6.60 திருக்கற்குடி
திருத்தாண்டகம்
601மூத்தவனை, வானவர்க்கு; மூவா மேனி முதலவனை; 
             திரு அரையில் மூக்கப் பாம்பு ஒன்று
ஆத்தவனை; அக்கு, அரவம், ஆரம் ஆக
   அணிந்தவனை; பணிந்து அடியார் அடைந்த அன்போடு
ஏத்தவனை; இறுவரையில்-தேனை, ஏனோர்க்கு; இன்
           அமுதம் அளித்தவனை; இடரை எல்லாம்
காத்தவனை; கற்குடியில் விழுமியானை; கற்பகத்தை;
                  கண் ஆரக் கண்டேன், நானே.
உரை
   
602செய்யானை, வெளியானை, கரியான் தன்னை,
    திசைமுகனை, திசை எட்டும் செறிந்தான் தன்னை,
ஐயானை, நொய்யானை, சீரியானை, அணியானை,
                  சேயானை, ஆன் அஞ்சு ஆடும்
மெய்யானை, பொய்யாதும் இல்லான் தன்னை,
    விடையானை, சடையானை, வெறித்த மான் கொள்
கையானை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை,
                   கண் ஆரக் கண்டேன், நானே.
உரை
   
603மண் அதனில் ஐந்தை; மா நீரில் நான்கை; வயங்கு
             எரியில் மூன்றை; மாருதத்து இரண்டை;
விண் அதனில் ஒன்றை; விரிகதிரை; தண்மதியை,
                       தாரகைகள் தம்மில்; மிக்க
எண் அதனில் எழுத்தை; ஏழ் இசையை; காமன்
      எழில் அழிய எரி உமிழ்ந்த இமையா நெற்றிக்-
கண்ணவனை; கற்குடியில் விழுமியானை;
        கற்பகத்தை;-கண் ஆரக் கண்டேன், நானே.
உரை
   
604நல்-தவனை, புற்று அரவம் நாணினானை, நாணாது
              நகுதலை ஊண் நயந்தான் தன்னை,
முற்றவனை, மூவாத மேனியானை, முந்நீரின்
              நஞ்சம் உகந்து உண்டான் தன்னை,
பற்றவனை, பற்றார்தம் பதிகள் செற்ற படையானை,
                அடைவார் தம் பாவம் போக்கக்
கற்றவனை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை,
                 கண் ஆரக் கண்டேன், நானே.
உரை
   
605சங்கை தனைத் தவிர்த்து ஆண்ட தலைவன் தன்னை,
       சங்கரனை, தழல் உறு தாள் மழுவாள் தாங்கும்
அம் கையனை, அங்கம் அணி ஆகத்தானை,
               ஆகத்து ஓர்பாகத்தே அமர வைத்த
மங்கையனை, மதியொடு மாசுணமும் தம்மில் மருவ
            விரிசடை முடி மேல் வைத்த வான்நீர்க்-
கங்கையனை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை,
                    கண் ஆரக் கண்டேன், நானே.
உரை
   
606பெண் அவனை, ஆண் அவனை, பேடு ஆனானை,
        பிறப்பு இலியை, இறப்பு இலியை, பேரா வாணி
விண்ணவனை, விண்ணவர்க்கும் மேல் ஆனானை,
                வேதியனை, வேதத்தின் கீதம் பாடும்
பண்ணவனை, பண்ணில் வரு பயன் ஆனானை, பார்
           அவனை, பாரில் வாழ் உயிர்கட்கு எல்லாம்
கண் அவனை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை,
                      கண் ஆரக் கண்டேன், நானே.
உரை
   
607பண்டானை, பரந்தானை, குவிந்தான் தன்னை,
       பாரானை, விண் ஆய் இவ் உலகம் எல்லாம்
உண்டானை, உமிழ்ந்தானை, உடையான் தன்னை,
      ஒருவரும் தன் பெருமைதனை அறிய ஒண்ணா
விண்டானை, விண்டார் தம் புரங்கள் மூன்றும்
        வெவ் அழலில் வெந்து பொடி ஆகி வீழக்
கண்டானை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை,
                  கண் ஆரக் கண்டேன், நானே.
உரை
   
608வானவனை, வானவர்க்கு மேல் ஆனானை, வணங்கும்
                 அடியார் மனத்துள் மருவிப் புக்க
தேன் அவனை, தேவர் தொழு கழலான் தன்னை,
         செய் குணங்கள் பல ஆகி நின்ற வென்றிக்
கோன் அவனை, கொல்லை விடை ஏற்றினானை,
        குழல் முழவம் இயம்பக் கூத்து ஆட வல்ல
கானவனை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை,
                   கண் ஆரக் கண்டேன், நானே.
உரை
   
609கொலை யானை உரி போர்த்த கொள்கையானை,
    கோள் அரியை, கூர் அம்பா வரை மேல் கோத்த
சிலையானை, செம்மை தரு பொருளான் தன்னை,
         திரி புரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த
தலையானை, தத்துவங்கள் ஆனான் தன்னை,
             தையல் ஓர்பங்கினனை, தன் கை ஏந்து
கலையானை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை,
                   கண் ஆரக் கண்டேன், நானே.
உரை
   
610பொழிலானை, பொழில் ஆரும் புன்கூரானை, புறம்
                பயனை, அறம் புரிந்த புகலூரானை,
எழிலானை, இடை மருதின் இடம் கொண்டானை,
     ஈங்கோய் நீங்காது உறையும் இறைவன் தன்னை,
அழல் ஆடு மேனியனை, அன்று சென்று அக் குன்று
          எடுத்த அரக்கன் தோள் நெரிய ஊன்றும்
கழலானை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை,
                   கண் ஆரக் கண்டேன், நானே.
உரை