6.79 திருத்தலையாலங்காடு
திருத்தாண்டகம்
785தொண்டர்க்குத் தூநெறி ஆய் நின்றான் தன்னை,
             சூழ் நரகில் வீழாமே காப்பான் தன்னை,
அண்டத்துக்கு அப்பாலைக்கு அப்பாலானை,
          ஆதிரை நாள் ஆதரித்த அம்மான் தன்னை,
முண்டத்தின் முளைத்து எழுந்த தீ ஆனானை,
       மூ உருவத்து ஓர் உரு ஆய் முதல் ஆய் நின்ற
தண்டத்தில்-தலையாலங்காடன் தன்னை,
                 சாராதே சால நாள் போக்கினேனே!.
உரை
   
786அக்கு இருந்த அரையானை, அம்மான் தன்னை,
        அவுணர் புரம் ஒரு நொடியில் எரி செய்தானை,
கொக்கு இருந்த மகுடத்து எம் கூத்தன் தன்னை,
          குண்டலம் சேர் காதானை, குழைவார் சிந்தை
புக்கு இருந்து போகாத புனிதன் தன்னை, 
    புண்ணியனை, எண்ண(அ)ரும் சீர்ப் போகம் எல்லாம்
தக்கு இருந்த தலையாலங்காடன் தன்னை,
                  சாராதே சால நாள் போக்கினேனே!.
உரை
   
787மெய்த்தவத்தை; வேதத்தை; வேதவித்தை;
        விளங்கு இளமாமதி சூடும் விகிர்தன் தன்னை;
எய்த்து அவமே உழிதந்த ஏழையேனை
                இடர்க்கடலில் வீழாமே, ஏற வாங்கி,
பொய்த்தவத்தார் அறியாத நெறி நின்றானை;
        புனல் கரந்திட்டு உமையொடு ஒருபாகம் நின்ற
தத்துவனை; தலையாலங்காடன் தன்னை;
                 சாராதே சால நாள் போக்கினேனே!.
உரை
   
788சிவன் ஆகி, திசைமுகனாய், திருமால் ஆகி,
        செழுஞ் சுடர் ஆய், தீ ஆகி, நீரும் ஆகி,
புவன் ஆகி, புவனங்கள் அனைத்தும் ஆகி,
          பொன் ஆகி, மணி ஆகி, முத்தும் ஆகி,
பவன் ஆகி, பவனங்கள் அனைத்தும் ஆகி,
            பசு ஏறி, திரிவான் ஓர் பவனாய், நின்ற
தவன் ஆய தலையாலங்காடன் தன்னை
              சாராதே சால நாள் போக்கினேனே!.
உரை
   
789கங்கை எனும் கடும் புனலைக் கரந்தான் தன்னை,
          கா மரு பூம்பொழில் கச்சிக் கம்பன் தன்னை,
அம் கையினில் மான் மறி ஒன்று ஏந்தினானை,
                      ஐயாறு மேயானை, ஆரூரானை,
பங்கம் இலா அடியார்க்குப் பரிந்தான் தன்னை,
                      பரிதிநியமத்தானை, பாசூரானை,
சங்கரனை, தலையாலங்காடன் தன்னை,
                  சாராதே சால நாள் போக்கினேனே!.
உரை
   
790விடம் திகழும் அரவு அரை மேல் வீக்கினானை,
       விண்ணவர்க்கும் எண்ண(அ)ரிய அளவினானை,
அடைந்தவரை அமருலகம் ஆள்விப்பானை,
         அம்பொன்னை, கம்ப மா களிறு அட்டானை,
மடந்தை ஒருபாகனை, மகுடம் தன்மேல்
           வார்புனலும் வாள் அரவும் மதியும் வைத்த
தடங்கடலை, தலையாலங்காடன் தன்னை,
                 சாராதே சால நாள் போக்கினேனே!.
உரை
   
791விடை ஏறிக் கடைதோறும் பலி கொள்வானை,
              வீரட்டம் மேயானை, வெண் நீற்றானை,
முடை நாறும் முதுகாட்டில் ஆடலானை,
            முன்னானை, பின்னானை, அந் நாளானை,
உடை ஆடை உரி-தோலே உகந்தான் தன்னை,
          உமை இருந்த பாகத்துள் ஒருவன் தன்னை,
சடையானை, தலையாலங்காடன் தன்னை,
                சாராதே சால நாள் போக்கினேனே!.
உரை
   
792கரும்பு இருந்த கட்டிதனை, கனியை, தேனை,
             கன்றாப்பின் நடுதறியை, காறையானை,
இரும்பு அமர்ந்த மூ இலைவேல் ஏந்தினானை,
       என்னானை, தென் ஆனைக்காவான் தன்னை,
சுரும்பு அமரும் மலர்க்கொன்றை சூடினானை,
          தூயானை, தாய் ஆகி உலகுக்கு எல்லாம்
தரும் பொருளை, தலையாலங்காடன் தன்னை,
               சாராதே சால நாள் போக்கினேனே!.
உரை
   
793பண்டு அளவு நரம்பு ஓசைப் பயனை, பாலை,
         படுபயனை, கடுவெளியை, கனலை, காற்றை,
கண்ட(அ)ளவில் களி கூர்வார்க்கு எளியான்
    தன்னை, காரணனை, நாரணனை, கமலத்தோனை,
எண் தள இல் என் நெஞ்சத்துள்ளே நின்ற
          எம்மானை, கைம்மாவின் உரிவை பேணும்
தண்டு அரனை, தலையாலங்காடன் தன்னை,
               சாராதே சால நாள் போக்கினேனே!.
உரை
   
794கைத்தலங்கள் இருபது உடை அரக்கர் கோமான்
           கயிலை மலை அது தன்னைக் கருதாது ஓடி,
முத்து இலங்கு முடி துளங்க வளைகள் எற்றி
     முடுகுதலும், திருவிரல் ஒன்று அவன் மேல் வைப்ப,
பத்து இலங்கு வாயாலும் பாடல் கேட்டு, பரிந்து,
            அவனுக்கு “இராவணன்” என்று ஈந்த நாமத்
தத்துவனை; தலையாலங்காடன் தன்னை;
                   சாராதே சால நாள் போக்கினேனே!.
உரை