7.71 திருமறைக்காடு
காந்தாரம்
1யாழைப் பழித் தன்ன மொழி மங்கை ஒருபங்கன்,
பேழைச் சடை முடி மேல் பிறை வைத்தான், இடம் பேணில்
தாழைப் பொழில் ஊடே சென்று பூழைத்தலை நுழைந்து
வாழைக்கனி கூழைக்குரங்கு உண்ணும் மறைக்காடே.
உரை
   
2சிகரத்து இடை இள வெண்பிறை வைத்தான் இடம், தெரியில்
முகரத்து இடை முத்தின்(ன்) ஒளி பவளத்திரள், ஓதம்,
தகரத்து இடை தாழைத்திரள் ஞாழல்-திரள் நீழல்,
மகரத்தொடு சுறவம், கொணர்ந்து எற்றும் மறைக்காடே.
உரை
   
3அங்கங்களும் மறை நான்கு உடன் விரித்தான் இடம் அறிந்தோம்
தெங்கங்களும் நெடும் பெண்ணையும் பழம் வீழ் மணல் படப்பை,
சங்கங்களும் இலங்கு இப்பியும் வலம்புரிகளும் இடறி,
வங்கங்களும் உயர் கூம்பொடு வணங்கும் மறைக்காடே.
உரை
   
4நரை விரவிய மயிர் தன்னொடு பஞ்ச(வ்) வடி மார்பன்,
உரை விரவிய உத்தமன், இடம் உணரல்(ல்) உறு, மனமே!
குரை விரவிய குலை சேகரக் கொண்டல்-தலை விண்ட
வரை புரைவன திரை பொருது இழிந்து எற்றும் மறைக்காடே.
உரை
   
5சங்கைப் பட நினையாது எழு, நெஞ்சே, தொழுது ஏத்த!
கங்கைச் சடைமுடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை
அங்கக் கடல் அரு மா மணி உந்திக் கரைக்கு ஏற்ற,
வங்கத்தொடு சுறவம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே.
உரை
   
6அடல் விடையினன், மழுவாளினன், அலரால் அணி கொன்றைப்
படரும் சடைமுடி உடையவர்க்கு இடம் ஆவது பரவைக்-
கடல் இடை இடை கழி அருகினில் கடி நாறு தண் கைதை
மடல் இடை இடை வெண்குருகு எழு மணிநீர் மறைக்காடே.
உரை
   
7முளை வளர் இளமதி உடையவன், முன் செய்த வல்வினைகள்-
களை களைந்து எனை ஆளல்(ல்) உறு கண்டன், இடம் செந்நெல்
வளை விளைவயல் கயல் பாய்தரு குண, வார் மணல், கடல் வாய்
வளை வளையொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே.
உரை
   
8நலம் பெரியன, சுரும்பு ஆர்ந்தன, நம்கோன் இடம் அறிந்தோம்;
கலம் பெரியன சாரும் கடல் கரை பொருது இழி கங்கைச்-
சலம் புரி சடைமுடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை
வலம் புரியொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே.
உரை
   
9குண்டாடியும் சமண் ஆடியும் குற்று உடுக்கையர் தாமும்
கண்டார் கண்ட காரணம்(ம்) அவை கருதாது கைதொழுமின்-
எண் தோளினன், முக்கண்ணினன், ஏழ் இசையினன், அறுகால்
வண்டு ஆடு தண் பொழில் சூழ்ந்து எழு மணிநீர் மறைக்காடே!
உரை
   
10பார் ஊர் பல புடை சூழ் வளவயல் நாவலர் வேந்தன்
வார் ஊர் வன முலையாள் உமை பங்கன் மறைக்காட்டை
ஆரூரன தமிழ்மாலைகள் பாடும்(ம்) அடித்தொண்டர்
நீர் ஊர் தரு நிலனோடு உயர் புகழ் ஆகுவர், தாமே.
உரை