6.46 திருஆவடுதுறை
திருத்தாண்டகம்
458நம்பனை, நால்வேதம் கரை கண்டானை, ஞானப்பெருங்கடலை,
                                நன்மை தன்னை,
கம்பனை, கல்லால் இருந்தான் தன்னை, கற்பகம் ஆய்
                        அடியார்கட்கு அருள் செய்வானை,
செம்பொன்னை, பவளத்தை, திரளும் முத்தை, திங்களை,
                                 ஞாயிற்றை, தீயை, நீரை,
அம்பொன்னை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே
                    அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.
உரை
   
459மின்னானை, மின் இடைச் சேர் உருமினானை, வெண்முகில
                 ஆய் எழுந்து மழை பொழிவான் தன்னை,
தன்னானை, தன் ஒப்பார் இல்லாதானை, தாய் ஆகிப் பல்
                             உயிர்க்கு ஓர் தந்தை ஆகி
என்னானை, எந்தை பெருமான் தன்னை, இரு நிலமும்
                       அண்டமும் ஆய்ச் செக்கர்வானே
அன்னானை, ஆவடு தண்துறையுள் மேய அரன் அடியே
                   அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!
உரை
   
460பத்தர்கள் சித்தத்தே பாவித்தானை, பவளக்கொழுந்தினை,
                                        மாணிக்கத்தின்
தொத்தினை, தூ நெறி ஆய் நின்றான் தன்னை, சொல்லுவார்
                        சொல் பொருளின் தோற்றம் ஆகி
வித்தினை, முளைக் கிளையை, வேரை, சீரை, வினை
                   வயத்தின் தன்சார்பை, வெய்ய தீர்க்கும்
அத்தனை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே
                    அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.
உரை
   
461பேணிய நல் பிறை தவழ் செஞ்சடையினானை, பித்தர் ஆம்
                             அடியார்க்கு முத்தி காட்டும்
ஏணியை, இடர்க் கடலுள் சுழிக்கப்பட்டு இங்கு
             இளைக்கின்றேற்கு அக் கரைக்கே ஏற வாங்கும்
தோணியை, தொண்டனேன் தூய சோதிச் சுலா
                     வெண்குழையானை, சுடர் பொன்காசின்
ஆணியை, ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே
                     அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.
உரை
   
462ஒரு மணியை, உலகுக்கு ஓர் உறுதிதன்னை, உதயத்தின்
                          உச்சியை, உரும் ஆனானை,
பருமணியை, பாலோடு அஞ்சு ஆடினானை, பவித்திரனை,
                            பசுபதியை, பவளக்குன்றை,
திருமணியை, தித்திப்பை, தேன் அது ஆகி, தீம்கரும்பின்
                         இன்சுவையை, திகழும் சோதி
அருமணியை, ஆவடுதண் துறையுள் மேய அரன்
          அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.
உரை
   
463ஏற்றானை, எண்தோள் உடையான் தன்னை, எல்லில் நடம்
                             ஆட வல்லான் தன்னை,
கூற்றானை, கூற்றம் உதைத்தான் தன்னை, குரை கடல்வாய்
                       நஞ்சு உண்ட கண்டன் தன்னை,
நீற்றானை, நீள் அரவு ஒன்று ஆர்த்தான் தன்னை, நீண்ட
                      சடைமுடிமேல் நீர் ஆர் கங்கை
ஆற்றானை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே
                 அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.
உரை
   
464கைம் மான மதகளிற்றை உரித்தான் தன்னை, கடல் வரை
                      வான் ஆகாசம் ஆனான் தன்னை,
செம் மானப் பவளத்தை, திகழும் முத்தை, திங்களை,
                             ஞாயிற்றை, தீ ஆனானை,
எம்மானை, என் மனமே கோயில் ஆக இருந்தானை,
                       என்பு உருகும் அடியார் தங்கள்
அம்மானை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே
                  அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.
உரை
   
465மெய்யானை, பொய்யரொடு விரவாதானை, வெள்ளடையை,
                         தண்நிழலை, வெந்தீ ஏந்தும்
கையானை, காமன் உடல் வேவக் காய்ந்த கண்ணானை,
                     கண்மூன்று உடையான் தன்னை,
பை ஆடு அரவம் மதி உடனே வைத்த சடையானை,
               பாய் புலித்தோல் உடையான் தன்னை,
ஐயானை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே
               அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.
உரை
   
466வேண்டாமை வேண்டுவதும் இல்லான் தன்னை, விசயனை
                    முன் அசைவித்த வேடன் தன்னை,
தூண்டாமைச் சுடர் விடு நல் சோதி தன்னை,
                   சூலப்படையானை, காலன் வாழ்நாள்
மாண்டு ஓட உதை செய்த மைந்தன் தன்னை, மண்ணவரும்
                        விண்ணவரும் வணங்கி ஏத்தும்
ஆண்டானை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே
                  அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.
உரை
   
467பந்து அணவு மெல்விரலாள் பாகன் தன்னை, பாடலோடு
                        ஆடல் பயின்றான் தன்னை,
கொந்து அணவு நறுங்கொன்றை மாலையானை, கோல
                        மா நீலமிடற்றான் தன்னை,
செந்தமிழோடு ஆரியனை, சீரியானை, திரு மார்பில்
                     புரி வெண்நூல் திகழப் பூண்ட
அந்தணனை, ஆவடுதண் துறையுள் மேய அரன்
       அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.
உரை
   
468தரித்தானை, தண்கடல் நஞ்சு, உண்டான் தன்னை; தக்கன்
               தன் பெரு வேள்வி தகர்த்தான் தன்னை;
பிரித்தானை; பிறை தவழ் செஞ்சடையினானை; பெரு
             வலியால் மலை எடுத்த அரக்கன் தன்னை
நெரித்தானை; நேரிழையாள் பாகத்தானை; நீசனேன் உடல்
                               உறு நோய் ஆன தீர
அரித்தானை; ஆவடு தண் துறையுள் மேய அரன் அடியே
                 அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.
உரை