6.82 திருச்சாய்க்காடு
திருத்தாண்டகம்
813வானத்து இளமதியும் பாம்பும் தன்னில் வளர்
             சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலும்;
தேனைத் திளைத்து உண்டு வண்டு பாடும்
               தில்லை நடம் ஆடும் தேவர் போலும்;
ஞானத்தின் ஒண் சுடர் ஆய் நின்றார் போலும்;
               நன்மையும் தீமையும் ஆனார் போலும்;
தேன் ஒத்து அடியார்க்கு இனியார் போலும்
    திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
உரை
   
814விண்ணோர் பரவ நஞ்சு உண்டார் போலும்;
            வியன் துருத்தி வேள்விக்குடியார் போலும்;
அண்ணாமலை உறையும் அண்ணல் போலும்;
               அதியரைய மங்கை அமர்ந்தார் போலும்;
பண் ஆர் களி வண்டு பாடி ஆடும்
                 பராய்த்துறையுள் மேய பரமர் போலும்
திண் ஆர் புகார் முத்து அலைக்கும் தெண்நீர்த்
    திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
உரை
   
815கான் இரிய வேழம் உரித்தார் போலும்; காவிரிப்
                   பூம்பட்டினத்து உள்ளார் போலும்;
வான் இரிய வரு புரம் மூன்று எரித்தார் போலும்;
       வட கயிலை மலை அது தம் இருக்கை போலும்;
ஊன் இரியத் தலை கலனா உடையார் போலும்;
         உயர் தோணிபுரத்து உறையும் ஒருவர் போலும்
தேன் இரிய மீன் பாயும் தெண்நீர்ப் பொய்கைத்
    திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
உரை
   
816ஊன் உற்ற வெண்தலை சேர் கையர்போலும்;
                ஊழி பல கண்டு இருந்தார் போலும்;
மான் உற்ற கரதலம் ஒன்று உடையார் போலும்;
           மறைக்காட்டுக் கோடி மகிழ்ந்தார் போலும்;
கான் உற்ற ஆடல் அமர்ந்தார் போலும்;
        காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும்
தேன் உற்ற சோலை திகழ்ந்து தோன்றும் திருச்
         சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
உரை
   
817கார் மல்கு கொன்றை அம்தாரார் போலும்;
        காலனையும் ஓர் உதையால் கண்டார் போலும்;
பார் மல்கி ஏத்தப்படுவார் போலும்; பருப்பதத்தே
                        பல் ஊழி நின்றார் போலும்;
ஊர் மல்கு பிச்சைக்கு உழன்றார் போலும்;
                ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலும்;
சீர் மல்கு பாடல் உகந்தார் போலும் திருச்
        சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
உரை
   
818மா வாய் பிளந்து உகந்த மாலும், செய்ய-
           மலரவனும், தாமேயாய் நின்றார் போலும்;
மூவாத மேனி முதல்வர் போலும்;
               முதுகுன்றமூதூர் உடையார் போலும்;
கோ ஆய முனிதன்மேல் வந்த கூற்றைக் குரை
             கழலால், அன்று, குமைத்தார் போலும்;
தேவாதிதேவர்க்கு அரியார் போலும் திருச்
      சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
உரை
   
819கடு வெளியோடு ஓர் ஐந்தும் ஆனார் போலும்;
             காரோணத்து என்றும் இருப்பார் போலும்;
இடி குரல் வாய்ப் பூதப்படையார் போலும்;
                  ஏகம்பம் மேவி இருந்தார் போலும்;
படி ஒருவர் இல்லாப் படியார் போலும்;
            பாண்டிக்கொடு முடியும் தம் ஊர் போலும்;
செடி படு நோய் அடியாரைத் தீர்ப்பார் போலும் 
    திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
உரை
   
820விலை இலா ஆரம் சேர் மார்பர் போலும்;
       வெண்நீறு மெய்க்கு அணிந்த விகிர்தர் போலும்;
மலையினார் மங்கை மணாளர் போலும்;
           மாற்பேறு காப்பு ஆய் மகிழ்ந்தார் போலும்;
தொலைவு இலார் புரம் மூன்றும் தொலைத்தார்
    போலும்; சோற்றுத்துறை, துருத்தி, உள்ளார் போலும்;
சிலையின் ஆர் செங்கண் அரவர் போலும்
    திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
உரை
   
821அல்லல் அடியார்க்கு அறுப்பார் போலும்;
     அமருலகம் தம் அடைந்தார்க்கு ஆட்சிபோலும்;
நல்லமும் நல்லூரும் மேயார் போலும்;
                 நள்ளாறு நாளும் பிரியார் போலும்;
முல்லை முகை நகையாள் பாகர் போலும்;
           முன்னமே தோன்றி முளைத்தார் போலும்;
தில்லை நடம் ஆடும் தேவர் போலும் திருச்
       சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
உரை
   
822உறைப்பு உடைய இராவணன் பொன்மலையைக் கையால் 
         ஊக்கம் செய்து எடுத்தலுமே, உமையாள் அஞ்ச,
நிறைப் பெருந்தோள் இருபதும் பொன் முடிகள்
       பத்தும் நிலம் சேர, விரல் வைத்த நிமலர் போலும்;
பிறைப்பிளவு சடைக்கு அணிந்த பெம்மான் போலும்;
              பெண் ஆண் உரு ஆகி நின்றார் போலும்;
சிறப்பு உடைய அடியார்கட்கு இனியார் போலும் திருச்
           சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
உரை