தொடக்கம் |
|
|
6.74 திருநாரையூர் திருத்தாண்டகம் |
734 | சொல்லானை, பொருளானை, சுருதியானை, சுடர் ஆழி நெடுமாலுக்கு அருள் செய்தானை, அல்லானை, பகலானை, அரியான் தன்னை, அடியார்கட்கு எளியானை, அரண் மூன்று எய்த வில்லானை, சரம் விசயற்கு அருள் செய்தானை, வெங்கதிரோன் மா முனிவர் விரும்பி ஏத்தும் நல்லானை, தீ ஆடும் நம்பன் தன்னை, நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே. |
|
உரை
|
|
|
|
|
735 | பஞ்சுண்ட மெல் அடியாள் பங்கன் தன்னை; பாரொடு, நீர், சுடர், படர் காற்று, ஆயினானை; மஞ்சுண்ட வான் ஆகி, வானம் தன்னில் மதி ஆகி, மதி சடை மேல் வைத்தான் தன்னை; நெஞ்சுண்டு என் நினைவு ஆகி நின்றான் தன்னை; நெடுங்கடலைக் கடைந்தவர் போய் நீங்க, ஓங்கும் நஞ்சு உண்டு, தேவர்களுக்கு அமுது ஈந்தானை; நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே. |
|
உரை
|
|
|
|
|
736 | மூவாது யாவர்க்கும் மூத்தான் தன்னை, முடியாதே முதல் நடுவு முடிவு ஆனானை, தேவாதி தேவர்கட்கும் தேவன் தன்னை, திசைமுகன் தன் சிரம் ஒன்று சிதைத்தான் தன்னை, ஆ வாத அடல் ஏறு ஒன்று உடையான் தன்னை, அடியேற்கு நினைதோறும் அண்ணிக்கின்ற நாவானை, நாவினில் நல் உரை ஆனானை, நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே. |
|
உரை
|
|
|
|
|
737 | செம்பொன்னை, நன் பவளம் திகழும் முத்தை, செழுமணியை, தொழுமவர் தம் சித்தத்தானை, வம்பு அவிழும் மலர்க்கணை வேள் உலக்க நோக்கி மகிழ்ந்தானை, மதில் கச்சி மன்னுகின்ற கம்பனை, எம் கயிலாய மலையான் தன்னை, கழுகினொடு காகுத்தன் கருதி ஏத்தும் நம்பனை, எம்பெருமானை, நாதன் தன்னை, நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே. |
|
உரை
|
|
|
|
|
738 | புரை உடைய கரி உரிவைப் போர்வையானை, புரிசடை மேல் புனல் அடைத்த புனிதன் தன்னை, விரை உடைய வெள் எருக்கு அம் கண்ணியானை, வெண்நீறு செம்மேனி விரவினானை, வரை உடைய மகள் தவம் செய் மணாளன் தன்னை, வரு பிணிநோய் பிரிவிக்கும் மருந்து தன்னை, நரை விடை நல் கொடி உடைய நாதன் தன்னை, நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே. |
|
உரை
|
|
|
|
|
739 | பிறவாதும் இறவாதும் பெருகினானை, பேய் பாட நடம் ஆடும் பித்தன் தன்னை, மறவாத மனத்து அகத்து மன்னினானை, மலையானை, கடலானை, வனத்து உளானை, உறவானை, பகையானை, உயிர் ஆனானை, உள்ளானை, புறத்தானை, ஓசையானை, நறவு ஆரும் பூங்கொன்றை சூடினானை, நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே. |
|
உரை
|
|
|
|
|
740 | தக்கனது வேள்வி கெடச் சாடினானை, தலை கலனாப் பலி ஏற்ற தலைவன் தன்னை, கொக்கரை சச்சரி வீணைப் பாணியானை, கோள் நாகம் பூண் ஆகக் கொண்டான் தன்னை, அக்கினொடும் என்பு அணிந்த அழகன் தன்னை, அறுமுகனோடு ஆனை முகற்கு அப்பன் தன்னை, நக்கனை, வக்கரையானை, நள்ளாற்றானை, நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே. |
|
உரை
|
|
|
|
|
741 | அரிபிரமர் தொழுது ஏத்தும் அத்தன் தன்னை, அந்தகனுக்கு அந்தகனை, அளக்கல் ஆகா எரி புரியும் இலிங்கபுராணத்து உளானை, எண் ஆகிப் பண் ஆர் எழுத்து ஆனானை, திரிபுரம் செற்று ஒருமூவர்க்கு அருள் செய்தானை, சிலந்திக்கும் அரசு அளித்த செல்வன் தன்னை, நரி விரவு காட்டு அகத்தில் ஆடலானை, நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே. |
|
உரை
|
|
|
|
|
742 | ஆலாலம் மிடற்று அணியா அடக்கினானை; ஆல் அதன் கீழ் அறம் நால்வர்க்கு அருள்செய்தானை; பால் ஆகி, தேன் ஆகி, பழமும் ஆகி, பைங்கரும்பு ஆய், அங்கு அருந்தும் சுவை ஆனானை, மேல் ஆய வேதியர்க்கு வேள்வி ஆகி, வேள்வியினின் பயன் ஆய விமலன் தன்னை; நால் ஆய மறைக்கு இறைவன் ஆயினானை; நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே. |
|
உரை
|
|
|
|
|
743 | மீளாத ஆள் என்னை உடையான் தன்னை, வெளி செய்த வழிபாடு மேவினானை, மாளாமை மறையவனுக்கு உயிரும் வைத்து வன்கூற்றின் உயிர் மாள உதைத்தான் தன்னை, தோள் ஆண்மை கருதி வரை எடுத்த தூர்த்தன் தோள்வலியும் தாள்வலியும் தொலைவித்து ஆங்கே நாளோடு வாள் கொடுத்த நம்பன் தன்னை, நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே. |
|
உரை
|
|
|
|