6.83 திருப்பாசூர்
திருத்தாண்டகம்
823விண் ஆகி, நிலன் ஆகி, விசும்பும் ஆகி,
              வேலை சூழ் ஞாலத்தார் விரும்புகின்ற
எண் ஆகி, எழுத்து ஆகி, இயல்பும் ஆகி, ஏழ்
              உலகும் தொழுது ஏத்திக் காண நின்ற
கண் ஆகி, மணி ஆகி, காட்சி ஆகி, காதலித்து
                   அங்கு அடியார்கள் பரவ நின்ற
பண் ஆகி, இன் அமுது ஆம் பாசூர் மேய
      பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.
உரை
   
824வேதம் ஓர் நான்கு ஆய், ஆறு அங்கம் ஆகி,
      விரிக்கின்ற பொருட்கு எல்லாம் வித்தும் ஆகி,
கூதல் ஆய், பொழிகின்ற மாரி ஆகி, குவலயங்கள்
                 முழுதும் ஆய், கொண்டல் ஆகி,
காதலால் வானவர்கள், “போற்றி!” என்று
             கடிமலர்கள் அவை தூவி ஏத்த நின்ற
பாதி ஓர் மாதினனை; பாசூர் மேய பரஞ்சுடரை;
                 கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.
உரை
   
825தடவரைகள் ஏழும் ஆய், காற்றும் ஆய், தீ ஆய்,
        தண் விசும்பு ஆய், தண் விசும்பின் உச்சி ஆகி,
கடல் வலயம் சூழ்ந்தது ஒரு ஞாலம் ஆகி,
                 காண்கின்ற கதிரவனும் மதியும் ஆகி,
குடமுழவச் சதிவழியே அனல் கை ஏந்திக்
                    கூத்து ஆட வல்ல குழகன் ஆகி,
பட அரவு ஒன்று அது ஆட்டிப் பாசூர் மேய
         பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.
உரை
   
826நீர் ஆரும் செஞ்சடை மேல் அரவம் கொன்றை
                நிறை மதியம் உடன் சூடி, நீதியாலே
சீர் ஆரும் மறை ஓதி, உலகம் உய்யச் செழுங்
             கடலைக் கடைந்த கடல் நஞ்சம் உண்ட
கார் ஆரும் கண்டனை; கச்சி மேய
              கண்ணுதலை; கடல் ஒற்றி கருதினானை;
பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர்ப்
        பரஞ்சுடரை; கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.
உரை
   
827வேடனாய் விசயன் தன் வியப்பைக் காண்பான்,
       வில் பிடித்து, கொம்பு உடைய ஏனத்தின் பின்,
கூடினார் உமை அவளும் கோலம் கொள்ள,
       கொலைப் பகழி உடன் கோத்து கோரப் பூசல்;
ஆடினார், பெருங்கூத்துக் காளி காண;
     அருமறையோடு ஆறு அங்கம் ஆய்ந்து கொண்டு,
பாடினார், நால்வேதம்; பாசூர் மேய
       பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.
உரை
   
828புத்தியினால் சிலந்தியும் தன் வாயின் நூலால்
    பொதுப் பந்தர் அது இழைத்துச் சருகால் மேய்ந்த
சித்தியினால், அரசு ஆண்டு சிறப்புச் செய்யச்
         சிவகணத்துப் புகப் பெய்தார்; திறலால் மிக்க
வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு
              விரவியவா கண்டு, அதற்கு வீடு காட்டி,
பத்தர்களுக்கு இன் அமுது ஆம் பாசூர் மேய
       பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.
உரை
   
829இணை ஒருவர் தாம் அல்லால் யாரும் இல்லார்;
         இடை மருதோடு ஏகம்பத்து என்றும் நீங்கார்;
அணைவு அரியர், யாவர்க்கும்; ஆதிதேவர்;
          அருமந்த நன்மை எலாம் அடியார்க்கு ஈவர்;
தணல் முழுகு பொடி ஆடும் செக்கர் மேனித்
         தத்துவனை, சாந்து அகிலின் அளறு தோய்ந்த
பணை முலையாள் பாகனை, எம் பாசூர் மேய
        பரஞ்சுடரை, கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.
உரை
   
830அண்டவர்கள் கடல் கடைய, அதனுள்-தோன்றி,
          அதிர்ந்து எழுந்த ஆலாலம் வேலை ஞாலம்
எண்திசையும் சுடுகின்ற ஆற்றைக் கண்டு, இமைப்பு
         அளவில் உண்டு இருண்ட கண்டர்; தொண்டர்
வண்டு படு மதுமலர்கள் தூவி நின்று, வானவர்கள்
                       தானவர்கள் வணங்கி, ஏத்தும்
பண்டரங்க வேடனை; எம் பாசூர் மேய
         பரஞ்சுடரை; கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.
உரை
   
831ஞாலத்தை உண்ட திருமாலும், மற்றை நான்முகனும்,
                         அறியாத நெறியார்; கையில்
சூலத்தால் அந்தகனைச் சுருளக் கோத்து, தொல்
            உலகில் பல் உயிரைக் கொல்லும் கூற்றைக்
கால(த்)த்தால் உதைசெய்து, காதல் செய்த
     அந்தணனைக் கைக்கொண்ட செவ்வான் வண்ணர்;
பால் ஒத்த வெண்நீற்றர்; பாசூர் மேய
        பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.
உரை
   
832வேந்தன், நெடு முடி உடைய அரக்கர் கோமான்,
       மெல்லியலாள் உமை வெருவ, விரைந்திட்டு, ஓடி,
சாந்தம் என நீறு அணிந்தான் கயிலை வெற்பைத்
          தடக்கைகளால் எடுத்திடலும், தாளால் ஊன்றி
ஏந்து திரள் திண் தோளும் தலைகள் பத்தும் இறுத்து,
          அவன் தன் இசை கேட்டு, இரக்கம் கொண்ட,
பாந்தள் அணி சடைமுடி, எம் பாசூர் மேய,
         பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.
உரை