7.12 திருநாட்டுத்தொகை
இந்தளம்
1வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான்,
கூழை ஏறு உகந்தான், இடம் கொண்டதும் கோவலூர்,
தாழையூர், தகட்டூர், தக்களூர், தருமபுரம்,
வாழை காய்க்கும் வளர் மருகல் நாட்டு மருகலே .
உரை
   
2அண்டத்து அண்டத்தின் அப் புறத்து ஆடும் அமுதன் ஊர்
தண்டந் தோட்டம், தண்டங்குறை, தண்டலை, ஆலங்காடு,
கண்டல் முண்டல்கள் சூழ் கழிப்பாலை, கடற்கரை,
கொண்டல் நாட்டுக் கொண்டல், குறுக்கை நாட்டுக் குறுக்கையே .
உரை
   
3மூலனூர், முதல் ஆய முக்கண்ணன்-முதல்வனூர்,
நாலனூர், நரை ஏறு உகந்து ஏறிய நம்பன், ஊர்
கோலம் நீற்றன்-குற்றாலம், குரங்கணில் முட்டமும்,
வேலனூர், வெற்றியூர், வெண்ணிக் கூற்றத்து வெண்ணியே .
உரை
   
4தேங்கூரும், திருச் சிற்றம்பலமும், சிராப்பள்ளி,
பாங்கு ஊர், எங்கள் பிரான் உறையும் கடம்பந்துறை,
பூங்கூரும், பரமன் பரஞ்சோதி பயிலும் ஊர்
நாங்கூர் நாட்டு நாங்கூர், நறையூர் நாட்டு நறையூரே .
உரை
   
5குழலை வென்ற மொழி மடவாளை ஓர் கூறன் ஆம்,
மழலை ஏற்று, மணாளன் இடம் தடமால்வரைக்
கிழவன்-கீழை வழி, பழையாறு, கிழையமும்,
மிழலை நாட்டு மிழலை, வெண்ணி நாட்டு மிழலையே .
உரை
   
6தென்னூர், கைம்மைத் திருச் சுழியல்,-திருக்கானப்பேர்,
பன் ஊர் புக்கு உறையும் பரமர்க்கு இடம், பாய் நலம்
என் ஊர் எங்கள் பிரான் உறையும் திருத் தேவனூர்,
பொன்னூர் நாட்டுப் பொன்னூர், புரிசை நாட்டுப் புரிசையே .
உரை
   
7ஈழ நாட்டு மாதோட்டம், தென்நாட்டு இராமேச்சுரம்,
சோழ நாட்டுத் துருத்தி, நெய்த்தானம், திருமலை,
ஆழி ஊர் அளநாட்டுக்கு எல்லாம் அணி ஆகிய
கீழையில், அரனார்க்கு இடம் கிள்ளி குடி அதே .
உரை
   
8நாளும் நன்னிலம், தென் பனையூர், வட கஞ்சனூர்,
நீள நீள் சடையான் நெல்லிக்காவு, நெடுங்களம்,
காள கண்டன் உறையும் கடைமுடி, கண்டியூர்,
வேளார் நாட்டு வேளூர், விளத்தூர் நாட்டு விளத்தூரே .
உரை
   
9தழலும் மேனியன், தையல் ஓர்பாகம் அமர்ந்தவன்,
தொழலும் தொல்வினை தீர்க்கின்ற சோதி சோற்றுத்துறை
கழலும் கோவை உடையவன், காதலிக்கும்(ம்) இடம்
பழனம், பாம்பணி, பாம்புரம், தஞ்சை, தஞ்சாக்கையே .
உரை
   
10மை கொள் கண்டன், எண்தோளன், முக்கண்ணன், வலஞ்சுழி
பை கொள் வாள் அரவு ஆட்டித் திரியும் பரமன், ஊர்
செய்யில் வாளைகள் பாய்ந்து உகளும் திருப் புன்கூர், நன்று
ஐயன் மேய பொழில் அணி ஆவடுதுறை அதே .
உரை
   
11பேணி நாடு அதனில்-திரியும் பெருமான் தனை,
ஆணையா அடியார்கள் தொழப்படும் ஆதியை,
நாணி, ஊரன்-வனப்பகை அப்பன், வன் தொண்டன்-சொல்
பாணியால் இவை ஏத்துவார் சேர் பரலோகமே .
உரை