6.86 திருஆலம்பொழில்
திருத்தாண்டகம்
852கரு ஆகிக் கண்ணுதலாய் நின்றான் தன்னை, கமலத்தோன்
                          தலை அரிந்த காபாலி(ய்)யை,
உரு ஆர்ந்த மலை மகள் ஓர் பாகத்தானை, உணர்வு எலாம்
                               ஆனானை, ஓசை ஆகி
வருவானை, வலஞ்சுழி எம் பெருமான் தன்னை, மறைக்காடும்
                            ஆவடு தண்துறையும் மேய
திருவானை, தென்பரம்பைக்குடியில் மேய திரு
                    ஆலம்பொழிலானை, சிந்தி, நெஞ்சே!.
உரை
   
853உரித்தானை, களிறு அதன் தோல் போர்வை ஆக;
             உடையானை, உடை புலியின் அதளே ஆக;
தரித்தானை, சடை அதன் மேல் கங்கை, அங்கைத்
     தழல் உருவை; விடம் அமுதா உண்டு, இது எல்லாம்
பரித்தானை; பவள மால்வரை அன்னானை; பாம்பு
       அணையான் தனக்கு, அன்று, அங்கு ஆழி நல்கிச்
சிரித்தானை; தென் பரம்பைக்குடியில் மேய திரு
                 ஆலம் பொழிலானை; சிந்தி, நெஞ்சே!.
உரை
   
854உரு மூன்று ஆய் உணர்வின் கண் ஒன்று ஆனானை; ஓங்கார
                       மெய்ப்பொருளை; உடம்பிலுள்ளால்
கரு ஈன்ற வெங்களவை அறிவான் தன்னை; காலனைத் தன்
                      கழல் அடியால் காய்ந்து, மாணிக்கு
அருள் ஈன்ற ஆரமுதை; அமரர் கோனை; அள் ஊறி,
                    “எம்பெருமான்!” என்பார்க்கு என்றும்
திரு ஈன்ற தென் பரம்பைக்குடியில் மேய திரு
                     ஆலம்பொழிலானை; சிந்தி, நெஞ்சே!.
உரை
   
855பார் முழுது ஆய் விசும்பு ஆகிப் பாதாளம்(ம்) ஆம்
           பரம்பரனை; சுரும்பு அமரும் குழலாள் பாகத்து
ஆர் அமுது ஆம் அணி தில்லைக் கூத்தன் தன்னை;
             வாட்போக்கி அம்மானை; “எம்மான்!” என்று
வாரம் அது ஆம் அடியார்க்கு வாரம் ஆகி, வஞ்சனை
                  செய்வார்க்கு என்றும் வஞ்சன் ஆகும்
சீர் அரசை; தென் பரம்பைக்குடியில் மேய திரு
                   ஆலம்பொழிலானை; சிந்தி, நெஞ்சே!.
உரை
   
856வரை ஆர்ந்த மடமங்கை பங்கன் தன்னை; வானவர்க்கும்
                       வானவனை; மணியை; முத்தை;
அரை ஆர்ந்த புலித்தோல் மேல் அரவம் ஆர்த்த
          அம்மானை; தம்மானை, அடியார்க்கு என்றும்;
புரை ஆர்ந்த கோவணத்து எம் புனிதன் தன்னை;
                   ந்துருத்தி மேயானை; புகலூரானை;
திரை ஆர்ந்த தென் பரம்பைக்குடியில் மேய திரு
                ஆலம்பொழிலானை; சிந்தி, நெஞ்சே!.
உரை
   
857விரிந்தானை; குவிந்தானை; வேதவித்தை; வியன் பிறப்போடு
                        இறப்பு ஆகி நின்றான் தன்னை;
அரிந்தானை, சலந்தரன் தன் உடலம் வேறா; ஆழ்கடல்
             நஞ்சு உண்டு இமையோர் எல்லாம் உய்யப்
பரிந்தானை; பல் அசுரர் புரங்கள் மூன்றும் பாழ்படுப்பான்,
                      சிலை மலை நாண் ஏற்றி, அம்பு
தெரிந்தானை; தென் பரம்பைக்குடியில் மேய திரு
                   ஆலம்பொழிலானை; சிந்தி, நெஞ்சே!.
உரை
   
858பொல்லாத என் அழுக்கில் புகுவான், என்னைப் புறம் புறமே
                            சோதித்த புனிதன் தன்னை;
எல்லாரும் தன்னையே இகழ, அந் நாள், “இடு, பலி!” என்று
                            அகம் திரியும் எம்பிரானை;
சொல்லாதார் அவர் தம்மைச் சொல்லாதானை; தொடர்ந்து
                     தன் பொன் அடியே பேணுவாரைச்
செல்லாத நெறி செலுத்த வல்லான் தன்னை; திரு
                   ஆலம்பொழிலானை, சிந்தி, நெஞ்சே!.
உரை
   
859ஐந்தலைய நாக அணைக் கிடந்த மாலோடு அயன் தேடி
                      நாட(அ)ரிய அம்மான் தன்னை,
பந்து அணவு மெல்விரலாள் பாகத்தானை, பராய்த்துறையும்
                     வெண்காடும் பயின்றான் தன்னை,
பொந்து உடைய வெண்தலையில் பலி கொள்வானை,
             பூவணமும் புறம் பயமும் பொருந்தினானை,
சிந்திய வெந்தீவினைகள் தீர்ப்பான் தன்னை, திரு
                 ஆலம்பொழிலானை, சிந்தி, நெஞ்சே!.
உரை
   
860கையில் உண்டு உழல்வாரும் சாக்கியரும், கல்லாத
                          வன்மூடர்க்கு, அல்லாதானை;
பொய் இலாதவர்க்கு என்றும் பொய் இலானை;
             பூண் நாகம் நாண் ஆகப், பொருப்பு வில்லா,
கையின் ஆர் அம்பு எரி கால் ஈர்க்குக் கோலா,
     கடுந் தவத்தோர் நெடும் புரங்கள் கனல்வாய் வீழ்த்த
செய்யின் ஆர் தென் பரம்பைக்குடியில் மேய திரு
                   ஆலம்பொழிலானை; சிந்தி, நெஞ்சே!.
உரை