6.57 திருக்கயிலாயம்
போற்றித் திருத்தாண்டகம்
572பாட்டு ஆன நல்ல தொடையாய், போற்றி! பரிசை
                   அறியாமை நின்றாய், போற்றி!
சூட்டு ஆன திங்கள் முடியாய், போற்றி! தூ
             மாலை மத்தம் அணிந்தாய், போற்றி!
ஆட்டு ஆனது அஞ்சும் அமர்ந்தாய், போற்றி!
          அடங்கார் புரம் எரிய நக்காய், போற்றி!
காட்டு ஆனை மெய்த்தோல் உரித்தாய், போற்றி!
           கயிலை மலையானே, போற்றி போற்றி!.
உரை
   
573அதிரா வினைகள் அறுப்பாய், போற்றி! ஆல
                நிழல் கீழ் அமர்ந்தாய், போற்றி!
சதுரா, சதுரக் குழையாய், போற்றி! சாம்பர்
                 மெய் பூசும் தலைவா, போற்றி!
எதிரா உலகம் அமைப்பாய், போற்றி! என்றும்
               மீளா அருள் செய்வாய், போற்றி!
கதிர் ஆர் கதிருக்கு ஓர் கண்ணே, போற்றி!
          கயிலை மலையானே, போற்றி போற்றி!.
உரை
   
574செய்யாய், கரியாய், வெளியாய், போற்றி!
           செல்லாத செல்வம் உடையாய், போற்றி!
ஐயாய், பெரியாய், சிறியாய், போற்றி! ஆகாய
                      வண்ண முடியாய், போற்றி!
வெய்யாய், தணியாய், அணியாய், போற்றி!
             வேளாத வேள்வி உடையாய், போற்றி!
கை ஆர் தழல் ஆர் விடங்கா, போற்றி!
             கயிலை மலையானே, போற்றி போற்றி!.
உரை
   
575ஆட்சி உலகை உடையாய், போற்றி! அடியார்க்கு
                  அமுது எலாம் ஈவாய், போற்றி!
சூட்சி சிறிதும் இலாதாய், போற்றி! சூழ்ந்த
                கடல் நஞ்சம் உண்டாய், போற்றி!
மாட்சி பெரிதும் உடையாய், போற்றி! மன்னி
                என் சிந்தை மகிழ்ந்தாய், போற்றி!
காட்சி பெரிதும் அரியாய், போற்றி! கயிலை
                   மலையானே, போற்றி போற்றி!.
உரை
   
576மு(ன்)ன்னியா நின்ற முதல்வா, போற்றி! மூவாத
                      மேனி உடையாய், போற்றி!
என்(னி)னியாய், எந்தை பிரானே, போற்றி!
            ஏழ் இன் இசையே உகப்பாய், போற்றி!
மன்னிய மங்கை மணாளா, போற்றி! மந்திரமும்
                    தந்திரமும் ஆனாய், போற்றி!
கன்னி ஆர் கங்கைத் தலைவா, போற்றி! கயிலை
                   மலையானே, போற்றி போற்றி!.
உரை
   
577உரியாய், உலகினுக்கு எல்லாம், போற்றி! உணர்வு
            என்னும் ஊர்வது உடையாய், போற்றி!
எரி ஆய தெய்வச் சுடரே, போற்றி! ஏசும்
                 மா முண்டி உடையாய், போற்றி!
அரியாய், அமரர்கட்கு எல்லாம், போற்றி!
           அறிவே அடக்கம் உடையாய், போற்றி!
கரியானுக்கு ஆழி அன்று ஈந்தாய், போற்றி!
            கயிலை மலையானே, போற்றி போற்றி!.
உரை
   
578எண் மேலும் எண்ணம் உடையாய், போற்றி! ஏறு
                அரிய ஏறும் குணத்தாய், போற்றி!
பண் மேலே பாவித்து இருந்தாய், போற்றி!
      பண்ணொடு யாழ் வீணை பயின்றாய், போற்றி!
விண் மேலும் மேலும் நிமிர்ந்தாய், போற்றி!
         மேலார்கள் மேலார்கள் மேலாய், போற்றி!
கண் மேலும் கண் ஒன்று உடையாய், போற்றி!
            கயிலை மலையானே, போற்றி போற்றி!.
உரை
   
579முடி ஆர் சடை மேல் மதியாய், போற்றி! முழுநீறு
                    சண்ணித்த மூர்த்தி, போற்றி!
துடி ஆர் இடை உமையாள் பங்கா, போற்றி!
         சோதித்தார் காணாமை நின்றாய், போற்றி!
அடியார் அடிமை அறிவாய், போற்றி! அமரர்
                  பதி ஆள வைத்தாய், போற்றி!
கடி ஆர் புரம் மூன்றும் எய்தாய், போற்றி!
           கயிலை மலையானே, போற்றி போற்றி!.
உரை
   
580போற்று இசைத்து உன் அடி பரவ நின்றாய், போற்றி!
           புண்ணியனே, நண்ணல் அரியாய், போற்றி!
ஏற்று இசைக்கும் வான்மேல் இருந்தாய், போற்றி!
               எண்ணாயிரம்-நூறு பெயராய், போற்றி!
நால்-திசைக்கும் விளக்கு ஆய நாதா, போற்றி!
           நான்முகற்கும் மாற்கும் அரியாய், போற்றி!
காற்று இசைக்கும் திசைக்கு எல்லாம் வித்தே,
       போற்றி! கயிலை மலையானே, போற்றி போற்றி!.
உரை