர்த்தானை; புண்ணியனை; புனிதன் தன்னை;
     பொய் இலியை; பூந்துருத்திக் கண்டேன், நானே.
உரை
   
434எரித்தானை, எண்ணார் புரங்கள் மூன்றும் இமைப்பு
         அளவில் பொடி ஆக; எழில் ஆர் கையால்
உரித்தானை, மதகரியை உற்றுப் பற்றி; உமை
           அதனைக் கண்டு அஞ்சி நடுங்கக் கண்டு
சிரித்தானை; சீர் ஆர்ந்த பூதம் சூழ, திருச்சடைமேல்
                        -திங்களும் பாம்பும் நீரும்
புரித்தானை; புண்ணியனை, புனிதன் தன்னை; பொய்
           இலியை; பூந்துருத்திக் கண்டேன், நானே.
உரை
   
435வைத்தானை, வானோர் உலகம் எல்லாம், வந்து
         இறைஞ்சி மலர் கொண்டு நின்று போற்றும்
வித்தானை; வேண்டிற்று ஒன்று ஈவான் தன்னை;
     விண்ணவர் தம் பெருமானை; வினைகள் போக
உய்த்தானை; ஒலி கங்கை சடைமேல்-தாங்கி
     ஒளித்தானை; ஒருபாகத்து உமையோடு ஆங்கே
பொய்த்தானை; புண்ணியனை, புனிதன் தன்னை;
    பொய் இலியை; பூந்துருத்திக் கண்டேன், நானே.
உரை
   
436ஆண்டானை, வானோர் உலகம் எல்லாம்; அந் நாள்
                       அறியாத தக்கன் வேள்வி
மீண்டானை, விண்ணவர்களோடும் கூடி; விரை மலர்
                 மேல் நான்முகனும் மாலும் தேர
நீண்டானை; நெருப்பு உருவம் ஆனான் தன்னை;
        நிலை இலார் மும்மதிலும் வேவ, வில்லைப்
பூண்டானை; புண்ணியனை; புனிதன் தன்னை; பொய்
          இலியை; பூந்துருத்திக் கண்டேன், நானே.
உரை
   
437மறுத்தானை, மலை கோத்து அங்கு எடுத்தான் தன்னை,
   மணி முடியோடு இருபது தோள் நெரியக் காலால்
இறுத்தானை; எழு நரம்பின் இசை கேட்டானை; எண்
            திசைக்கும் கண் ஆனான் சிரம் மேல் ஒன்றை
அறுத்தானை; அமரர்களுக்கு அமுது ஈந்தானை;
                யாவர்க்கும் தாங்க ஒணா நஞ்சம் உண்டு
பொறுத்தானை; புண்ணியனை; புனிதன் தன்னை; பொய்
                இலியை; பூந்துருத்திக் கண்டேன், நானே.
உரை