6.68 திருமுதுகுன்றம்
திருத்தாண்டகம்
681கருமணியை, கனகத்தின் குன்று ஒப்பானை,
             கருதுவார்க்கு ஆற்ற எளியான் தன்னை,
குருமணியை, கோள் அரவம் ஆட்டுவானை,
        கொல் வேங்கை அதளானை, கோவண(ன்)னை,
அருமணியை, அடைந்தவர்கட்கு அமுது ஒப்பானை,
         ஆன் அஞ்சும் ஆடியை, நான் அபயம் புக்க
திருமணியை, திரு முதுகுன்று உடையான் தன்னை,
            தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.
உரை
   
682கார் ஒளிய கண்டத்து எம் கடவுள் தன்னை,
                  காபாலி, கட்டங்கம் ஏந்தினானை,
பார் ஒளியை, விண் ஒளியை, பாதாள(ன்)னை, பால்
                மதியம் சூடி ஓர் பண்பன் தன்னை,
பேரொளியை, பெண் பாகம் வைத்தான் தன்னை,
        பேணுவார் தம் வினையைப் பேணி வாங்கும்
சீர் ஒளியை, திரு முதுகுன்று உடையான் தன்னை,
          தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.
உரை
   
683எத்திசையும் வானவர்கள் தொழ நின்றானை, ஏறு
             ஊர்ந்த பெம்மானை, “எம்மான்!” என்று
பத்தனாய்ப் பணிந்த(அ)டியேன் தன்னைப் பல்-நாள்
                   பாமாலை பாடப் பயில்வித்தானை,
முத்தினை, என் மணியை, மாணிக்கத்தை, முளைத்து
            எழுந்த செம்பவளக் கொழுந்து ஒப்பானை,
சித்தனை, என் திரு முதுகுன்று உடையான்
    தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.
உரை
   
684ஊன் கருவின் உள்-நின்ற சோதியானை,
         உத்தமனை, பத்தர் மனம் குடி கொண்டானை,
கான் திரிந்து காண்டீபம் ஏந்தினானை, கார்
                  மேகமிடற்றானை, கனலை, காற்றை,
தான் தெரிந்து அங்கு அடியேனை ஆளாக்கொண்டு
        தன்னுடைய திருவடி என் தலை மேல் வைத்த
தீம் கரும்பை, திரு முதுகுன்று உடையான்
    தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.
உரை
   
685தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் ஆகி,
             தாமரை ஆர் நான்முகனும் தானே ஆகி,
மிக்கது ஒரு தீவளி நீர் ஆகாசம்(ம்) ஆய்,
        மேல் உலகுக்கு அப்பால் ஆய், இப்பாலானை;
அக்கினொடு முத்தினையும் அணிந்து,
   தொண்டர்க்கு அங்கு அங்கே அறுசமயம் ஆகி நின்ற
திக்கினை; என் திரு முதுகுன்று உடையான் தன்னை;
              தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.
உரை
   
686புகழ் ஒளியை, புரம் எரித்த புனிதன் தன்னை,
      பொன் பொதிந்த மேனியனை, புராணன் தன்னை,
விழவு ஒலியும் விண் ஒலியும் ஆனான் தன்னை,
               வெண்காடு மேவிய விகிர்தன் தன்னை,
கழல் ஒலியும் கைவளையும் ஆர்ப்ப ஆர்ப்ப,
         கடைதோறும் இடு பிச்சைக்கு என்று செல்லும்
திகழ் ஒளியை, திரு முதுகுன்று உடையான்
     தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.
உரை
   
687போர்த்து, ஆனையின் உரி-தோல் பொங்கப்பொங்க,
           புலி அதளே உடையாகத் திரிவான் தன்னை;
காத்தானை, ஐம்புலனும்; புரங்கள் மூன்றும்,
         காலனையும், குரைகழலால் காய்ந்தான் தன்னை;
மாத்து ஆடிப் பத்தராய் வணங்கும் தொண்டர்
       வல்வினைவேர் அறும் வண்ணம் மருந்தும் ஆகித்
தீர்த்தானை; திரு முதுகுன்று உடையான் தன்னை;
              தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.
உரை
   
688துறவாதே யாக்கை துறந்தான் தன்னை, சோதி முழு
                       முதல் ஆய் நின்றான் தன்னை,
பிறவாதே எவ் உயிர்க்கும் தானே ஆகிப்
    பெண்ணினோடு ஆண் உரு ஆய் நின்றான் தன்னை,
மறவாதே தன் திறமே வாழ்த்தும் தொண்டர்
            மனத்து அகத்தே அனவரதம் மன்னி நின்ற
திறலானை, திரு முதுகுன்று உடையான் தன்னை,
             தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.
உரை
   
689பொன் தூணை, புலால் நாறு கபாலம் ஏந்திப்
               புவலோகம் எல்லாம் உழி தந்தானை,
முற்றாத வெண் திங்கள் கண்ணியானை, முழு
       முதல் ஆய் மூஉலகும் முடிவு ஒன்று இல்லாக்
கல்-தூணை, காளத்தி மலையான் தன்னை,
            கருதாதார் புரம் மூன்றும் எரிய அம்பால்
செற்றானை, திரு முதுகுன்று உடையான்
   தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.
உரை
   
690இகழ்ந்தானை இருபது தோள் நெரிய ஊன்றி,
             எழுநரம்பின் இசை பாட இனிது கேட்டு,
புகழ்ந்தானை; பூந்துருத்தி மேயான் தன்னை;
        புண்ணியனை; விண்ணவர்கள் நிதியம் தன்னை;
மகிழ்ந்தானை, மலைமகள் ஓர்பாகம் வைத்து;
          வளர் மதியம் சடை வைத்து, மால் ஓர்பாகம்
திகழ்ந்தானை; திரு முதுகுன்று உடையான்
    தன்னை; தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.
உரை