6.85 திருமுண்டீச்சுரம்
திருத்தாண்டகம்
843ஆர்த்தான் காண், அழல் நாகம் அரைக்கு நாணா;
     அடியவர்கட்கு அன்பன் காண்; ஆனைத்தோலைப்
போர்த்தான் காண்; புரிசடை மேல் புனல் ஏற்றான்
     காண்; புறங்காட்டில் ஆடல் புரிந்தான் தான் காண்;
காத்தான் காண், உலகு ஏழும் கலங்கா வண்ணம்,
    கனை கடல் வாய் நஞ்சு அதனைக் கண்டத்துள்ளே!
சேர்த்தான் காண் திரு முண்டீச்சுரத்து மேய
         சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.
உரை
   
844கருத்தன் காண்; கமலத்தோன் தலையில் ஒன்றைக்
        காய்ந்தான் காண்; பாய்ந்த நீர் பரந்த சென்னி
ஒருத்தன் காண்; உமையவள் ஓர்பாகத்தான் காண்;
        ஓர் உருவின் மூஉரு ஆய், ஒன்று ஆய், நின்ற
விருத்தன் காண்; விண்ணவர்க்கும் மேல் ஆனான்
      காண்; மெய் அடியார் உள்ளத்தே விரும்பி நின்ற
திருத்தன் காண் திரு முண்டீச்சுரத்து மேய
        சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.
உரை
   
845நம்பன்காண், நரை விடை ஒன்று ஏறினான் காண்,
           நாதன் காண், கீதத்தை நவிற்றினான் காண்;
இன்பன் காண், இமையா முக்கண்ணினான் காண்,
             ஏசற்று மனம் உருகும் அடியார் தங்கட்கு
அன்பன் காண், ஆர் அழல் அது ஆடினான் காண்,
  “அவன், இவன்” என்று யாவர்க்கும் அறிய ஒண்ணாச்
செம்பொன் காண் திரு முண்டீச்சுரத்து மேய
        சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.
உரை
   
846மூவன் காண்; மூவர்க்கும் முதல் ஆனான் காண்;
   முன்னும் ஆய், பின்னும் ஆய், முடிவு ஆனான் காண்;
காவன் காண்; உலகுக்கு ஓர் கண் ஆனான் காண்;
           கங்காளன் காண்; கயிலை மலையினான் காண்;
ஆவன் காண்; ஆ அகத்து அஞ்சு ஆடினான் காண்;
    ஆர் அழல் ஆய் அயற்கு அரிக்கும் அறிய ஒண்ணாத்
தேவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன்
                      காண்; அவன் என் சிந்தையானே.
உரை
   
847கானவன் காண், கானவனாய்ப் பொருதான் தான் காண்,
           கனல் ஆட வல்லான் காண், கையில் ஏந்தும்
மானவன் காண், மறை நான்கும் ஆயினான் காண்,
        வல் ஏறு ஒன்று அது ஏற வல்லான் தான் காண்,
ஊனவன் காண், உலகத்துக்கு உயிர் ஆனான் காண், உரை
            அவன் காண், உணர்வு அவன் காண்,
                             உணர்ந்தார்க்கு என்றும்
தேன் அவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய
           சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.
உரை
   
848உற்றவன் காண், உறவு எல்லாம் ஆவான் தான் காண்,
       ஒழிவு அற நின்று எங்கும் உலப்பு இலான் காண்,
புற்று அரவே ஆடையும் ஆய்ப் பூணும் ஆகிப்
        புறங்காட்டில் எரி ஆடல் புரிந்தான் தான் காண்,
நல்-தவன் காண், அடி அடைந்த மாணிக்கு ஆக
          நணுகியது ஓர் பெருங் கூற்றைச் சேவடியினால்
செற்றவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன்
                    
உரை
   
849உதைத்தவன் காண், உணராத தக்கன் வேள்வி உருண்டு 
            ஓட; தொடர்ந்து அருக்கன் பல்லை எல்லாம்
தகர்த்தவன் காண்; தக்கன் தன் தலையைச் செற்ற
     தலையவன் காண்; மலைமகள் ஆம் உமையைச் சால
மதிப்பு ஒழிந்த வல் அமரர் மாண்டார் வேள்வி
          வந்து அவி உண்டவரோடும் அதனை எல்லாம்
சிதைத்தவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய
           சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.
உரை
   
850உரிந்த உடையார் துவரால் உடம்பை மூடி
       உழிதரும் அவ் ஊமர் அவர் உணரா வண்ணம்
பரிந்தவன் காண் பனிவரை மீப் பண்டம் எல்லாம்
    பறித்து, உடனே நிரந்து வரு பாய் நீர்ப்பெண்ணை,
நிரந்து வரும் இருகரையும் தடவா ஓடி,
           நின்மலனை வலம் கொண்டு, நீள நோக்கி,
திரிந்து உலவு திரு முண்டீச்சுரத்து மேய
        சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.
உரை
   
851அறுத்தவன் காண், அடியவர்கள் அல்லல் எல்லாம்;
   அரும்பொருள் ஆய் நின்றவன் காண்; அநங்கன் ஆகம்
மறுத்தவன் காண்; மலை தன்னை மதியாது ஓடி,
          மலைமகள் தன் மனம் நடுங்க, வானோர் அஞ்ச,
கறுத்தவனாய், கயிலாயம் எடுத்தோன் கையும் கதிர்
                        முடியும் கண்ணும் பிதுங்கி ஓடச்
செறுத்தவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய
           சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.
உரை